Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையான ஒன்று - கல்வியாளர் ரவிக்குமார்.

  அரசாணை 164 நாள்: 13.09.2019
இன் படி தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தினைப் பின்பற்றி செயல்பட்டுவரும் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும்.

                குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, மைய அரசால் இயற்றப்பட்டு 01.04.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண்: 173 நாள் 08.11.2011 இன் படி அச்சட்டம் தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு வந்தது.
                இச்சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு பத்தாண்டுகள் முடிந்த நிலையில், மாணவ மாணவியர் கல்வி கற்றல், அடிப்படைத் திறன்களை அடைந்தமை, மாணவர்கள் தங்கள் வயதிற்கு ஏற்ற கற்றலடைவுகளைப் பெற்றமை, . . . குறித்த ஆய்வு மற்றும் அலசலின் இறுதியில், மாணவர் நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல், மைய அரசு, பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு, அவர்களின் கற்றல் அடைவுகளை அறியும் பொருட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என திருத்தம் செய்துள்ளது.
                அதையொட்டி தமிழ்நாடரசும், பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.
                அரசு பொதுத்தேர்வால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியில்லை என அறிவிக்கக்கூடாது, மாணவர்களின் இடைநிற்றலை ஊக்குவிக்கக்கூடாது எனவும் அரசாணை தெரிவிக்கிறது. இந்நிலையில், மாணவர் கற்றலடைவை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களாகிய நாம் இவ்வரசாணையை (இந்நடைமுறையை) வரவேற்போம்.
                2019 – 2020 ஆம் கல்வியாண்டில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது பயிலும் மாணவர்களை 2022 – 2023 ஆம் ஆண்டில் முறையே ஐந்தாவது மற்றும் எட்டாவது அரசுப் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவோம். மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான்! மாணவனை உருவாக்கும் ஆசிரியர் நினைத்தால் நடத்திக்காட்ட இயலாதா என்ன?
                அரசுப் பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு காட்டும் அனைவரும் அவரவர் பள்ளிப் படிக்கும்பொழுது ஒவ்வோராண்டும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தேர்ச்சி பெறாத மாணவர்கள அனைவரும் பள்ளியைவிட்டு வெளியேறிவிடவில்லை. மூன்றாண்டுகள் ஒரே வகுப்பில் படித்தால், பள்ளியில் படிக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி அப்போது செயல்பாட்டில் இருந்தது என்பதே, தேர்வில் தோல்வி என்பது இடைநிற்றலை ஊக்குவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு சிலர் வெளியேறி இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் பள்ளியைவிட்டு வெளியேறியவர்களை ஒப்பிடும்போது, அக்காலத்தில் வெளியேறியவர்கள் மிகமிகக் குறைவே. அவ்வாறு வெளியேறியவர்கள் அனைவரும் சோடை போய்விடவில்லை. வாழ்வில் வெற்றி பெற்றவர்களும் அதிகம். ஆனால் இன்றைய மாணவரின் நிலை? திறன் வளர்த்துக்கொள்ளாமல் வெற்றி பெற்றவர்கள் (Educated but not qualified) எண்ணிக்கை மிகமிக அதிகம். இப்போதுள்ள ஆசிரியர்களுடன் அப்போதிருந்த ஆசிரியர்களை ஒப்பிட்டால், அவர்கள் குறைவாகப் படித்தவர்களே! அப்போதைய (இடைநின்ற) மாணவன் இப்போதைய ஆசிரியர்களை விட அதிக அனுபவ அறிவு பெற்றவர்கள்! இன்றைய ஆசிரியர்கள் பல வகையில் மெத்த பயிற்சியும், பரந்த திறமையும், புத்திசாலித்தனமும் பெற்றவர்கள்.
                பள்ளிக்கல்வியை இடையில் விட்டவர்களை கடந்த பத்தாண்டுகளாக கட்டாயத் தேர்ச்சி அளித்தும் பள்ளியில் இருத்திக்கொள்ள இயலவில்லை. இன்றைய நாளில் சில பல மாணவர், சமுதாயத்தில் பயன்பட வேண்டிய கல்வியைப் பெறாமல், தரமான கல்வி அடைவற்ற ஒரு சமுதாயத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டனர். கல்வித் தகுதி பெற்ற ஆனால் செயல் திறனற்ற படித்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம். தகுதியானவர்களுக்கு, திறன் பெற்றவர்களுக்கு இன்றும் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
                5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற சட்டத்தால் ஏழை கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பது கள நிலவரம் தெரியாதவர்களின் வெற்றுவாதமே! விதண்டாவாதமே!! அவர்களையும் எல்லா வகையிலும் தகுதியுள்ளவர்களாக மாற்றி கல்வியடைவைப் பெறச்செய்ய இவ்வரசாணை துணைபுரியும். அதற்கு என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? எவ்வெவ்வழிமுறைகளைக் கையாளலாம்? எந்நடைமுறைகளைப் பின்பற்றலாம்? என்ன செய்யக்கூடாது? . . . என விவாதிக்கலாம். ஆக்கபூர்வமான சிந்தனைகளை முன்வைக்கலாம். நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். வளர்ச்சிப் பாதையில் சிந்தித்து பயணிக்கலாம்.
                சிறு வயதில், அம்மா. அப்பா, ஆசிரியர் அனைவரும் கீழ்கண்டவாறு சொல்வர்: ”தப்பு பண்ணாதே! சாமி கண்ணைக் குத்திடும்!” தவறான செயலைச் செய்ய சிறுவர்களும், சிறுமிகளும் அச்சப்படுவர். யாராவது தவறு செய்தால், “வேண்டாம் செய்யாதே! சாமி கண்ணைக் குத்திடும்!” என்பர். 50% - 70% சிறுவர், சிறுமியர் தவறு செய்ய்மாட்டார்கள். நான் அப்போதே இது உண்மையல்ல என எண்ணியதுண்ண்டு. இறைவனுக்கு எல்லார் கண்ணையும் குத்துவது வேலையுமல்ல. மேலும் எவரும் பார்வையற்றவர்களாகவும் இல்லை. இறையச்சம் மக்களை நல்வழிப்படுத்தியது. எப்பொழுது இறையச்சம் (இறைநம்பிக்கை) குறைந்ததோ அப்போதிலிருந்து குற்றங்களும், கொடுஞ்செயல்களும் அதிகமாயின.
                அவ்வாறே, தேர்வு பற்றிய அச்சம் நீங்கியதிலிருந்து, கற்கும் ஆர்வமும், கீழ்படிதலும், பணிவும், மாணவர்களிடம் வளர்ந்தன; பொறுப்பின்மை அதிகமாகியது. கற்பிக்கும் ஆர்வமும், கற்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் சில ஆசிரியர்களிடம் குறைந்தது; தப்பிக்கும் மனப்பான்மை அதிகமாகியது. இதற்கு யார் காரணம்? அரசா? ஆசிரியர்களா? பெற்றோர்களா? சமூகமா? அனைவரையும் உள்ளடக்கிய வட்டச்சூழலா? மாற்றம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்! உதவும் மனமில்லையென்றாலும், தடையாயிராதீர்கள்! நல்வழிப்படுத்துங்கள்.
            சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலமிது. இப்போதில்லாவிடால் எப்போதுமில்லை. மாணவர்களின் கல்வி அடைவு குறைந்ததற்கு பல காரணங்களைப் பட்டியலிடலாம்! அவற்றையெல்லாம் நம்மளவில் நீக்க முயலலாம்! மாணவர்களின் திறன் மிகு கல்விக்கு, முழுமையான திறன் வளர்ச்சிக்கு செயலாற்றுவோம்!
                அரசு பள்ளி ஆசிரியர்கள் சோடை போனவர்கள் அல்ல. சிலபல காரணங்களினால் சிலர் தன் (பா)ணியில் பின்தங்கிவிட்டிருக்கலாம். அதன் விளைவாக உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை பயமுறுத்தும் வகையில் உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளி 25% சத மாணவகளுக்கு அரசு பணம் கட்டுவதுதான் எனச்சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்! அப்பணத்திற்கு மேலும் பெற்றோர் செலவைச் செய்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை! அங்கு கொடுக்கும் கல்வியை அரசுப் பள்ளிகள் கொடுத்தால் அவர்கள் அரசுப் பள்ளியை நாடி வருவர். அவர்களிடம் சென்ற மாணவர்களை ஆசிரியர்கள் நினைத்தால் அரசுப் பள்ளிக்கு வரவழைக்க முடியும்.
                2022 – 2023 ஆம் கல்வியாண்டில் ஐந்தாவது மற்றும் எட்டாவது அரசுப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால் மாணவர்கள் இடையில் நின்றுவிடுவர். ஆம். அம்மாணவர்க்கு உரிய கல்வியைக் கல்வியைக் கற்பிக்காவிடில்! மூன்றாண்டுகளில் என்ன செய்ய இயலும்? இயலாதா என்ன? இயலும். மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை, சமூகக் காரணங்கள், சமுதாயக் காரணங்கள், பெற்றோரின் கல்வியறிவின்மை, ஊட்டச்சத்துக்குறைபாடு, திட்டக்கூடாது, அடிக்கக்கூடாது, கண்டிக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, . . . போன்ற கட்டுப்பாடுகள், . . . என காரணங்களை அடுக்கலாம். இத்தகைய எல்லாக்குறைபாடுகளையும் கொண்ட நலிவடைந்த, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்ட கிராமப்புறத்தில் தனியார் பள்ளி சக்கைப்போடு போட்டு அமோக வளர்ச்சியடைகிறதே! எப்படி? அவர்களின் அர்ப்பணிப்பு மட்டுமா? அல்லது இதர மக்களின் ஆசியும் உண்டோ?!?!
                ஈசல் ஒரு நாளில் உருவாகி, வளர்ந்து, நிறைவாக வாழ்ந்து, மகிழ்வாக மடிந்து போகிறது. நெல் பயிர் மூன்று மாதங்களில் பலன் தருகிறது. வாழை ஓராண்டில் அனைத்துப் பகுதிகளையும் மனிதனுக்குப் பலன்தரும் வகையில் வளர்கிறது. பத்து மாதத்தில், கரு உருவாகி, குழந்தையாக வளர்கிறது. அக்குழந்தையை மூன்று ஆண்டுகளில் நல்ல திறனைப் (தகுதியைப்) பெற வைக்க ஒரு ஆசிரியரால் இயலும். ஆசுகளை (குற்றங்குறைகளை) நீக்குபவர் ஆசிரியர்கள்! மாணவர்களின் ஆசுகளைமட்டுமல்ல, ஆசிரியர்கள், மக்கள் மற்றும் அரசின் ஆசுகளையும் சுட்டிக்காட்டி, திருத்தி, நல்வழிபடுத்தி நல் சமுதாயத்தையும், உதவும் உள்ளத்தோடு கூடிய மக்களையும், எதிர்கால  திறமைமிக்க சமுதாயத்தையும் உருவாக்கும் கடமை பெற்ற ஒரே இனம், சமுதாய அக்கறை கொண்ட இனம், ஆசிரியர் இனம் மட்டுமே! ஒன்று சேர்வோம்! வெற்றி பெறுவோம்! சாதிப்போம்! கரம் கொடுத்து, தோள் கொடுத்து மாணவமணிகளை உயர்த்துவோம்! எல்லோரையும் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் ஏணியாகிய நாம் ன்றும் சோடை போனதாக வரலாறு இல்லை!
                ஒரு நாளைக்கு ஒரு எழுத்து; பேச, கேட்க, எழுத அறிதல்; ஒரு மாதத்திற்கு ஒரு கணிதச் செயல், . . . என திட்டம் போட்டு, செயலாற்றி, வெற்றிபெறுவோம்!  வாழ்க தமிழ்! வெல்க தமிழினம்!! உயர்க தமிழ்நாடு!!!

சிவ. ரவிகுமார்,




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive