ஆன்லைன் பரிமாற்றமா... உஷார்! ஓடிபி எண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை!! அதிர்ச்சி தகவல்

ஆன்லைன் வங்கி மோசடி நடக்காமல் தடுக்க
ஓடிபி எனப்படும் ஒரு முறை பாஸ்வேர்டு கொண்டுவரப்பட்டது. ஆனால், மோசடியை தடுப்பதில் இதுவும் நம்பகமானது இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்ேபாருக்கு வங்கியில் இருந்து அடிக்கடி ஒரு குறுஞ்செய்தி வந்துகொண்டே இருக்கும். அதாவது, ‘‘உங்கள் கணக்கு எண் மற்றும் ஏடிஎம் பாஸ்வேர்டு எண் கேட்டு வங்கியில் இருந்து பேசுவது போல யாராவது கேட்டால் அவற்றை கொடுக்க வேண்டாம்’’ என்பதுதான் அது. வங்கி மோசடிகள் பெருத்து விட்ட நிலையில், இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விழிப்புணர்வு ஊட்டுகின்றன. ஆனால் மோசடி நபர்கள் இப்போது வேறு வழிகளை கையாண்டு உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து உங்கள் பணத்தை திருடும் முயற்சியில் ஈடுபடுவதாக வங்கிகள் எச்சரிக்கின்றன. குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனையில் பயபடுத்தப்படும் ஓடிபி எண்களை பயன்படுத்தி திருவதாக தெரிவிக்கின்றன.

ஆன்லைன் பேங்கிங் முறையில் பொதுவாக ஓடிபி எண்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. ஒரே ஒரு முறைதான் பயன்படுத்த முடியும். அதுவும் சில நிமிடங்களிலேயே காலாவதியாகிவிடும் என்பதால் இது மிகவும் பாதுகாப்பானது என நம்பப்பட்டது. ஆன்லைன் வங்கி மோசடியில் நம்மை பாதுகாப்பது இந்த ஓடிபி நடைமுறைதான் அவ்வளவு நம்பகமான அந்த ஓடிபி எண்களுக்கும் இப்போது வந்தது ஆபத்து. காரணம் சில மோசடி நபர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் ஓடிபி எண்களை வைத்து வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன்களை ஹேக் செய்வதாக பல புகார்கள் வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்போது வேறு வழியில் ஏமாற்றும் வேலையில் மோசடி நபர்கள் இறங்கியுள்ளனர். அதாவது, வங்கி வாடிக்கையாளர்கள் போலவே வங்கிகளுக்கு செல்லும் மோசடிப் நபர்கள், ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளரின் கணக்கின் எண்ணை சொல்லி அந்த கணக்கில் தரப்பட்டுள்ள விவரங்களில் உள்ள செல்போன் எண்ணை மாற்றிவிட்டதாகக் கூறி மோசடியான ஒரு செல்போன் எண்ணை கொடுக்கின்றனர்.


அந்த செல்போன் எண்ணுக்கு வாடிக்கையாளரின் கணக்கு எண்ணை இணைத்து விடுகின்றனர். அதற்கு பிறகு நடக்கும் பணப் பரிவர்த்தனையின் போது அந்த புதிய எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து உங்கள் கணக்கில் இருந்து பணத்தை வேறு எண்ணுக்கு பணத்தை மாற்றிக் கொள்கின்றனர்.

 இது போன்ற புதிய மோசடியான வழியை பயன்படுத்தி டெல்லியில் ரூ11 லட்சத்து 5 ஆயிரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜானக்புரியை சேர்ந்த ஒருவர் மோசடியில் பணத்தை இழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வங்கிக்கு வந்த இரண்டு நபர்களில் ஒருவர், மேற்கண்ட ஜானக்புரி நபரைப் போல நடித்து தனது செல்போன் எண்ணை மாற்றி விட்டதாக கூறி புதிய எண் ஒன்றை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அதை வைத்து ஜானக்புரி நபரின் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ஓடிபி எண்ணை பயன்படுத்தி ரூ11 லட்சத்து 5 ஆயிரம் எடு்த்துள்ளார்.


அந்த பணத்தை துவாரகா பகுதியில் உள்ள வேறு வேறு 6 வங்கிக் கணக்கு எண்களுக்கு அந்த மோசடி நபர் பரிமாற்றம் செய்துள்ளார். பின்னர் ஏடிஎம் மூலமும் பணம் எடுத்ததுடன் செக் மூலமாகவும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. முழுப் பணத்தையும் எடுத்த பிறகு எந்த செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண்கள் வங்கியில் இருந்து போனதோ அந்த செல்போன் எண்ணை மோசடி நபர் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். பணத்தை பறி கொடுத்த ஜானக்புரி நபர் போலீசில் புகார் கொடுத்த பிறகு போலீசார் அந்த வங்கிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் பணம் பறி கொடுத்த நபரின் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களையும் பெற்றனர். இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி சிசிடிவி கேமராவில் உள்ள உருவத்தை தொழில் நுட்ப அடிப்படையில் ஆய்வு செய்து ஜார்கண்டில் இருந்த ஒரு மோசடி ஆசாமியை கண்டுபிடித்தனர். இந்த மோசடியில் வங்கியில் உள்ளவர்களும் ஈடுபட்டுள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர்.


ஆன்லைன் பரிவர்த்தனையை நம்பாத பலர் வங்கிகளுக்கே நேரடியாக சென்று பணம் எடுக்கும் முறையை கடைப்பிடித்து வருகின்றனர். இருப்பினும் நம்பகத்தகுந்த பரிவர்த்தனை என அபயம் அளிக்கும் ஓடிபி எண்கள் அபாயகரமானதாக மாறி விட்டன. பணம் வேண்டுமென்றால் நேராக வங்கிக்கே போய்விட வேண்டும் என்று உஷார் வாடிக்கையாளர்களை போலவே, எலி பட காமெடி போல மோசடி ஆசாமிகளும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.


எப்படி நடக்கிறது தில்லுமுல்லு

* வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கே செல்லும் மோசடி ஆசாமிகள், வாடிக்கையாளரின் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் * மொபைல் எண்ணை மாற்றியதும், அதற்கு வரும் ஓடிபி எண்ணை வைத்து பாஸ்வேர்டையும் மாற்றி பணத்தை மொத்தமாக எடுத்து விடுகின்றனர்.

* சில மோசடி பேர்வழிகள் மொபைல் நிறுவனத்துக்கு சென்று, சிம்கார்டு தொலைந்து விட்டதாக கூறி வாடிக்கையாளரின் நம்பருக்கு வேறு சிம்மை வாங்கி வந்து கைவரிசை காட்டுகின்றனர்.

* வங்கியில் கணக்கு வைத்திருப்போர் ஆன்லைன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.

* வங்கியில் உங்கள் செல்போன் எண மாற்றுவது தொடர்பாக யாராவது தொடர்பு கொள்கிறார்களா என்றும் கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் பணம் உங்களுடையது இல்லை.

Share this

0 Comment to "ஆன்லைன் பரிமாற்றமா... உஷார்! ஓடிபி எண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை!! அதிர்ச்சி தகவல்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...