சென்னையில் நேற்று தெற்கு ரெயில்வே சார்பில் ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் முன்பதிவற்ற ரெயில் டிக்கெட் எடுக்க புதிய வசதி தொடங்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள பொது தளத்தில் ‘கியூ.ஆர்.கோடு’ உள்ள பதாகைகள் ஒட்டப்படும்.


பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள ‘யூ.டி.எஸ்.-ஆப்’ மூலம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உடனே முன்பதிவற்ற டிக்கெட் எடுக்கலாம். இதன்மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்லாமல் முன்பதிவற்ற டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா நிருபர்களிடம் கூறியதாவது:-

புறநகர் ரெயில் நிலையம்

தெற்கு ரெயில்வேயில் ‘யூ.டி.எஸ்.-ஆப்’ வசதியை 5 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இப்போது ‘கியூ.ஆர்.கோடு’ வசதியின் மூலம் ‘யூ.டி.எஸ்.-ஆப்’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும். இந்த வசதி தற்போது முதற்கட்டமாக சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்த புதிய வசதி தெற்கு ரெயில்வேயின் அனைத்து ரெயில் நிலையங்களிலும் விரிவாக்கப்படும். டிக்கெட் கவுண்ட்டர்களில் உள்ள கூட்டத்தை குறைக்க தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் பொறுத்தப்பட உள்ளது.

சிறப்பு ரெயில்கள்

தெற்கு ரெயில்வே சார்பில் தீபாவளிக்கு 23 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு தொடங்கியவுடன் அனைத்து டிக்கெட்களும் விற்றுவிட்டன. மேலும் நவம்பர் மாதத்தில் 35 சிறப்பு ரெயில்களும், டிசம்பர் மாதத்தில் 28 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளது.

சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரெயில்களில் 90 சதவீத டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. விழாக்காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவற்ற சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments