கற்றல்
குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க, சென்னையில் மட்டும்,
1,088 ஆசிரியர்களை வழிகாட்டுனராக, பள்ளி கல்வித்துறை
நியமித்துள்ளது.அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், தேர்வுகளில்
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, பள்ளிகள் சார்பில், கூடுதல் பயிற்சி
அளிக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அரசு பள்ளிகளில், குறைந்த மதிப்பெண்
பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தனியார் பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பதிலாக, அவர்களை, ஏதாவது ஒரு காரணம் கூறி, மாற்று சான்றிதழ் கொடுத்து, வெளியேற்றும் நிலை உள்ளது. இதை கண்டறியாமல், மாணவர்களை வெளியேற்றுவதால், அவர்களின் பள்ளி கல்வியே பாதிக்கப்படுகிறது.இதை மாற்றும் வகையில், கற்றல் குறைபாடு மற்றும் மெல்ல கற்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழகம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும், ஒரு ஆசிரியரை, கற்றல் குறைபாடுக்கான வழிகாட்டுனராக தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, சென்னையில், 1,088 ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடு வழிகாட்டும் பயிற்சி தரப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, வெஸ்லி பள்ளியில் ஒரு வாரம் நடந்தது.
இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி கூறியதாவது:கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறியாமல், பல மாணவர்களை, பள்ளி நிர்வாகத்தினர் வெளியேற்றுகின்றனர். இதனால், பள்ளி கல்வியில் இடைநிற்றல் ஏற்படுகிறது. பெற்றோரும், பெரும் கவலைக்கு ஆளாகின்றனர்.இந்நிலையை மாற்ற, அரசின் சார்பில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், கற்றல் குறைபாடுகளை கண்டறிய பயிற்சி தரப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை, மதிப்பெண்ணை காரணம் காட்டி, கட்டாயமாக, டி.சி., கொடுத்து வெளியேற்றக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...