Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

மிதுனம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

வாரி வழங்கும் வள்ளல்களே! உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சுக்ரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் 2017-ம் ஆண்டு பிறப்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும்.
உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். நீண்ட நெடுங்காலமாக தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.

ஆனால் எட்டாவது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

வருடப்பிறப்பு முதல் 8-ம் தேதி வரை உங்களுடைய ராசிநாதனான புதன் சனியுடன் சேர்ந்து ஆறாம் வீட்டில் மறைந்திருப்பதால் அலர்ஜி, யூரினரி இன்பெக்ஷன், நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு வந்து போகும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உள்ள காலக்கட்டத்தில் செவ்வாயை சனி பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள், பழைய கடனை நினைத்த கவலைகள், வீண் டென்ஷன், சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும்.

25.7.2017 வரை உங்கள் ராசிக்கு 9-ல் கேது நிற்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, பித்தப் பையில் கல், சிறுநீரக கோளாறு வந்துப் போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர் ராஜ்ஜிய சொத்து சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்போது தலையிட வேண்டாம். அநாவசியச் செலவுகளை கட்டுபடுத்தப் பாருங்கள். ஆனால் மூன்றாம் இடத்தில் ராகு இருப்பதால் புது முயற்சிகள் பலிதமாகும். இளைய சகோதர வகையில் ஆதரவு பெருகும். வேற்றுமதம், மாற்றுமொழிப் பேசுபவர்களால் உங்களது வாழ்க்கை தரம் ஒரு படி உயரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். சிறுக, சிறுக சேமித்து வைத்த பணத்தில் வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.

ஜுலை 26-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் தொடர்வதால் வீண் விரையம், அலைச்சல், பொருள் இழப்புகள் வந்து போகும். சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். பண விஷயத்திலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்க வேண்டாம். வாகனத்தை இயக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா, ப்ரேக் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். வீண் பழிக்கு ஆளாவீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வாய்ப்பிருக்கிறது. பல் மற்றும் காது வலி வந்துப் போகும். காலில் அடிப்படக்கூடும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் சப்தம-ஜுவனாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்ப்புகள் அதிகமாகும். இனம்புரியாத கவலைகள் வந்துப் போகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அவருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். புதியவர்களை நம்பி பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும்.

ஆனால் 02.09.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நுழைவதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும். மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடி வரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்த சிலர் சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.

பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தங்க ஆபரணங்கள், இரத்தினங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்குச் சென்று முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்துவீர்கள். அடிக்கடி தொந்தரவு தந்த வாகனம் இனி சீராக ஓடும். சொந்த-பந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

15.12.2017 வரை சனி பகவான் 6-ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிர்ப்புகள் குறையும். தொலைநோக்குச் சிந்தனை அதிகமாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிவீர்கள். அதிக வட்டி கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்சனைக்கு பேச்சு வார்த்தை மூலமாக சுமூக தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள்.

ஆனால் 16.12.2017 முதல் சனி 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் மனம் விட்டுப் பேசி முடிவுகளெடுப்பது நல்லது. மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி வந்துப் போகும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட நிபுணர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! வட்டிக்கு வாங்கி கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டீர்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் கூடி வரும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். கன்ஸ்டக்ஷன், பதிப்பகம், கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஜீவல்லரி வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்சனை செய்தார்களே! இனி பணிந்து வருவார்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரரும் மீண்டும் வந்திணைவார்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் உங்களின் உத்யோகஸ்தானாதிபதி குருபகவான் சாதகமாவதால் பணிகளை முடிப்பதிலிருந்த தேக்க நிலை மாறும். வேலைச்சுமையும் குறையும். உங்களை கசக்கிப் பிழிந்து, உருகுலைய வைத்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். வருட தொடக்கத்திலேயே பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

கன்னிப் பெண்களே! அடிக்கடி முகம் சோர்ந்து காணப்பட்டீர்களே, ஏதோ இனந்தெரியாத கவலை உங்களை வாட்டியதே, இனி அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். காதல் கைக்கூடும். தோழிகளுக்கெல்லாம் திருமணமாகி விட்டதே! நமக்கு இன்னும் ஆகவில்லையே என வேதனைப்பட்டீர்களே! இனி கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். தாயாருடன் அடிக்கடி மனஸ்தாபங்கள் வந்ததே! அந்த நிலை மாறும். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். கவிதை, கட்டுரை, இலக்கியப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி பரிசு, பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்கல்வியில் கூடுதல் மதிப்பெண் எடுத்து பெற்றோரின் தலை நிமிரும்படியாக செய்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல கோர்ஸில் சேருவீர்கள். அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.       

கலைத்துறையினர்களே! மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் ஆதாயமுண்டு. விருதுகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.

இந்த 2017-ம் ஆண்டு உங்களுக்கு ஒருபக்கம் பரபரப்பான வாழ்க்கையைத் தந்தாலும், பிற்பகுதியில் சாதனையாளராகவும் மாற்றும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading