NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?

         அண்மையில் நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை அடையவேண்டுமெனில் அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்வது அவசியம்.

         களத்திலுள்ள ஆசிரியர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும்; ஆய்வுக்கூட்டங்கள் என்பது அரசின் முடிவுகளை ஆசிரியர்கள் மீது திணிப்பதாக இல்லாமல், அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு, அதிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.

         மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டுமெனில், நடைமுறையிலுள்ள தேர்வு முறையில் மாற்றம் தேவை என்பது ஆசிரியர்களின் கருத்து.பள்ளியில் ஓர் ஆண்டு முழுவதும் கற்ற அறிவை மூன்று மணி நேரத்தில் மதிப்பிடுவது என்பதுதான் பொதுத்தேர்வு நடைமுறையாக உள்ளது. இது முழுமையான மதிப்பீடாக இருக்கமுடியாது என்பது கல்வியாளர்களின் கருத்து. அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சி.சி.இ. என்று சுருக்கமாக அறியப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை.பள்ளிக் கல்வித்துறையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைஇந்த மதிப்பீட்டு முறை தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. மாணவர்களிடம்புதைந்து கிடக்கும் பல்வேறு வகையான திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இந்த மதிப்பீட்டு முறை பெரிதும் பயன்படுகிறது. நன்கு படம் வரையும் ஒரு மாணவர் தன் ஓவியத் திறமையைக் கொண்டு மதிப்பெண் பெறுகிறார். மரபுக் கலைகளில் ஆர்வமுடையவர்கள் தம் கலைத்திறனால் மதிப்பெண் பெறுகிறார்கள்.கைவினைக்கலை, சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, சாரணர் இயக்கும், இளம்செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் என அவரவர் ஆர்வத்திற்கேற்ப பாட இணைச்செயல்பாடுகளில் மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையோடு கல்வி கற்கின்றனர்.
இந்த மதிப்பீடு முறை மாணவர்களிடமிருந்த தேர்வு பயத்தைப் போக்கியிருக்கிறது. எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் உண்டு. இந்தப் புதிய மதிப்பீடுமுறை தனியாள் வேற்றுமைகளை கவனத்தில் கொள்வதாக இருப்பதால் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிப்பதாக உள்ளது. கல்விச் சுமையாக இல்லாமல் சுகமான ஒன்றாக மாறியுள்ளது.மேலும், மாணவர்களின் அறிவும் திறமையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அவ்வப்போது மதிப்பிடப்படுகின்றன. பாட நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடம் முடியும்போது, எஃப்.ஏ. எனப்படும் வளரறி மதிப்பீடுச் செயலபாடுகள் வாயிலாகவும், சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பீடுகள் தொகுக்கப்படுகின்றன.
அந்தப் பருவம் முடியும்போது அந்தப் பருவத்தில் கற்ற அனைத்துப் பாடங்களையும் எப்படி கற்றுள்ளனர் என்று தொகுத்தறிந்து கொள்வதற்காக தொகுத்தறி மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வாறாக மதிப்பிடுவது என்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதனால்தான் இது முழுமையான மதிப்பீடாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண் என்பது வளரறி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண் தொகுத்தறி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் வளரறி மதிப்பீடு என்பது இரு பகுதிகளாகபிரிக்கப்பட்டு ஒரு பகுதி செயல்பாடுகள் மூலமும் மற்றொரு பகுதி சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் குறைந்ததுநான்கு மதிப்பீடுகள் உண்டு. ஒரு பருவத்தில் ஒரு மாணவர் குறைந்தது நான்கு செயல்பாடுகளும் நான்கு சிறு தேர்வுகளும் முடிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்கள். ஆக மொத்தம் 40 மதிப்பெண்கள். ஒவ்வொன்றிலும் சிறந்த இரு மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
பருவம் முடிவில் 60 மதிப்பெண்ணுக்கான தொகுத்தறி தேர்வு நடைபெறும். இதில் மாணவர்களின் பிற திறமைகள் பாட இணைச்செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படுவதால் அனைவரும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர். அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்கிறது.இந்த மன நிலையோடு 9 ஆண்டுகள் கல்வி கற்ற ஒரு மாணவர் பத்தாம் வகுப்புக்கு வரும்போது அவரது மற்ற திறமைகளை கவனத்தில் கொள்ளாத வெறும்ஏட்டுக்கல்விக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுமுறை அவனிடமிருந்த தன்னம்பிக்கையை சீர்குலைத்து அவனிடம் தேர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தேர்ச்சி விழுக்காடு குறைகிறது. தேர்வில் தோல்வி அடைந்த ஒரு சிலரே விடாமுயற்சியோடு மீண்டும் வெற்றி பெறுகின்றனர். அத்தோடு படிப்பை முடித்துக்கொள்வதே பலரின் வாடிக்கையாக உள்ளது.
பள்ளிக்கல்வியில் ஒன்பது ஆண்டுகள் ஒருவித மதிப்பீட்டு முறையைப் பின்பற்றிவிட்டு திடீரென 10-ஆம் வகுப்பில் வேறு ஒரு மதிப்பீட்டு முறைக்கு மாறுவது என்பது மாணவர்களுக்கு சுமையாக உள்ளது. அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். ஓர் ஆசிரியர் என்ற முறையில் இதிலுள்ள சிக்கல்களை நன்கு உணர முடிகிறது.எனவே, பள்ளிக்கல்வித் துறை பத்தாம் வகுப்புக்கும் மற்ற வகுப்புகளுக்கு உள்ளது போல மதிப்பீட்டு முறையை மாற்றிட வேண்டும். அல்லது அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்களும் வழங்கியது போல் மற்ற பாடங்களுக்கும் செயல்படுத்தலாம். இதனால் அறிவியல் பாடத்தில் தோல்வி இல்லை என்னுமளவிற்கு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதேமுறையைப் பின்பற்றி மொழிப்பாடங்களுக்கு வாய்மொழித்தேர்வுக்கு 25 எழுத்துதேர்வுக்கு 75 எனவும், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 25 எழுத்துத் தேர்வுக்கு 75 எனவும் மதிப்பெண் நிர்ணயம் செய்து தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது காலத்தின் கட்டாயம்.தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாட நூல்களிலும் கற்பித்தல் முறைகளிலும் இந்த நூற்றாண்டுக்கேற்ற மாற்றங்களை கொண்டு வருவது எவ்வளவு அவசியமோ, அதே அளவு தேர்வுமுறையிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதும் அவசியம்.
- இரத்தின புகழேந்தி,கல்வி ஆர்வலர், தொடர்புக்குpugazhvdm@gmail.com




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive