Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே ஒரு மாணவனுக்காகவும்

ஒன்று – எட்டு அறிக்கை (ONE EIGHT PARTICULARS) என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆசிரியர்களில் பலருக்கு அடி வயிறு கலங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று ஒவ்வொரு பள்ளியும் தமது பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரத்தை உரிய கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த விவர அறிக்கைக்குதான் ONE EIGHT PARTICULARS என்று பெயர்.
        மாணவர் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் படும் வேதனை இருக்கிறதே… அப்பப்பா .. அதை சொல்லி மாளாது. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கல்வித்துறை கவலைப்படுவதில்லை. ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வார வாக்கில் அவர்களுக்கு நிரவல் என்ற முறையில் பணி மாறுதல் வழங்கப் படும். இதுவும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் எனில் இது நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இந்த மாறுதல் ஆணை வழங்கப்படும்.
வருடத்தின் மத்தியில் அல்லது வருடத்தின் இறுதியில் இப்படி மாறுதல்கள் வருமானால் அந்த ஆசிரியர்கள் என்ன பாடு பட வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களில் நோயாளிகளாக உள்ளவர்களை திடுமென புலம்பெயர்த்துவது என்பது எவ்வளவு கடினம். போக, ஆசிரியர்களும் பெற்றோர்கள் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்?
பணி மாறுதல் பெற்றுள்ள ஆசிரியர்களின் குழந்தைகளின் கல்வி என்னாவது?
இடையில் அவர்களை எப்படி இடம் மாற்றுவது? ஒருக்கால் அப்படி பணி மாறுதல் பெறும் ஆசிரியரின் குழந்தை பத்தாம் வகுப்பிலோ அல்லது பன்னிரெண்டாம் வகுப்பிலோ படிப்பதாக வைத்துக் கொள்வோம். அவனது கல்வி என்னாகும். பாதி வருடத்தில் வேறு பள்ளிக்கு புலம் பெயரும் போது படித்த பள்ளி நண்பர்களை ஆசிரியர்களை  சூழலை பிரிந்து போகிற சோகம் ஒரு குழந்தையை என்ன பாடு படுத்தும்? அது போக புதிய இடத்தில் அவன் வேறூன்றி இயல்பாக எவ்வளவு காலம் பிடிக்கும்? இது அவன் எழுதப் போகும் அரசுத் தேர்வை பாதிக்காதா? அல்லது ஆசிரியர் பிள்ளைகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்ற எண்ணமா?
மட்டுமல்ல ஒரு ஆசிரியர் இடையில் இப்படி மாறுதலில் இடம் பெயர்ந்தால் அது அவர் விட்டுப் போகும் பள்ளிக் குழந்தைகளையும் அவர் பணியேற்கச் செல்லும் பள்ளியின் குழந்தைகளையும் ஒருசேர பாதிக்காதா?
யார் வந்து விசைப் பொத்தானை அழுத்தினாலும் இயங்க இது ஒன்றும் மின் இயந்திரங்கள் அல்ல. இவை ரத்தமும் சதையுமாய் உயிர்த்தியங்கும் குழந்தைகள் ஜீவிக்கும் வகுப்பறைகள். தங்கள் ஆசிரியர் பிரிந்தால் அடுத்த நாளே அடுத்த ஆசிரியருக்காக காத்திருக்கும் இயந்திரங்கள் அல்ல. ஈரம் சுரக்கும் பிஞ்சுக் குழந்தைகள் அவர்கள். பிரிவுச் சோகம் ஒரு புறம், புதிதாய் வரும் ஆசிரியரோடு மனம் ஒத்துப் போகத் தேவைப்படும் கால அவகாசம் எல்லாமுமாக சேர்த்து அரசுத் தேர்வெழுதக் காத்திருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்காதா?
ஏதேது பற்றியோ யோசிக்கும் கல்வித்துறை இது குறித்து யோசிக்காதா? அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒடுக்கப் பட்ட ஏழைத் திரளின் குழந்தைகள்தானே, எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்ற அலட்சியமா?
அரசு பள்ளிகளுக்கு குழந்தைகள் வருவதில்லை என்பது ஒரு அரசை வேதனைப்பட வைக்க வேண்டும். எப்படிக் குழந்தைகளை கொண்டு வருவது என்று யோசிக்க வைக்க வேண்டும். சலுகைகளை வாரி இறைத்தேனும் பிள்ளைகளை தனது பள்ளிகளில் கொண்டுவந்து குவிக்க வேண்டும் அரசு. ஆயிரம் இடையூறுகளைக் கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எது காரணம் கொண்டும் பள்ளிகளை மூடக் கூடாது. ஒரே ஒரு மாணவன் இருப்பினும் அவனுக்காக பள்ளி இயங்க வேண்டும். மாணவனே இல்லை என்றாலும் பள்ளி திறந்திருக்க வேண்டும். அந்தப் பள்ளிகளுக்கு குழந்தைகளைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பை அரசு தன் தோள்களின்மீது மகிழ்ந்து சுமக்க வேணும்.
மீண்டும் ஒன்றைச் சொல்வோம்,
ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடி சாத்தியமெனில் ஒரே ஒரு மாணவனுக்காக ஒரு பள்ளியும் சாத்தியமே.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive