Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 
2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 
3. அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்களுக்கு, தேசிய அளவில் பொதுவான பாடத் திட்டமும்; சமூக அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவிலான, இரு பகுதிகள் இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும். 

4. பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வுத் தோல்விகளை குறைக்க, இந்தப் பாடங்களில் உயர் தகுதி நிலை மற்றும் குறைந்த தகுதி நிலை என, இரு தேர்வுகள் நடத்தப்படும்.
 5. பாடநுாலில் உள்ளதை மட்டுமின்றி விரிந்த விழிப்புணர்வு, புரிதல், கற்றதன் முழுமைத் தெளிவு மற்றும் உயர்வகை சிக்கல்களுக்கு விடைதேடும் திறன் போன்றவற்றை கணிப்பிடும் வகையில் தேர்வுமுறைகள் மாற்றப்படும்.
6. அனைத்து விதமான பள்ளிகளிலும், குறைந்தபட்சம் இருக்க வேண்டிய வசதிகளும், மாணவர்கள் பெற வேண்டிய கற்றறி அளவுகளும் உறுதி செய்யப்படும்.
7. போதிய மாணவர்களும், உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 'தொகுப்பு பள்ளிகளாக' மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். 
8. பள்ளிகளின் தரம், தலைமை, நிர்வாகம், ஆசிரியர்- திறன், தன்மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில், நாடு தழுவிய தரவரிசை தயாரிக்கப்படும். 9. ஆங்காங்கு இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் முறைகளுக்கு ஏற்ப, இப்போதைய கல்வி உரிமைச் சட்ட அணுகுமுறையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தேவையெனில், மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கென, 'மாற்றுப் பள்ளிகளை' உருவாக்க பரிந்துரைக்கப்படும். மேற்குறித்த கல்வி முறை மாற்றங்களை, 'தகுதி, சமவாய்ப்பு' என்ற அறிவுப் பார்வையில் ஏலாதவை என, ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு வகுப்பிலும், புரிதலில் உயர், சராசரி, கீழ் என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பது தெரிந்த உண்மை. வகுப்பில் உள்ள அனைவரும் தேர்வு பெற வேண்டும் என்பதும், உயர் மதிப்பெண்களுடன் பலர், தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற வேண்டும் என்பதும் இயல்பான எதிர்பார்ப்புகளே. பின்தங்கிய மாணவர்களை, தேர்வில் வெற்றி நிலைக்குக் கொண்டு வர, ஆசிரியர்கள் கடினமாக செயல்பட வேண்டும். அதேபோல, உயர்நிலை மாணவர்களின் திறமையை மிளிரச் செய்து, அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவர்களின் கடமையாகும். இந்த இரு முயற்சிகளிலும், ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஈடுபடும் போது, பல நடைமுறை சிக்கல்கள் தோன்றுகின்றன. இந்த சிக்கல்களை தீர்க்க, இதுவரை நாம் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி தரவில்லை. மாணவர்களின் கற்றறி நிலைக்கு கணிப்பீடு இல்லையெனில், பல தீமைகள் விளையும். ஆனால், கற்றறி தகுதியில், பல காரணங்களால் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை கணிப்பீடு என்ற பார்வையில், 10ம் வகுப்பை முடிப்பதற்குள், இரண்டு மூன்று ஆண்டு காலத்தை, பயனறச் செய்யும் செயல் எப்படி ஏற்புடைத்ததாகும்? பெற்றோரிடம் உதவி பெற முடியாத, பெரும்பாலான இத்தகைய குழந்தைகளின் நிலை கருதி, எட்டா-ம் வகுப்பு வரை, 'வகுப்பு நிறுத்தம் இல்லை' என்ற கொள்கை, சில ஆண்டுகளாக செயலில் இருப்பதன் பயனாக, எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் அவர்கள் பெற்றுவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டிறுதி தேர்விலும், தோல்வி பெற்றவர்களுக்கு என, எடுக்க வேண்டிய தனி முயற்சிகள் சடங்காகி, அவர்களை தேர்வுக் கோட்டுக்கு ஒவ்வொரு முறையும் துாக்கி விட்டு விடும், உண்மைக்கு சான்றுகள் தேவையில்லை. இப்போது, கல்வியறிவு இருந்தாலும் இல்லையென்றாலும், குழந்தைகளைப் பள்ளி நேரத்துக்கு முன்னும் பின்னும், தனிப்பயிற்சிக்கு அனுப்புவதே சிறந்த வழி என, பெற்றோர் நம்பத் தொடங்கி விட்டனர். பள்ளியில் ஒருவகை பயிற்சி, வீட்டுவேலை, தேர்வுகள், தனிப்பயிற்சியில் வேறொருவகை பயிற்சி, வீட்டுப்பாடம், தொடர் தேர்வுகள் - என, குழந்தைகள் தவிக்கின்றனர். வகுப்பு நிறுத்தம் எந்த வகுப்பில் இருந்தாலும் முடிவு ஒன்றே. இளமையில், இரண்டு மூன்று ஆண்டுகளை விரக்தியில் வீணடிப்பர். 10ம் வகுப்புத் தேர்வை எழுதப்போகும் எந்த மாணவனும், தன் படிப்பு காலத்தில் இந்த இழப்பைச் சந்திக்கக் கூடாது. இந்த நோக்கில், வகுப்பு நிறுத்தம் இல்லாமல் கற்பிக்கும் முறையை, நாம் செம்மைப்படுத்தியாக வேண்டும். தேர்வு மதிப்பீட்டின் நோக்கமும், தொடர்ந்து பின்தங்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளை, எப்படிக் கொடுப்பது என்பதை நோக்கியே இருக்க வேண்டும். 'கல்வி விருப் பத் தேர்வுகள்' இளம் வயதில், தீமையையே விளைவிக்கும். மாணவர்களுக்கு ஒரு பாடத்தில் விருப்பமில்லாமல் போவதற்கு, அதுவரை அந்தப் பாடத்தைக் கற்பித்த ஆசிரியரே பெரும் காரணம்; அடுத்து வரும் வகுப்புகளில் அவர்கள் விருப்பம் மாறும். மேலும், இளம்வயதில் மாணவர்கள் ஒரே பாடத்தில் சிறந்து விளங்குவதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களின் அறிவை, -குறிப்பிட்ட அளவுக்கு பெற்றிருப்பதே அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாயிருக்கும். பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களுக்கு, இரண்டு தகுதிநிலைத் தேர்வுகள் வைக்கும் முறை தோல்வியையே காணும். தொழிற்கல்விக்கு என, மாணவர்களை நாம் துரத்தக் கூடாது. இந்த முயற்சியில் நாம் முன்னமே தோற்றுள்ளோம். எம்.பில்., வகுப்பில் இப்படித் தான், 'முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே, பிஎச்.டி., ஆய்வில் சேரலாம்' என்ற முறை தோல்வியைச் தழுவியிருக்கிறது. அறிவியல், கணிதம், ஆங்கிலம் மூன்றுக்கும், நாடு தழுவிய பாடத்திட்டம் என்ற கொள்கையும், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும் கொள்கையும் நன்மை தரும்.நாடு தழுவிய அளவில், பள்ளிகளின் தரவரிசை காண்பதும், ஒவ்வொரு நிலையிலும் வெளிவரும் மாணவர்களின் கற்றறி நிலைகளை ஒப்பீட்டில் அறிவதும் வரவேற்கத்தக்க முயற்சிகளே. 'எழுபது, 80 சதவீத பள்ளிகள் தரம் தாழ்ந்தவை' என, முத்திரை குத்திவிட்டால் மட்டும் போதாது. அவற்றை உயர்த்துவதற்கு என்ன உதவியைச் செய்யப் போகிறோம்? அப்படி ஏதாவது செய்திருந்தால், 80 ஆயிரத்துக்கும் மேலான அரசு பள்ளிகளை, சமீப நாட்களில் மூடும் நிலை வந்திருக்காது. ஐந்து ஆண்டுகளை (2010 - -15) கடந்திருக்கும், கல்வி உரிமைச் சட்டம், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. நாட்டில், 8.3 சதவீத பள்ளிகள் மட்டுமே இச்சட்டம் முன்வைத்த, 10 எதிர்பார்ப்புகளுக்குள் இருப்பதும், 80 ஆயிரத்து, 647 மத்திய, -மாநில அரசு பள்ளிகள் மூடப்பட்டதும், 21 ஆயிரத்து, 351 தனியார் பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் இயங்குவதும் தெரிய வந்துள்ளது. உண்மையில், கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியை மூடி மறைக்கும் முயற்சியையும், அதன் மீது அக்கறை கொள்ளாத போக்கையுமே புதிய கல்விக்கொள்கை வடிவம் நமக்குக் காட்டுகிறது. கருத்துக்கேட்கும் நிலையிலேயே எதிர்ப்புகளாலும், இப்போது எல்லா நிலைகளிலும் புதிய கொள்கை நீர்த்துக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.தமிழகத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து, பிளஸ் 1, பிளஸ் 2க்குப் புதிய பாடத்திட்டம் தாயார் நிலையில் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது; 'மாற்றங்கள் இருக்கும், ஆனால் பெரிய அளவில் இருக்காது' என்ற செய்தியும் வருகிறது. அது உண்மையானால், நம் மாணவர்கள், தேசிய அளவில் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடும்.அதைத் தவிர்க்க, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர்கள் தயாரிக்கும் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கும் மேலான பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
திடீரென அதைச் செய்ய முடியாதெனில், எப்போதைக்கு தயாராகும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் போட்டிகளில் பின்னுக்கு ஓடுபவர்களாக, நம் குழந்தைகள் இருப்பதை தவிக்க முடியும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive