சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் படிக்கும், ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவ - மாணவியருக்கு, 2010 - 11ம் கல்வியாண்டு வரை, அரசு கல்வி நிறுவனங்களில் விதிக்கப்படும் கட்டண அளவிற்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.கடந்த, 2011 - 12 முதல், சுயநிதி கல்வி நிறுவனங்களில், நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கும், கல்வி கட்டணம் முழுவதையும், உதவித் தொகையாக வழங்க, ஜெயலலிதா உத்தரவிட்டார்.ஆனால், சில சுயநிதி கல்வி நிறுவனங்கள், கல்வி உதவித்தொகை திட்டத்தில், முறைகேடு செய்வதாக, புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கல்வி உதவித் தொகையை, அரசு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு தரப்படும் தொகைக்கு மிகாமல் வழங்க, 2017ல், தமிழக அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், 2017 - 18ல், சுயநிதி கல்வி நிறுவனங்களின், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள், பழைய முறைப்படி, கட்டாய கட்டணங்கள் அனைத்தையும் வழங்க, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, 2017 ஆக., 11க்கு முன், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி கட்டணத்தை முழுவதுமாக வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.