ஈரோடு
மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அடுத்த பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி,
மத்திய அரசின் தூய்மை விருது பெற்று, அனைத்து பள்ளிகளுக்கும்
முன்மாதிரியாக திகழ்கிறது.
பள்ளியில், 650க்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியர் உட்பட, 21 ஆசிரியர்கள்
பணிபுரிகின்றனர். தூய்மையான கழிப்பறை, கைகழுவுவதற்கு தனி இடம், மாணவர்களின்
சீருடை, நகம் சுத்தம், செருப்பு அணிதல், தலை முடி உள்ளிட்டவற்றை கவனமாக
கண்காணித்து திருத்தப்படும் முறைகள் என, தனியார் பள்ளிகளுக்கு நிகரான
தரத்துடன் தற்போது இயங்கி வருகிறது. ஐந்து ஏக்கரில் அமைந்துள்ள பள்ளி
மைதானத்தில், புங்கை, வேம்பு உள்ளிட்ட பலவகை மரக்கன்றுகளை நட்டு
பராமரிக்கின்றனர். இங்குள்ள காய்கறி தோட்டத்தில் வெண்டை, கத்தரி, தக்காளி,
கறிவேப்பிலை செடிகளை வளர்த்து, அதன் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு
விளக்கப்படுகிறது. பள்ளி வளாகம் பூங்காவை போல் உள்ளது.
தலைமையாசிரியர் அரங்கசாமி கூறியதாவது: இயற்கையை நேசிக்க,
மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில்,
இரண்டு குழுக்கள் இருமுறை பள்ளியை ஆய்வு செய்தனர். கடந்த ஆண்டு தேசிய
அளவில், ஈரோடு மாவட்டத்தில் எங்கள் பள்ளி சிறந்த பள்ளியாக
தேர்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் தூய்மை பள்ளி விருது பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பசுமைப்படை மாணவர்கள் கூறியதாவது; மாணவ,மாணவியர் சுழற்சி
முறையில் மைதானத்தில் உள்ள மரங்கள், செடிகளுக்கு தினமும் காலை
நீரூற்றுகிறோம். மதிய உணவு இடைவேளை நேரம், மாலையில் களை செடிகளை
அகற்றுவோம். மரக்கன்று நட்டால், மழை கிடைக்கும். பறவைகளுக்கு வீடுகளாகவும்
இருக்கும் என்பதை உணர்ந்து மரக்கன்றுகளை நடுகிறோம். இவ்வாறு அவர்கள்
கூறினர்.
பசுமைப்படை ஆசிரியர் சர்மிளா கூறியதாவது; தமிழாசிரியரான நான்,
பசுமைப்படை பணிகளை கண்காணித்து வருகிறேன். 50 மாணவ,மாணவியர்
உறுப்பினர்களாக உள்ளனர். பள்ளி வளாகம் முழுவதும், 350க்கும் மேற்பட்ட
மரக்கன்றுகள் நட்டு, பூங்கா போல பராமரித்து வருகிறோம். வேம்பு, மருதம்,
புங்கன், புளி, இச்சி, தேக்கு, உள்ளிட்ட மரங்களும், அழகிய பூச்செடிகளையும்
வளர்த்து வருகிறோம். இவ்வாறுஅவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...