தேர்வுத்துறை அலுவலகங்கள் மாவட்டங்களில் துவங்குவது எப்போது.?

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு அங்கமான தேர்வுத்துறை தனித்துறையாகவே செயல்படுகிறது. இதற்காக தனி இயக்குனரகம், 7 மண்டல அலுவலகங்கள் உள்ளன. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு உட்பட 40 வகை தேர்வுகளை இத்துறை நடத்துகிறது. இதுதவிர, தேர்வு முடிவுகள் வெளியிடுவது, மறுமதிப்பீடு பணி, சான்றிதழ் வழங்குவது உட்பட பல்வேறு பணிகளையும் கவனிக்கிறது.ஆண்டுதோறும் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதால், தேர்வுத்துறையின் பணிச்சுமை அதிகரித்துவிட்டது. இதனால் கல்வித்துறை அதிகாரிகளும் அவ்வப்போது தேர்வுத்துறை பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேர்வுப் பணிகளை கூடுதலாக ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியிருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அக்.,1 முதல் தேர்வுத்துறை அலுவலகங்களை துவக்கி, தேவையான எண்ணிக்கையில் கூடுதல் அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க தமிழக கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக மண்டல அலுவலகங்களை கலைத்துவிட்டு, அங்கு பணிபுரிந்தவர்கள் கவுன்சிலிங் மூலம் 32 மாவட்டங்களுக்கும் பணி நிரவல் செய்யப்பட்டனர்.ஆனால் குறித்த தேதி முடிந்து இருவாரங்கள் ஆகியும், இதுவரை முறையாக மாவட்டந்தோறும் தேர்வுத்துறை துவங்கப்படவில்லை. தேவைப்படும் அளவுக்கு கூடுதல் அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இது தேர்வுத் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு பணிகள் தொய்வின்றி தொடர, கல்வித்துறை அமைச்சர் இதை உடனே கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Share this