தமிழக போக்குவரத்துத்துறை
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்ேறார்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கவும், மேலும் ஓட்டுநர் உரிமம் பெறவும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து சேலம் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கையில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது 15 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் கார் ஓட்டுவது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. வாகனத்தை இயக்கும்போது, போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஓட்டுநர் உரிமம் பெற பல்வேறு கட்டங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சில பெற்றோர்கள் பெருமைக்காக சிறுவர், சிறுமியர்களிடம் வாகனத்தை கொடுத்துவிடுகின்றனர். அவர்கள் 80 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். ஒரே வாகனத்தில் இரண்டு அல்லது மூன்று பேரை அமர்த்திக்கொண்டு வேகமாக ஓட்டுகின்றனர். இதன் காரணமாக பின்னால் வருபவர்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.
தற்போது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. மேலும் சிறார்கள் 12 மாதங்களுக்கு சாலையில் வாகனம் ஓட்டுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறார்களின் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது.திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்திலேயே அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்குத் தான். எனவே பெருமைக்காக பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் வாகனத்ைத கொடுக்க வேண்டாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...