அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து வரும்
29ம்தேதிக்குள் முதல்வர் பரிசீலிக்காவிட்டால் மீண்டும் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுச்செயலாளர்
அன்பரசன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்
மாநில பொதுச் செயலாளர் அன்பரசன் பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது: தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 22ம்தேதி
முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போது 29ம்தேதியன்று அரசு
ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பத்திரிகைகள்
வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதன்பேரில் அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இருப்பினும் இந்த கோரிக்கைகள் குறித்து இதுவரையில் எவ்வித பரிசீலனையும்
செய்யவில்லை.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் உட்பட மொத்தம் 5 ஆயிரத்து 468 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதுடன் அவர்களது பென்சன் நிறுத்தி வைக்கப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யகோரி மீண்டும் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இந்த கோரிக்கையை வரும் 29ம்தேதிக்குள் முதல்வர் பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் வரும் 27ம்தேதி முதல் 29ம் தேதி வரைதஞ்சையில் நடைபெறும் மாநில மாநாட்டில் 29ம் தேதி அன்று மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அன்பரசன் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...