திருச்சி சாலையில் கேட்பாரற்று கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த, நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
விழிப்புணர்வு பேரணி:
திருச்சி, பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனுாரில், புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.'துாய்மை பாரதம்' திட்டம் குறித்து, இப்பள்ளி மாணவ - மாணவியர், நேற்று காலை, விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனுார் மேலக்காடு என்ற இடத்தில், பேரணி செல்லும்போது, 50 ஆயிரம் ரூபாய் சாலையில் கிடந்துள்ளது.
இதைப் பார்த்த, பள்ளியின், 4ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவியரான, மதுஸ்ரீ, கனிஷ்கா ஆகியோர், பணத்தை எடுத்து, உடனடியாக, அருகில் இருந்த, ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். அவர், பள்ளிக்கு வந்ததும், தலைமை ஆசிரியர், மெட்டில்டா ஜெயராணியிடம் ஒப்படைத்தார்.
தாளாளர் வாழ்த்து:
இதைக் கேள்விப்பட்ட, பள்ளி தாளாளர், செபாஸ்டின் மற்றும் ஊர் மக்கள், ஏழ்மையிலும் நேர்மையாக நடந்த மாணவியரை பாராட்டி, வாழ்த்தினர்.
இது குறித்து, பள்ளி தாளாளர், செபாஸ்டின் கூறியதாவது: இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும், நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மதுஸ்ரீயின் தந்தை, கல் கொத்துபவர். கனிஷ்காவின் தந்தை, பெயின்டர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
கவுரவிக்க முடிவு:
அப்படி இருந்தும், 50 ஆயிரம் பணத்தை எடுத்து, நேர்மையுடன் கொடுத்த மாணவியரை, பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களை, பள்ளி சார்பில் கவுரவிக்க உள்ளோம். கண்டெடுத்த பணம், போலீசில் ஒப்படைக்கப்பட்டு, உரியவரிடம் கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...