தமிழகத்தில், போதிய மாணவர்கள் இல்லை என்று கூறி சில அரசு தொடக்கப்பள்ளிகள், அரசால் தற்போது மூடப்பட்டுள்ளது. உயர் நிலைப்பள்ளிகளும், மேல் நிலைப்பள்ளிகளும் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், மேலும் பல அரசுப்பள்ளிகள் மூடும் நிலையில் தான் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஒரு சில கிராமங்களில், அரசுப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் பங்களிப்புகளால் தொடர்ந்து மாணவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் சூழல் இன்றளவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட, பணியைத் தான் புதுக்கோட்டை அருகே குளமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கல்வி உபகரணங்கள் வழங்குதல், தேர்வு நேரங்களில் வழிகாட்டுதல் என மாணவர்களுக்காக இவர்கள் செய்யும் பணிகள் நீள்கிறது. இந்த நிலையில் தான், பள்ளிக்கு ஆண்டுவிழா மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடத்த கலைநிகழ்ச்சிக் கூடம் தேவைப்படுவதாக, பள்ளி ஆசிரியர்கள் எதார்த்தமாகக் கூற, இன்று தங்கள் சொந்த செலவில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலை நிகழ்ச்சிக் கூடத்தைக் கட்டி முடித்து ஆண்டுவிழாவை நடத்தி அசத்தி உள்ளனர்.
இதுபற்றி முன்னாள் மாணவர் ஆனந்தனிடம் பேசினோம், ``ஒரு வருஷத்துக்கு முன்னாடி, நாங்க பள்ளியில் சின்னதா ஒரு நிகழ்ச்சி நடத்தினோம். நிகழ்ச்சி முடிச்சு பிறகு, எங்ககிட்ட பேசிய ஆசிரியர்கள், "பள்ளிக்குக் கலையரங்கம் அமைத்தால் நிறைய நிகழ்வுகள் நடத்தலாம். இதுபற்றி பள்ளிக்கு வர்ற உள்ளூர் அரசியல் பிரமுகர்கிட்ட சில வருஷமாகக் கேட்கிறோம். ஆனால், அவங்க அதுக்கு எந்த பதிலும் சொல்ல மாட்றாங்க.
இதை உங்ககிட்ட சொல்லி என்ன பன்றது, பாவம் பெரிய முதலீடு போட நீங்க எங்க போவிங்க" என்றும் சொன்னாங்க. உடனே முன்னாள் மாணவர்கள் சேர்ந்து அதனை கட்டிக் கொடுக்கலாம்னு முடிவு பண்ணோம். முக நூல், வாட்ஸ் அப்பில் முன்னாள் மாணவர்கள் குழு அமைத்தோம். எல்லாரும் இதுபற்றி பேசி விவாதிச்சோம். ஒரு நாள் நடத்தப்போகிற ஆண்டுவிழாவிற்காக மட்டும் நாம ஏன் லட்சக்கணக்கில் செலவு செஞ்சு கட்டணும் என்ற கேள்வி எல்லார் கிட்டயும் இருந்துச்சு.
கட்டடத்தை நாங்கள் கட்டித்தர்றோம். மாணவர்களுக்கு எந்தெந்த வகையில் அது பயன்படும்னு சொல்லுங்க என்று ஆசிரியர்கள்கிட்ட கேட்டோம். "ஆண்டுவிழா நடத்துவதோடு மட்டுமில்லாமல், உரையரங்கம், சிந்தனைச் சொற்பொழிவு, பட்டிமன்றம் எல்லா நடத்தலாம். அவ்வப்போது, மாணவர்களை மேடையில் ஏற்றிப் பேச வைத்தால், மாணவனுக்குப் பேச்சாற்றல் அதிகரிக்கும். பல பேச்சாளர்களை உருவாக்க முடியும்" என்று சொன்னவுடன், அனைவரிடமும் பேசி ஒரு மனதாக கட்டடம் கட்ட முடிவு செஞ்சோம்.
பள்ளி முன்னாள் மாணவர்கள் 64 பேர் கைகோர்த்தார்கள். நிதி திரட்டி கடந்த வருஷம் பணியைத் துவக்கினோம். கட்டடம் கட்டும் வேலையில் நேரடியா நாங்களே இறங்கினோம். ஆரம்பிச்சு கொஞ்ச நாள் வேலையெல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்சு. அந்த சமயத்துல தான் கஜா புயல் அடிச்சிருச்சு. பணம் பற்றாக்குறையால் மாசக்கணக்குல போட்டு வச்சிட்டோம். அதற்கப்புறம் வெளிநாடு வாழ் முன்னாள் மாணவர்கள் ரொம்பவே உதவுனாங்க.
இதுக்காக, அரசியல்வாதிங்க யார் கிட்டியும் போய் நிதி கேட்கலை. எதிர்பார்க்கவில்லை. எங்களால் இதைச் சாத்தியப்படுத்த முடியும்னு தன்னம்பிக்கை வச்சோம். ஒரு வழியாக ஓராண்டுப் போராட்டத்திற்குப் பிறகு கலையரங்கத்தைக் கட்டிட்டோம். மாவட்ட கல்வி அதிகாரியை வைத்து இப்போ கலையரங்கத்தைத் திறந்து ஆண்டு விழா நடத்திவிட்டோம். இன்னும், நிறைய இந்த பள்ளிக்குச் செய்யணும். மாணவர்களுக்கு எப்போதும் இந்த கலையரங்கம் பயன்பட வேண்டும். பல பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள் பள்ளியில் இருந்து வெளிவர வேண்டும். அதுதான் எங்களுக்குக் கிடைத்த வெற்றி" என்றனர்.