Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

ரிஷபம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

கடின உழைப்பாளிகளே! சந்திரன் உங்களது ராசிக்கு 9-ம் வீட்டில் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகளெல்லாம் முடிவடையும்.

அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.     

உங்களுடைய சப்தமாதிபதி செவ்வாயும், ராசிநாதன் சுக்ரனும் 10-ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டுப் பிறப்பதால் வருடத்தின் தொடக்கமே கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்ப்புகளெல்லாம் குறையும். புது வேலை, பொறுப்புகளெல்லாம் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகை கைக்கு வரும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். சமையலறையை சிலர் நவீனமாக்குவீர்கள். மாதத் தவணை முறையில் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ஆனால் வருடப் பிறப்பு முதல் 16.01.2017 வரை செவ்வாயும், 27.01.2017 வரை ராசிநாதன் சுக்ரனும் கேதுவின் பிடியில் சிக்கியிருப்பதால் தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு, அசதி, சோர்வு, கை, கால் வலி வந்துப் போகும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயை சனி நேருக்கு நேர் பார்க்கயிருப்பதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு தலைச்சுற்றல், மூட்டு வலி, முன்கோபம், வேலைச்சுமை வந்துப் போகும். அவருடன் வீண் விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.  

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்யோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்துச் செல்லும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவீர்கள்.

ஜுலை 27-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்துச் செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்களெல்லாம் வலிய வந்துப் பேசுவார்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.   


01.09.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்யோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். உறவினர்கள் தேடி வருவார்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டில் மறைந்து சகட குருவாக வருவதால் சின்ன சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகளை நினைத்து அவ்வபோது தூக்கம் குறையும். உங்களை நீங்களே குறைந்து மதிப்பீடாதீர்கள். வங்கி கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என மேலாளரை கலந்தாலோசித்து காசோலை தருவது நல்லது. சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். பழைய கடனை நினைத்து அவ்வபோது கலங்குவீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் பணம், நகைகளையெல்லாம் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைத்து செல்வது நல்லது. வீட்டில் களவுப்போக வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் ஈகோவால் பிரிவுகள் வரக்கூடும். எனவே அனுசரித்து போகப் பாருங்கள். உடல் ஆரோக்யத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது. நோய் தொற்று வர வாய்ப்பிருக்கிறது.

இந்தாண்டு முழுக்க சனி 7-ல் நின்று கண்டகச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தை தவிர்க்கப்பாருங்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு மனைவியுடன் விவாதங்களில் ஈடுபடாதீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கவன மறதியால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட்டு நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பழகுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். சின்ன சின்ன நட்டங்கள் இருக்கும். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். பிப்ரவரி, ஜீலை, ஆகஸ்டு மாதங்கள் உங்களுக்கு ஆதாயம் தரக்கூடியதாக இருக்கும். உணவு, மருந்து, கட்டுமானப் பொருட்கள், நெல் மண்டி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் வெடிக்கும். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். வேலையாட்களும் உங்களுடைய கஷ்ட, நஷ்டங்களைப் புரிந்துக் கொள்ளாமல் பொறுப்பற்று நடந்துக் கொள்வார்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். மார்ச், ஆகஸ்டு, செப்டாம்பர் மாதங்களில் கடையை உங்கள் ரசனைக் கேற்ப அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் கொஞ்சம் வேலைச்சுமை, டென்ஷன் இருக்கத்தான் செய்யும். உயரதிகாரி உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பார். ஜனவரி, ஆகஸ்டு, நவம்பர் மாதங்களில் புது வாய்ப்புகள் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் போராடி வேலை வாங்க வேண்டி வரும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் வரை போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வேலையும் அமையும். சிலருக்கு திருமணமும் முடியும். இந்தாண்டு முழுக்க சனியின் போக்கு சாதகமாக இல்லாததால் காதலில் ஏமாற்றமும், உயர்கல்வியில் தேக்கமும், மந்தமும் ஏற்படும். பெற்றோருடன் மோதிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள்.

மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேர்வு நேரத்தில் படித்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். மந்தம், மறதி வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கல்வி பிரிவில் போராடி இடம் பிடிப்பீர்கள்.

கலைத்துறையினரே! மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பெரிய நிறுவனத்திற்கென காத்திருக்காமல் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தப் பாருங்கள்.

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நிம்மதியற்றப் போக்கை தந்தாலும், இடம், பொருள், ஏவலறிந்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading