தமிழக அரசு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தொடர்ந்து
10ம் வகுப்பு பொதுத் தேர்விலும் மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடத்திற்கான
இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அவ்வாறு தேர்வு நடத்தும்போது பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும், முதல் மற்றும் இரண்டாம் தாள்களிலுள்ள அனைத்து பாடங்களின் சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுடைய மனச் சுமை குறையும் என்றும், பத்தாம் வகுப்பு படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடத்தப்படுவதால் ஆண்டுக்கு மூன்று கோடி பேப்பர்கள் சேமிக்கப்படும் என்றும், 20 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறையும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் இந்த முடிவுக்கு ஆசிரியர் சங்கம் மற்றும் மாணவர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தின் இரண்டு தாள்கள் ஒரே தாளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பாடத்தை எளிமையாக்குவதாக நினைத்து மாணவர்களிடையே மொழி ஆர்வத்தைக் குறைப்பதோடு எதிர்காலத்தில் தமிழ் மொழியை அழிக்கும் முயற்சியாகும்.
இன்று அரசாணை 161-ஐ வெளியிட்டிருப்பது மொழியின் தாக்கத்தை வேரிலேயே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியைப் பிழையின்றி எழுதவும் படிக்கவும் உதவும். அது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத் தன்மையையும் வெளிப்படுத்த உதவுகிறது. இதை நீக்குவது என்பது எதிர்காலச் சமுதாயத்தை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியாகும்.
இதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் ஆசிரியர்களின் வேலைப்பளுவும் நேர விரயமும் குறையும் என்று அரசு தரும் விளக்கம் ஏற்புடையதல்ல. மொழியின் வளர்ச்சியையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்ற, மற்ற பாடங்களுக்கு அக மதிப்பெண் வழங்குவது போல தமிழ் மொழிப் பாடத்திற்கும் 20 அக மதிப்பெண்களை வழங்க வேண்டும்.
மேலும் மாணவர்களின் மனநிலையினைக் கருத்தில் கொண்டும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும் தேர்வுகளில் வெற்றி தோல்வி என்பதை அறவே ஒழிக்க வேண்டும். மதிப்பெண் முறையை அகற்றி மதிப்பீட்டு முறையினை அமல் படுத்துவதன் மூலம் தற்கொலை எண்ணங்களையும் தவிர்க்க முடியும். எனவே தமிழ் மொழியைக் காப்பாற்ற அரசாணை 161-ஐத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரை, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக நன்று
ReplyDelete