மகப்பேறு நலச்சட்டம்: ஆசிரியைகளுக்கு இல்லை

தொழில்நுட்பக் கல்லூரிகளில்
மகப்பேறு நலச்சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை அதனால் ஏராளமான ஆசிரியைகள் பாதிக்கப்படுவதாக அந்த கல்லூரிகளின் பேராசிரியர்கள் நேற்று (செப்-24) தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் தி இந்து நாளிதழின் செய்தியாளரிடம் பேசினா். அப்போது அவர்கள் கூறியதாவது:

அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மகப்பேறு காலச் சலுகைகள் தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையானது, கல்வி கொள்கை மற்றும் திட்ட துணை இயக்குனர் ஆனந்த சர்மாவினால் அனுப்பப்பட்டுள்ளது. இது முறையாக அமல்படுத்தப்படவில்லை. அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் பதிவு பெற்ற ஆசிரியர்கள் மொத்தம் 1,21,984 பேரில் 50 விழுக்காடு ஆசிரியைகள் ஆவர். இவர்களில் பெரும்பாலோருக்கு மகப்பேறு காலச் சலுகைகள் கிடைக்கவில்லை.மகப்பேறு நல (திருத்தம்) சட்டம் 2017ன்படி, அனைத்து கல்லூரிகளிலும் பணிபுரியும் ஆசிரியைகளின் குழந்தைகளுக்குக் காப்பகம் ஒன்றை அமைக்க வேண்டும். சட்டத்தின் கீழுள்ள நலத்திட்டங்களுக்கான பிரிவுகள் கடந்த ஆண்டு ஏப்ரலிருந்து அமல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவை எதுவுமே அமல்படுத்தப்படவில்லை.

பெரும்பாலான கல்லூரிகளின் ஆசிரியைகளுக்கு மகப்பேறு கால விடுமுறை கூட அளிப்பதில்லை. இரண்டு மாத விடுப்பு எடுத்தாலும் அதற்கு சம்பளம் அளிப்பதில்லை. அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது.

தமிழகத்தின் மத்திய பகுதியிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் கூறுகையில், முதல் குழந்தை பிறந்ததற்கு 2 மாதங்கள்தான் சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த மாதங்களில் விடுப்பு எடுத்ததற்கு, சம்பளப்பிடித்தம் செய்யப்பட்டது. இரண்டாவது குழந்தை பிறந்தபோது அவருக்கு இரண்டரை மாத காலம் விடுப்பு அளிக்கப்பட்டது. அந்த விடுப்பு காலம் முடிந்த பின்னர் அவரை முதுநிலை கல்விக்கு பதிவு செய்யுமாறு நிர்வாகத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டது. அவர் முதுநிலைக் கல்வியில் சேர்ந்தவுடன் ஒன்றரை ஆண்டில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதே போல் நாமக்கல்லிலுள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியர் ஒருவருக்கு ஒரு மாதமே மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பழைய மாமல்லபுரத்தில் உள்ள ஆசிரியைகள் கால தாமதமாக வந்தாலே கல்லூரிக்கு வெளியே வெயிலில் நிற்க வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. அங்கு ஆசிரியைகளுக்கு எந்த சலுகைகளும் கிடையாது.

இது தொடர்பாக தனியார் கல்லூரிகளில் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.பசுபதி கூறுகையில், தனியார் கல்லுாரிகளில் ஆசிரியைகள் மிக மோசமாக நடத்தப்படுகின்றனர். மகப்பேறு காலச் சலுகைகள் மட்டுமின்றி அவர்களுக்கென எந்தச் சலுகையும் அளிக்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார்.

தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மகப்பேறு நலச்சட்டத்தினை மதிப்பதில்லை என்றும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை என்றும் ஆசிரியைகள் கூறியுள்ளனர்.

Share this

0 Comment to "மகப்பேறு நலச்சட்டம்: ஆசிரியைகளுக்கு இல்லை"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...