Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'அரசமைப்பு சாசனத்தின் முகப்புரை' - அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இணையவழியில் உரையாடல் - தினமணி

   


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு குழுவாக இணைந்து 'அரசமைப்பு சாசனத்தின் முகப்புரை' என்ற தலைப்பில் இணையவழியில் உரையாடல் ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆசிரியர்கள் உரையாற்றுவதை கவனிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டனர். அதுபோன்ற நிகழ்வை தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் ஒருங்கிணைத்து நடத்தும் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் எனக்கு நினைவூட்டி, ‘அந்த நிகழ்வில் நீங்கள் கட்டாயம் கலந்துகொண்டு ஆசிரியர்கள் பேசியதன் அடிப்படையில் கருத்துக்கூற வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டார்

அந்த நிகழ்வுக்கு அவர்கள் ‘அறிவின் அருவி' எனப் பெயரிட்டு நடத்தினர். அதில் ஒன்பதுபேர் கருத்துரையாற்றினார்கள். அந்த நிகழ்வுக்கு ஒருவர் தலைமை வகித்தார். ஒருவர் வழிகாட்டியாக அந்த நிகழ்வில் பங்கேற்றார். பொதுவாக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும்போது இயல்பாகப் பேசாமல் அலங்காரமாக பேச்சைத் தயாரித்து ஒரு செயற்கை முறையில் பேசுவார்கள்; எங்கு சென்றாலும் ஒரே மாதிரியாக இருக்கும் பொதுப்பள்ளி நிகழ்வுகள்.இந்த நிகழ்வு எனக்கு பல வியப்புகளை அளித்தது. அரசமைப்புச் சாசனம் ஒரு கடினமான தலைப்பு; அதை இந்த ஆசிரியர்கள் கையாண்ட விதம், பேசிய முறை இந்த இரண்டையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். இயல்பாக அனைவருக்கும் புரியும் எளிய மொழியில் பேசி, அந்த முகப்புரையில் இருந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கியது நம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது இருந்த பார்வையை மாற்றியமைத்தது. ஆற்றல் வாய்ந்த, சமூகக் கண்ணோட்டம் கொண்ட ஆசிரியர்களாக, உணர்வுபூர்வமாக செயல்படக்கூடிய ஆசிரியர்கள் நம் பள்ளிகளில் இருக்கிறார்கள். 

இவர்களை நாம் முறையாகப் பயன்படுத்தினால் மிகப் பெரிய மாற்றத்தை நம் பள்ளிக் கல்வியில் உருவாக்கலாம் என்பதை அந்த நிகழ்வு எனக்குள் ஏற்படுத்தியது. பேசியவர்கள் பள்ளி ஆசிரியர்கள், பேசிய பொருள் அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரை. இந்த நிகழ்வை அப்படியே ஒவ்வொரு பள்ளியிலும் எல்லா மாணவர்களையும் வைத்து நடத்தினால், ஓராண்டுக்குள் நம்மை இந்தியக் குடிமக்களாக வழிநடத்தும் சாசனத்தை மக்கள் சாசனமாக மாற்ற அனைத்துப் பள்ளி மாணவர்களையும் தயார் செய்து விடலாம் என்ற பெரு நம்பிக்கை பிறந்தது.

 இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அந்த முகப்புரையை மாணவர்களைக் கொண்டு படிக்கப் பழக்கினால், நாம் இந்தியக் குடிமக்களாகச் செயல்பட நம் பொறுப்புகள் என்ன என்று தெரிந்துகொண்டு பொறுப்புமிக்கவர்களாக மாறிவிடுவார்கள் ஒட்டுமொத்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது. இந்த நிகழ்வில் ஒரு அதிகாரம் மிக்க உயர் அதிகாரி கலந்திருந்தால் இதை தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒரு கலாசாரமாக மாற்றியிருக்கலாமே என்று எண்ணத் தோன்றியது.

அடுத்து இந்த ஆசிரியர்கள் பேசும்போது, அந்த முகப்புரையை ஒரு சட்டக் கண்ணோட்டத்துடனோ அல்லது அரசியல் கண்ணோட்டத்துடனோ விமர்சிக்காமல் சமூகக் கண்ணோட்டம் கொண்டு விளக்கியதால் மிக எளிதாக அனைவரையும் தொடும் மொழியில் பேசியதால் அதன் வீச்சு என்பது உச்சத்தில் இருந்தது. இவர்களால் சமூகத்தையும் அவர்களின் மாணவர்கள் மூலம் தொட முடியும் என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் அந்த கருத்துப் பகிர்வுக்கு அரசமைப்புச் சாசன முகப்புரையில் எடுத்த வரையறைகள் என்பது சமத்துவம், மக்களின் மாண்பு, இந்தியராக ஒற்றுமையுடன் இருத்தல் சமூக நீதி, பொருளாதார நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை போன்றவைதான். 

அந்த நிகழ்வுக்கு கவனிக்க அழைக்கப்பட்ட என்னை, இந்த நிகழ்வைப் பற்றிக் கருத்துக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இந்திய அரசமைப்புச் சாசனம் உருவாகியபோது ஓர் ஆலோசகராகவும், இந்திய அரசமைப்புச் சாசனம் உருவானபிறகு அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்தும் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதிய கிரன்வில் ஆஸ்டின் கூறியது எனக்கு நினைவுக்கு வந்தது. அதை அந்த நிகழ்வில் நினைவுபடுத்தினேன். 

இந்திய அரசமைப்புச் சாசனம் ஒரு மக்களுக்கான சமூக சாசனம். இந்த மகா சாசனம் மக்களிடம் எடுத்துச் சென்று முறையாக விளக்கப்பட்டால், சமூகத்தில் மிகப் பெரிய புரட்சியையே ஏற்படுத்திவிடும் என்றார். ஆனால், அந்தச் செயல் இன்றுவரை நடைபெறவில்லை. ஆகையால்தான் அண்மைக்காலமாக அரசமைப்புச் சாசனத்தை மக்கள் சாசனமாக்குவோம் என்று ஒரு பெரு முயற்சியை முன்னெடுத்து அதையே ஓர் இயக்கமாக்க முனைந்து வருகின்றன பல சமூக இயக்கங்கள். இது என் நெடுநாள் கனவாக இருந்த காரணத்தால், இந்தப் பணியில் என்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்.

இந்திய அரசமைப்புச் சாசனம் அரசாங்கம் எப்படி அமைத்துச் செயல்பட வேண்டும் என்றும் மட்டும் கூறவில்லை; அதன்மூலம் எப்படிப்பட்ட சமூகம் இந்தியத் திருநாட்டில் உருவாக வேண்டும் என்றும் அதை எப்படி உருவாக்க வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது. மகாத்மா காந்தியின் கனவான சர்வோதய சமூகம் உருவாக அனைவருக்கும் சமத்துவம், அவருக்கும் சமூக, பொருளாதார அரசியல் நீதி கிடைக்க அரசும் சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. 

அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. மக்கள் இந்தியக் குடிமக்களாக, இந்தியராக, ஒற்றுமையுடன், ஒருமைப்பாட்டுடன் சகோதர உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. மற்றொரு அடிப்படையான கூறு பொதுமக்களின் மாண்பை உறுதி செய்தல் என்பது. இந்திய குடிமக்களின் சுயமரியாதை, கண்ணியம் காக்க அரசும் செயல்பட வேண்டும்; மக்களும் செயல்பட வேண்டும்.


ஆனால், இன்றுவரை இவற்றை மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறோமா என்று கேள்வி கேட்டால், ஆம், என்று எந்த இடத்திலிருந்தும் பதில் வராது. ஒரு முகமதியராக வாழ குரான் பேசப்படும் அளவுக்கு, ஒரு கிறிஸ்தவராக வாழ பைபிள் பேசப் படும் அளவுக்கு, ஒரு ஹிந்துவாக வாழ பகவத்கீதை பேசப்படும் அளவுக்கு இந்தியக் குடிமக்களாக வாழ இந்த அரசமைப்புச் சாசனம் பேசுபொருளாக ஆகவில்லை என்பதுதான் நாம் சந்திக்கும் எதார்த்தம்.


இந்தியாவில் மிக முக்கியமானது எது? இந்தியா என்ற நாடுதான். அதுதான் பிரதானமானது. அந்த நாட்டை உருவாக்கி, அதில் மக்களை மேம்பட வைக்க வேண்டும் என்றால் இந்தியர்களாகிய நாம் இந்தியர்களாக இணைய வேண்டும். இன்று அப்படி மக்களை இணைப்பதற்குப் பதிலாகப் பிரிப்பதையே தொழிலாகக் கொண்டு செயல்படும் அரசியலைத்தான் நாம் பார்க்கிறோம். பிரித்தலில் செயல்படும் அரசியலை, இணைத்தலில் கொண்டுசெல்ல, ஒரு புது விழிப்புணர்வும், செயல்பாடும் சமூகத்தில் கட்டமைக்கப்பட வேண்டியுள்ளன.


நாம் இன்று இந்தியராக சட்டபூர்வமாக இருக்கிறோம்; உணர்வுபூர்வமாக இந்தியராக வாழவில்லை. காரணம், அப்படி நாம் பிரிக்கப்பட்டுள்ளோம்-நம் நாட்டில் நடைபெறும் கட்சி அரசியலால். இந்த பிரிப்பு சிலருக்கு வாழ்வளிக்கிறது; பலருக்கு ஏக்கத்தை உருவாக்கியுள்ளது; இந்த நிலை மாற நமக்கு வழிகாட்டுவது நமது அரசமைப்புச் சாசனம்தான்.


அதை இன்று பள்ளி, கல்லூரி, ஊடகங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் என அனைத்துத் தளங்களிலும் எடுத்துச் சென்று அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், நம்மால் பொறுப்புமிக்க குடிமக்களை உருவாக்க முடியும். பொறுப்புமிக்க குடிமக்கள் பொறுப்புமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவார்கள்; பொறுப்புமிக்க சமுதாயத்தில் ஒரு பொறுப்புமிக்க அரசியல் உருவாகும்; பொறுப்புமிக்க அரசியலிலிருந்து பொறுப்புமிக்க அரசு உருவாகும்; பொறுப்புமிக்க ஆளுகை நிகழும், அந்த பொறுப்புமிக்க ஆளுகையில்தான் பொறுப்புமிக்க நிர்வாகம் நடைபெறும்
எனவே, நமது பணி ஒரு நற்சமுதாயத்தை உருவாக்குவது. அதை ஆசிரியர்களாகிய நம்மிடம் உருவாகி, நம் மாணவர்கள் மூலம் குடும்பங்களில் உருவாகி, நல்ல குடும்பங்கள் நல்ல சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும். அதுதான் நம் லட்சியமாக இருக்க வேண்டும். அந்த லட்சிய சமுதாயத்தை உருவாக்க பொறுப்புமிக்க ஆசிரியர்களாக நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் நம் பள்ளிகளில் செயல்படும்போது மிகப் பெரிய புரட்சிகர மாற்றங்களை உருவாக்க முடியும் எனக் கூறி என் ஆலோசனையை வழங்கி நிறைவு செய்தேன்.



இந்த நிகழ்வை ஒரு ஐந்து ஆறு ஆசிரியப் பெருமக்கள் இரண்டு மணி நேரம் செலவு செய்து அரசமைப்புச் சாசனம் என்பதுதான் மக்கள் சாசனம், அது நாம் எப்படி பொறுப்புமிக்க குடிமக்களாக வாழ்ந்து உரிமைகளுடன் பொறுப்புமிக்க சமூக வாழ்வை உருவாக்க வேண்டும் என்று ஒவ்வொரு கிராம சபையிலும், ‘அறிவின் அருவி'யை நடத்தினால் மிகப் பெரும் விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. அதற்கு நம் ஆசிரியப் பெருமக்கள் பள்ளிச் சுவர்களைக் கடந்து சமூகத்துக்குள் ஊடுருவத் தயாரான சமூக மனிதர்களாக மாற வேண்டும்.


இந்த நிகழ்​வில் பேசிய இணைந்​தி​ருந்​த​வர்​கள் ஏதோ ஒரு நிலை​யில் சமூ​கச் சிந்​தனை கொண்டு ஒரு சமூக இயக்​கத்​தில் செயல்​பட்​டுக் கொண்​டி​ருக்​கக்​கூ​டி​ய​வர்​கள், இவர்​க​ளின் எண்​ணிக்கை கூடி​னால் மிகப் பெரிய சமூக மாற்​றத்தை ஆசி​ரி​யர்​கள் மூலம் நம் சமு​தா​யத்​தில் பார்க்க முடி​யும். அப்​ப​டிப்​பட்ட லட்சிய ஆசிரியர்​களை உரு​வாக்​கு​வ​து​தான் இன்​றைய தேவை.
 
 
 

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive