தமிழக பள்ளி கல்வி துறையில், 13 ஆண்டுகளுக்கு பின், ஒன்று முதல், பிளஸ் 2 வரை பாட திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, 2018 ஆண்டும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உள்ளிட்ட மற்ற வகுப்புகளுக்கு, இந்த ஆண்டும், புதிய பாட திட்ட புத்தகங்கள் அறிமுகமாகியுள்ளன.ஆனால், புத்தகங்களை அச்சிடுவதில், இந்த ஆண்டு, பாட நுால் கழகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தப்பும், தவறுமாக பாடங்களை அச்சடித்தல், புத்தகங்களை உரிய நேரத்தில் அச்சிட்டு, பள்ளிகளுக்கு வழங்காதது என, பல பிரச்னை ஏற்பட்டுள்ளது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், பாட புத்தக தயாரிப்பில் முழு கவனம் செலுத்தாமல், பாடங்களின் கருத்துகளிலும், வரலாற்றிலும், எண்ணற்ற பிழைகளுடன் புத்தகத்தை தயாரித்துள்ளது.இதற்கிடையே, புதிய கல்வி ஆண்டு துவங்கியதும், முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால், தாமதமாகவே புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும், பாட வாரியாகவும், வகுப்பு வாரியாகவும், புத்தகங்கள் பாக்கி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து வகுப்பு மற்றும் பாடங்களுக்கும், முழுமையாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை.குறிப்பாக, பொது தேர்வு எழுத வேண்டிய, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கூட, புத்தகங்கள் பாக்கி உள்ளதால், வகுப்புகளை நடத்துவதில், ஆசிரியர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.பாடங்களை விரைந்து படிக்க முடியாமல், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பள்ளி கல்வி துறை அதிகாரிகள், இந்த விஷயத்தில் தலையிட்டு, பாட புத்தகங்களை விரைந்து வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.