மூட்டுவலி பெண்களுக்கு மட்டும் அதிகமா?

இன்றைய காலகட்டத்தில் வயது
வித்தியாசமின்றி பலரும் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னை, மூட்டுவலி.  ஒரு காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இப்போது, எல்லோரையும் பாதிக்கும் பொதுப் பிரச்னையாக இதுமாற காரணம் என்ன?
மூட்டு
``மாறிவரும் உணவுப்பழக்கமும் உடல் எடை அதிகரிப்புமே முக்கியக் காரணம்'' என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார்.
இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் அவர்.


``எலும்பு இணைப்புகளில் ஏற்படும் வலியில் நிறைய விதங்கள் உண்டு. அதில், அதிகம்பேரைப் பாதிக்கும் பிரச்னையாக இருப்பது மூட்டு வலி.  அதிகப்படியான உடல் எடையைக் கால் மூட்டுகளால் தாங்க முடியாததே இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம். மூட்டுகளில் திரவங்கள் குறைந்து அவை ஒன்றுடன் ஒன்று உராயும்நிலை ஏற்படும்போது வலி ஏற்படுகிறது.  இதேபோல் முதுகு வலி, கழுத்து வலி என பல்வேறு பிரச்னைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், எலும்புகளில் ஏற்படும் கால்சியம் பற்றாக்குறையே. குறிப்பாக, பெண்கள் கால்சியம் பற்றாக்குறையால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால்தான் ஆண்களை விடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் முதுகுத்தண்டு வளைந்து காணப்படுகிறார்கள்.


மூட்டுவலி
50 வயதுக்கு மேல் கால்சியம் பற்றாக்குறை காரணமாக இருக்கிறது என்றால், இளம் வயதில் இணைப்புகளில் வலி வருவதற்கு நம்முடைய சோம்பேறித்தனமான, கவனக்குறைவான வாழ்க்கை முறைதான் காரணமாக அமைகிறது. உதாரணமாக, அதிகப்படியான எடையைக் குனிந்து தூக்கினால்  தண்டுவடம் நகர்ந்து வலியால்  துடிக்க நேரிடும்.  முதுகுத்தண்டு வளையாமல் நேராக உட்கார்ந்த நிலையில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்க வேண்டும். நாம் தூங்கும் முறை சரியாக இல்லையென்றாலும் கழுத்து வலியால்பெண்களின் வலி
அவதிப்பட நேரிடும். ஆக, நாம் செய்யும் சிறு சிறு செயல்களையும் கவனமாகச் செய்தாலே வலிகளில் இருந்து தப்பிக்கலாம். நம் உடலுக்கு வேலை தராமல் உட்கார்ந்தபடியே இருந்தாலும் நமது மூட்டுகளில் வலி ஏற்படும். தினமும் உடற்பயிற்சி செய்வதன்மூலம் இதைத் தவிர்க்கலாம்.
இணைப்புகளில் வலி இருக்கிறது என்று மருத்துவர்களிடம் சென்று முறையிட்டால், முதலில் பிசியோதெரபி எனப்படும் எளிய உடற்பயிற்சி சிகிச்சைக்குத்தான் பரிந்துரைப்பார்கள். மூட்டு வலி அதிகரித்தால் அறுவை சிகிச்சை மூலம்தான் தீர்வு காணமுடியும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மூட்டு வலி உடைய ஒரு நபருக்கு எடையைக் கட்டுக்குள் கொண்டுவராமல் அறுவைசிகிச்சை செய்வது சரியல்ல. ஏனென்றால் அறுவை சிகிச்சை செய்தபிறகு அவரது எடை அதிகரித்தால் அறுவை சிகிச்சை தோல்வியில் முடிவடையலாம். எனவே, தினமும்  உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுடன் வலிகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். யோகா செய்வதன்மூலமும் பலவித நன்மைகளை நாம்  அடைய முடியும். ஆசனங்களின் கலவையான சூரியநமஸ்காரம் செய்தாலும் இணைப்புகளில் ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம்.


இன்றைக்கு நம் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை உடல் மற்றும் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. நாம் உழைப்பது உண்பதற்காகவே என்றாலும் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அதனால்தான் திருமூலர் தம் பாடலில் `உடம்பால் அழியின் உயிரால் அழிவர்  திடம்பட  மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடல் வளர்க்கும் உபாயம் அறிந்தேன் , உடல் வளர்த்தேனே  உயிர் வளர்த்தேனே' என்று கூறியுள்ளார்.
உணவில் அனைத்துச் சத்துகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கம்பு, சாமை, கேழ்வரகு, கொய்யா என நாம் வாழும் இடத்தில் விளையக்கூடிய உணவுகளையும் பழங்களையும் அதிகஅளவில் உண்ண வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை உள்ளிட்ட உணவுகளையும் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். நெய், எண்ணெய் போன்றவை மூட்டுகளில் திரவ பசை உருவாகக் காரணமாகின்றன. எனவே அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அளவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். விரைவு உணவுகளையும், டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது'' என்கிறார் சுரேஷ்குமார்.
இணைப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் மட்டும்  வலி ஏற்படுவதில்லை. இவை உடலிலுள்ள வேறு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல்  ஆரோக்கியத்துக்காகச் சிறிது நேரம் ஒதுக்கினால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்!

Share this

0 Comment to "மூட்டுவலி பெண்களுக்கு மட்டும் அதிகமா?"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...