Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீதிநெறி போதனையும், விளையாட்டும் மறக்கப்பட்டதால் வந்த வினை

 
             பள்ளி மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி வழிகாட்டு வகுப்புகளை நடத்தாமை, விளையாட்டு உள்ளிட்ட உடல்சார் நடவடிக்கைகளை ஊக்குவிக்காமை மற்றும் தேவையான பெற்றோர் கவனிப்பின்மை ஆகியவையே மாணவர்களை தடம் மாற செய்வதாக, நிபுணர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
 
                இதனால் மாணவர்கள் பிறரை கொலை செய்வோராகவும் அல்லது தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வோராகவும் மாறிவிடுகின்றனர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சமூக அளவில் பொது சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதும், சோசியல் மீடியாவின் செல்வாக்கு, பாடங்களை முடிப்பதில் மட்டுமே ஆசிரியர்கள் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட காரணிகளும், மாணவர்களின் உளவியலை பாதிக்கின்றன.ஒரு மனிதனுக்கான உள்மன நெறிமுறை கட்டமைப்பு, அவனது ஏழாவது வயதில்தான் வலிமைப்பெற தொடங்குகிறது. 
 
                எனவே, இந்தப் பருவத்தில், குழந்தைகளின் நெறிமுறை கட்டமைப்பை மேம்படுத்த, பெற்றோரும், ஆசிரியரும் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.ஒரு குழந்தை தனது 8 அல்லது 9 வயதுவரை, தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் மற்றும் பண்பு நலன்களை உள்வாங்கிக் கொள்ளும் மற்றும் அதற்குப் பிறகான வயதில் அவற்றை பகுப்பாய்வு செய்யத் தொடங்கும். இன்றைய விஞ்ஞான காலகட்டத்தில் ஒரு மாணவரின் நெறிமுறை கட்டமைப்பை தீர்மானிப்பதில் பள்ளிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், ஒரு வேதனை தரும் விஷயம் என்னவெனில், பள்ளிகளும், பெற்றோர்களும், தங்களின் குழந்தைகளை குழந்தைகளாகப் பார்க்காமல், வெறுமனே பாடத்திட்டத்தை மனப்பாடம் செய்யும் எந்திரங்களாக கையாள்கிறார்கள் என்பதுதான்.இந்த விஷயத்தில் ஆசிரியர்களைவிட பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம். ஏனெனில், ஆசிரியர்களுக்கு அனைத்து மாணவர்களையும் கவனிக்க போதிய அவகாசம் இருக்காது. தங்களின் குழந்தைகளை தாங்கள்தான் கவனிக்க வேண்டும். Formative age எனப்படும் முக்கியமான காலகட்டத்தில், குழந்தைகள் எடுக்கும் மதிப்பெண்களைவிட, நெறிமுறை மேம்பாடு மற்றும் மென்திறன்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.சமீபத்தில், ஒரு பொறியியல் கல்லூரி முதல்வர், கல்லூரி வளாகத்திற்குள்ளேயே, மாணவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சில காலங்களுக்கு முன்னர், ஒரு ஆசிரியை, 9ம் வகுப்பு மாணவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
 
                 பல ஆண்டுகளுக்கு முன்னர், அண்ணாமலை பல்கலையில் ஜான்டேவிட் என்ற மாணவர், நாவரசு என்ற மாணவரை ராகிங் மற்றும் ஓரினச் சேர்க்கை தொடர்பாக கொலை செய்தார். மேலும், ராகிங் தொடர்பான பல பரவலான புகார்கள் உண்டு. மேலும், இன்று சென்னை போன்ற நகரங்களில் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் செய்யும் அட்டாகசத்திற்கும், பொது இடங்களில் ஆயுதங்களோடு மோதிக் கொள்வதற்கும் அளவில்லாமல் போய்க்கொண்டுள்ளது.இன்னொரு கோணத்தில் பார்த்தால், சாதாரண சில்லறை விஷயங்களுக்காக, மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் இன்று அதிகரித்துள்ளன.உளவியல் ரீதியாக, இதை வேறுவிதமாக சொல்லலாம். அதாவது, உள்கோபம் மற்றும் வெளிக்கோபம். உள்கோபத்தால் பாதிக்கப்படுபவர்கள் மாணவிகள். அவர்களால் தங்களின் கோபத்தை ஆக்ரோஷமாக வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆனால் மாணவர்கள் வெளிக்கோபத்தால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அதை வன்முறை வடிவில் வெளிப்படுத்துகிறார்கள்.பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு பருவத்தின் பரிணாமத்தையும் கவனத்துடன் கண்டுணர்ந்து, பொறுப்புணர்வுடன் செயல்படுவது முக்கியம். தங்களின் கடமையை ஆசிரியர்களின் மீது தூக்கிப்போட்டுவிட்டு ஒதுங்குதல் கூடாது. 
 
 
               அதனால் பாதிப்பு அவர்களின் பிள்ளைகளுக்குத்தான்.நமது கல்வித்திட்டம் ஒரு மனிதனின் அறிவாற்றலோடு சேர்த்து, அவனின் மனஆற்றலையும் மேம்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஒருவருக்கு வாழ்வின் உன்னதத்தை கற்றுக்கொடுப்பதாய் கல்வி அமைய வேண்டும். ஆனால், நடைமுறை கல்வித்திட்டமானது, மாணவர்களை மதிப்பெண் பெறக்கூடிய இயந்திரங்களாய் மட்டுமே மாற்றியுள்ளது. எனவே, பள்ளிகளில் நெறிமுறை தொடர்பான போதனை வகுப்புகளைத் தொடங்க வேண்டும். மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.கல்வி நிறுவனங்களில் பல்வேறு வகையான விளையாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். விளையாட்டு நடவடிக்கைகள், வன்முறையில் செல்லத்தக்க ஆற்றலை வேறு வழிகளில் திருப்பி, ஒரு மனிதனை ஆற்றுப்படுத்துகிறது. மேலும், வாழ்க்கை என்பது நல்ல இலக்கு அடிப்படையிலானது மற்றும் அதை நோக்கியே நமது அனைத்து செயல்களும் இருக்க வேண்டும் என்று போதிக்கப்பட வேண்டும்.இன்றைய நிலையில், ஒருவரின் விளையாட்டு என்பது கணிப்பொறி மற்றும் செல்போன் ஆகியவற்றில் கேம் விளையாடுவதாக சுருங்கி விட்டது. குழந்தைகள் தங்களின் சக வயது குழந்தைகளுடன் விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் குழந்தைகளாக இருப்பார்கள். இல்லையெனில், அவர்கள் மனதளவில் முதிர் குழந்தைகளாக மாறிவிடுவார்கள் மற்றும் தான் செய்வதுதான் சரி என்ற மனோநிலைக்கும் தள்ளப்படுவார்கள்.ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் வீடுதான். பெற்றோர்தான் அதன் முதல் ஆசிரியர்கள். எனவே, அனைத்தும் அங்கிருந்துதான் தொடங்குகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive