மாநிலத்தில் தனியார் பள்ளிகளுக்கு
இணையாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், நுாறு சதவீதம் தேர்ச்சி கொடுக்கும் நகர பகுதி அரசு பள்ளிகள் மற்றும் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி கொடுக்கும் கிராமப்புற பள்ளிகளுக்கு ரொக்கப்பரிசாக ரூ. ஒரு லட்சம் அறிவித்து, வழங்கப்பட்டது.அரசு பள்ளிகள், நுாறு சதவீத தேர்ச்சி இலக்கிற்காக போட்டி போட்டி மாணவர்களுக்கு கல்வி கற்பித்தன. மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி, மாணவர்கள் தேர்வுக்கு தயார் படுத்தப்பட்டனர். அதற்கான பலனும் கிடைத்தது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் கணிசமாக உயர்ந்தது. 2013ம் ஆண்டு, 45 பள்ளிகள் இந்த ரொக்கப்பரிசை பெற்றன.பரிசு தொகை, பள்ளியில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பள்ளி வளாகத்தை பாராமரித்தல், அழகுபடுத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது.ரொக்கப்பரிசு, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதாகவும் அமைந்தது.இந்நிலையில் இந்த பரிசு தொகை, ஐந்து ஆண்டிற்கு முன் 2 லட்சமாக அரசு உயர்த்தியது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் எதிர்பாராத அளவில் உயர்ந்தது.கடந்த2017-18 கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தின் தேர்ச்சி 94.37 சதவீதமாக உயர்ந்த நிலையில், 22 அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. பிளஸ்- 2 தேர்வில் பாகூர் கொரவள்ளிமேடு பள்ளி நுாறு சதவீத தேர்ச்சியை கொடுத்தது.கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.43 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. அதேபோன்று, பிளஸ் 2 பொதுத்தேர்வில்அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட 8.25 சதவீதம் அதிகம் தேர்ச்சி அதிகரித்தது.இப்படி கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில், பல நகர பகுதி அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியும், கிராம பகுதி பள்ளிகள் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சியும் கொடுத்தன. ஆனால், அந்த பள்ளிகளை ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படும், ரொக்கப் பரிசுதான் வழங்கப்படவில்லை.இந்த ஆண்டு நிதிநிலை சரியில்லை அடுத்து ஆண்டு சேர்த்து வாங்கிக்கொள்ளலாம் என, கடந்த ஆண்டு கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
இந்த ஆண்டு கேட்கும்போது, கடந்த ஆண்டு தொகையை தர முடியாது. இந்த ஆண்டு மட்டும் கேளுங்கள் என, கூறியுள்ளனர். ஆனால், இந்த ஆண்டும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், ரொக்கப்பரிசை நாம் வாங்கி விட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் போட்டி போட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தி படிக்க வைத்த ஆசிரியர்கள், ரொக்கப்பரிசு தொகை கிடைக்காமல் விரக்தியில் உள்ளனர்.அதே சமயத்தில், அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கில் சில பள்ளிகள் மட்டும் ரொக்கப்பரிசை பெற்றுள்ளனர். இது, ரொக்கப் பரிசு கிடைக்காத பள்ளி ஆசிரியர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி தர வேண்டும், என்ற நோக்கில் அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டாக வழங்கப்படாமல் உள்ள ரொக்கப் பரிசை, விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...