கொடைக்கானலில் உள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைத் கண்டித்து
புதன்கிழமை சார்நிலைக் கருவூல அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொடைக்கானல் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகள் 120 உள்ளன. இதில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனைத்
தொடர்ந்து ஆசிரியர்கள் ஊதியம் உடனடியாக வழங்கக்கோரி, சார்-நிலைக் கருவூலம்
முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி சங்கத் தலைவர் குன்வர் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் சூசை ஜான், தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் கணேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை
நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஊதியம் தாமதமானது குறித்து சார்நிலைக் கருவூல அலுவலர் விஜயகுமார்
கூறியதாவது: ஆசிரியர்களின் ஊதியம் குறித்த படிவங்கள் பொதுவாக 25-ஆம்
தேதிக்குள் கொடுக்க வேண்டும். ஆனால் பல பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள்
கடந்த 31-ஆம் தேதி தான் ஊதிய படிவங்களை கொடுத்தனர். இந்த படிவங்கள் சரி
பார்க்கப்பட்டு வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதைப் பரிசீலித்த பின்னர், அந்தந்த ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளில்
ஊதியத் தொகை சேரும். ஆனால் வங்கியில் கேட்டால் இணையதளம் சரியாக வேலை
செய்யாததால் சரியான காலத்திற்குள் பணப் பரிவர்த்தனை நடைபெறவில்லை விரைவில்
இது சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...