பள்ளியில் சத்துணவு பணியாளராகப் பணிபுரியும் இவரின் மாத வருமானம் 1500 ரூபாய் மட்டுமே. அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் `கோன் பனேகா குரோர்பதி ' நிகழ்ச்சியில் பங்கேற்பதும் வெல்வதும் பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பபிதா என்ற பெண் வெற்றி பெற்று பரிசுத் தொகையாய் ஒருகோடி ரூபாய் பெற்றார். இந்த வெற்றியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பபிதாவின் வெற்றியைவிட அவரின் பின்னணியே எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள அமராவதி பகுதியைச் சேர்ந்தவர் பபிதா. அங்குள்ள ஓர் அரசுப் பள்ளியில் சத்துணவு பணியாளராக இருக்கிறார். இவரின் மாத வருமானம் 1,500 ரூபாய் மட்டுமே. தினமும் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பள்ளியிலே தங்கியிருக்கும் பபிதாவுக்குப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள்தான் உலகம்.
பபிதா சமைக்கும் கிச்சடி, அந்தப் பள்ளி மாணவர்களின் விருப்பமான உணவு என்று பாராட்டப்படுகிறது. இந்த வார்த்தைகளே தனது குறைவான வருமானம் குறித்த கவலையைப் போக்கியதாகவும் தெரிவித்திருந்தார். `இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு, என் தகுதிக்கு அதிகமானது என்றே நினைக்கிறேன்' என்று பேசிய பபிதா ஒரு கோடி ரூபாயை வென்று இருப்பது மக்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.தன்னுடைய வெற்றி குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள பபிதா, ``குழந்தைகளுக்கு உணவு சமைப்பதன் மூலம் எனக்கு கிடைக்கும் 1,500 ரூபாய் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாதபோதும் ஒரு மனநிறைவுடன் என் பணியைச் செய்து வந்தேன். நான் பள்ளிப்படிப்பைத்தான் முடித்திருக்கிறேன். ஆனால், நிறைய தகவல்களைப் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் மூலமாகத் தெரிந்துகொள்வேன்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றம் நிகழும் என்றுதான் இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எங்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் சேர்த்து, ஒரே ஒரு செல்போன்தான் இருக்கிறது. போட்டியில் ஜெயிப்பதன் மூலமாக எல்லோருக்கும் தனித்தனி செல்போன் வாங்கிக்கொடுக்கணுங்கிறதுதான் என்னோட ஆசையாக இருந்துச்சு. ஆனால், இந்த வெற்றி நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்றுதான். சினிமாவில் நடப்பது போன்ற ஆச்சர்யம் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எல்லாக் கேள்விகளும் என் வாழ்க்கையில் கடந்து வந்த சில சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டிருந்ததால், என்னால் வெற்றிபெற முடிந்தது. நிச்சயம் இந்தத் தொகையைப் பயனுள்ள வகையில் செலவழிப்பேன். சத்துணவு சமைக்கும் பணியைத் தொடர்ந்து செயல்படுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
19 ஆண்டு வரலாறுகொண்ட `கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியில் ஒருகோடி ரூபாய் வெற்றிபெற்றிருக்கும் பபிதாவுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...