இன்ஜி., கவுன்சிலிங் விருப்ப பதிவு துவக்கம்

 இன்ஜி., கவுன்சிலிங்  விருப்ப பதிவு துவக்கம்


சென்னை : இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் விருப்ப பதிவு, நேற்று துவங்கிய நிலையில், இணையதளம் காலையில் முடங்கியது. 
பிற்பகலில் சரியானதால், முதல் நாளில், 2,200 பேர் பதிவு செய்தனர். அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.முதல் கட்டமாக, மாற்று திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், தொழிற்கல்வி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. 
இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்கள், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஜூலை, 3ல், கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகமானது. முதல் சுற்றில், 177.5 முதல், 200 வரை, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், ஆன்லைன் வழியாக, தாங்கள் விரும்பும் கல்லுாரி, பாடப் பிரிவை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டது. நாளை மாலை, 5:00 மணிக்குள், விருப்ப பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.இந்நிலையில், இதற்கான, www.tneaonline.in என்ற இணையதளம், நேற்று காலை, 8:00 மணி முதல் முடங்கியது. மாணவர்களால் விருப்ப பாடங்களை பதிவு செய்ய முடியவில்லை. 
கல்லுாரிகளின், காலியிட பட்டியல்களையும் பார்க்க முடியவில்லை.கவுன்சிலிங் கட்டணத்தை செலுத்தவும், விருப்ப பதிவை மேற்கொள்ளவும், ஒரே நேரத்தில், மாணவர்கள் முயற்சித்ததால், இணையதளத்தில், தொழில்நுட்ப சுணக்கம் ஏற்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, கூடுதல், 'சர்வர்' வசதி வழங்கப்பட்டு, மாலையில் நிலைமை கொஞ்சம் சீரானது. நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, முதல் சுற்றுக்கு தேர்வான, 9,872 பேரில், 6,600 பேர், கவுன்சிலிங் கட்டணம் செலுத்தியிருந்தனர். 
அவர்களில், 2,200 பேர், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை பதிவு செய்துள்ளனர். நாளை மாலை, 5:00 மணி வரையிலும், விருப்ப பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. கூடுதல் அவகாசம்?இன்ஜினியரிங் கவுன்சிலிங் விருப்ப பதிவுக்கு, மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. முதல் நாளான, நேற்று இணையதளத்தின் வேகம் குறைந்ததால், 10 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது. 
எனவே, விருப்ப பதிவு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனவே, முதல் சுற்றில் உள்ள, 9,872 பேரில், கவுன்சிலிங் கட்டணம் செலுத்திய அனைவரும், விருப்ப பதிவு செய்யும் வகையில், ஒரு நாள் மட்டும் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Share this

0 Comment to "இன்ஜி., கவுன்சிலிங் விருப்ப பதிவு துவக்கம் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...