பொள்ளாச்சி:தேசிய அறிவியல் கழகம், நேரு கோளரங்கம், நேரு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அருங்காட்சியகம் சார்பில், சூரிய கிரகணத்தை பார்க்கும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் பள்ளியில் நடந்தது.பள்ளி தலைவர் மணி, தாளாளர் விஜயலட்சுமி, முதல்வர் சகுந்தலாமணி முன்னிலை வகித்தனர்.
நேரு நினைவு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அருங்காட்சியகம், நேரு கோளரங்கம் இயக்குனர் ரத்னாஸ்ரீ மாணவர்களுக்கு சூரிய கிரகணத்தை ஒளிவிலகல் தொலைநோக்கி மூலம் காண்பது, அளவீடு செய்வது குறித்து விளக்கினார். ஆர்வமாக மாணவர்கள், சூரியனை கருவி மூலம் பார்த்து மகிழ்ந்தனர்.நேரு கோளரங்கம் இயக்குனர் கூறியதாவது:வரும் டிச., 26ம் தேதி சூரிய கிரகணம் இந்தியா முழுவதும் தெரிகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், தீப்பந்தம் போல சூரிய கிரகணம் தெரிய உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இந்த நிகழ்வு முழுமையாக தெரியும்.
சூரிய கிரகணம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து விளக்கும் வகையில், தேசிய அறிவியல் கழகம், நேரு ஆராய்ச்சி மற்றும் அறிவியல் கழகம், நேரு கோளரங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த பணிமனை நடத்துகின்றனர்.நாச்சியார் பள்ளியில், சுற்றியுள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. அதில், சூரிய கிரகணத்தை நேரிடையாக பார்க்க கூடாது. ஒளி விலகல் தொலைநோக்கி மூலம் பார்க்கும் போது, சூரியனின் பிரதிபலிப்பை பார்க்க முடியும் என விளக்கப்பட்டது.
இதனை மாணவர்கள் பார்வையிட்டு, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அளவீடு செய்வது குறித்தும் விளக்கப்பட்டது. டிச., 18ம் தேதி மரங்களின் கீழ் சூரியனின் பிரதிபலிப்பு தெரிவதை நோட்டமிட வேண்டும். பின், மரங்களின் கீழ், 26ம் தேதி சூரிய கிரகணம் பிரதிபலிப்பை பார்க்கலாம். தொடர்ந்து, உடுமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பணிமனை நடத்தப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...