தமிழக அரசு அறிவித்துள்ள 5, 8 -ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்த முடிவை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக புதுச்சேரி அரசு மறுபரிசீலனை செய்யும் என முதல்வர் வே.நாராயணசாமி கூறினார். காரைக்காலில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது: ஹிந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ள கருத்து ஏற்புடையதல்ல. இந்தியா பல்வேறு மொழிகள், மதங்கள், கலாசாரங்கள் கொண்ட நாடாகும். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை கட்டாயமாகப் புகுத்தும் பணியை செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சரின் கருத்து பல மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமித்ஷா தமது கருத்தை திரும்பப் பெற வேண்டும். மொழி என்பது மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய ஒன்று. ஆகவே அதில் மத்திய அரசு தலையிடாமல் இருப்பது நல்லது. புதுச்சேரியில் தற்போது, பதாகை கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடிவெடுத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். சில குறிப்பிட்ட பகுதிகளில் பதாகை வைக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, அது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசின் அனுமதி பெற்று வைக்கப்படும் விளம்பரப் பதாகைகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவைகளும் அகற்றப்படும். புதுச்சேரியில் பதாகை கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்.
ரேஷன் கடைகள் மூலம் இலவச அரசி வழங்கும் திட்டத்திற்கு தொடர்ந்து துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார். இதுதொடர்பான கோப்பை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். மத்திய அரசிடமிருந்து உத்தரவு வரும் வரை அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் தங்களது துறை அதிகாரிகளை 5 நாள்களுக்கு ஒருமுறை அழைத்துப் பேசவும், எனது தலைமையில் மாதம் ஒரு முறை அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கெடுக்கும் கூட்டமும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்கிற தமிழக அரசின் உத்தரவு சிறுபிள்ளைகளான மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். புதுச்சேரி அரசு இதை மறுபரிசீலனை செய்யும். பொதுத்தேர்வு இல்லாமல் வகுப்புகளிலேயே வைக்கப்படும் தேர்வே போதுமானது என்பது எனது கருத்து. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். காரைக்கால் மாவட்டம், போலகத்தில் பேட்டரி கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து லண்டனைச் சேர்ந்த தொழில் முனைவோர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அது குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...