Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now! - https://m.helo-app.com/al/URyRSdZpF

 

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், பணிப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. தற்போது ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்டு, கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரத்தை, பணிப் பதிவேட்டில் முறையாக பதிவுசெய்ய வேண்டும். ஏதேனும் முரண்பாடு இருந்தால், ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை அறிக்கைப்படி, சம்பந்தப்பட்ட அலுவலர் மீது, துறை ரீதியான, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும் கருத்துகளைக் கேட்டோம்...
 
சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு
சமூகத்தின் ஒட்டுமொத்த நீரோட்டத்திலிருந்து ஆசிரியர்களாகப் பணிபுரிகின்ற ஒரு பிரிவினரை மட்டும் தனியாகப் பிரித்துப் பார்ப்பதும் அவர்களுக்கென்று தனியான வாழ்வியல் மதிப்பீடுகளைப் பேசுவதும் சரியான அணுகுமுறைதானா என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொருவரும் அவரவருடைய தகுதி, திறமை, வாய்ப்பு, விருப்பம் அல்லது கட்டாயம் ஆகியவற்றுக்கேற்ப ஏதாவது ஒரு தொழிலை பிழைப்புக்காக மேற்கொள்வதைப் போல ஆசிரியர் தொழிலும் ஒருசிலரின் பிழைப்புக்கான தொழில் என்பதுதான் இன்றைய உண்மை நிலை.
ஆசிரியர்கள் அனைவரும் மிகப் புனிதமான வேற்று உலகத்திலிருந்து வந்த முனிவர்களும் இல்லை கற்பனையான, மகிழ்ச்சி நிறைந்த சொர்க்க பூமியில் வாழ்பவர்களும் இல்லை. ஆசிரியர்களை உருவாக்கும் இன்றைய ஆசிரியர் கல்வியும் தரமானதாக இல்லை.முறையற்ற வழியில் செல்வத்தைச் சேர்ப்பதும் முறையற்ற வழியில் செல்வத்தைப் பகிர்வதும் சரிசெய்யப்படவேண்டும்.
அப்படி முறையற்ற வழியில் செல்வத்தைச் சேர்ப்பவர்கள் சுதந்திரமாக ஊரில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அதை சரிசெய்யாமல் ஆசிரியர்கள் போராடிப் பெற்ற சில உரிமைகளால் இன்று தன்னிறைவான வாழ்க்கை வாழ்வதை குற்றப் பார்வையோடு நீதித்துறையே அணுகுவது வேதனையானது. ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள வசதி வாய்ப்புகள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டியது, அதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்படவேண்டியது, ஆட்சியாளர்களின் பொறுப்பு. இதை ஆட்சியாளர்களை செய்ய வைக்கின்ற கடமையும் கண்காணிக்கின்ற பொறுப்பும் மக்களாட்சியின் நான்காவது தூண் என்று கருதப்படும் நீதித்துறையின் பொறுப்பு.
 
கு.தியாகராஜன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
சமீபகாலமாக ஆசிரியர்கள் சார்ந்து தினம் தினம் ஏதேனும் அறிக்கைகள் அரசிடமிருந்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ஜாக்டோ ஜியோ (jacto-geo) போராட்டத்திற்கு பிறகு ஆசிரியர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாணவர் நலன் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று சொல்லி பல்வேறு அறிவிப்புகளை தினம் தினம் அறிவித்து ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை சோர்வடைய செய்திருக்கிறது. குறிப்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு ஆசிரியர்களை அதிர்ச்சியிலும்
குழப்பத்திலும் மன உளைச்சலிலும் இருக்கச் செய்கிறார்.
பெரும்பாலும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்புகள் ஏதும் நடைமுறைக்கு வருவதில்லை. அறிவிப்புகள் அறிவிப்புகளாகவே இருந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் நீதிமன்றத்தை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை ஆசிரியர்களின் சொத்து மதிப்பினை பதிவிட வேண்டும் என்று சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எனில், அரசு ஊழியர் நடத்தை விதிகளின் அடிப்படையில் சொத்துக் கணக்குகளைக் காட்டுவது இயல்பு என்றாலும், இப்படி ஆசிரியர்களை மட்டும் குறிவைத்து சொத்துகளை பதிவு செய்யவேண்டும் என சொல்வதும் அதைப் பல்வேறு ஊடகங்களில் வெளியிட்டு ஆசிரியர்களை கேலிப் பொருளாக சித்திரிப்பதும் வேதனையிலும் வேதனை.
ஆசிரியர்கள் யாரும் சொத்து மதிப்பை வெளியிடுவதற்கு அஞ்சுவதில்லை மாறாக அரசுப் பணத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் இதுபோல சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று சொன்னால் ஏற்புடையதாக இருந்திருக்கும். குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள், நீதிமன்ற நீதிபதிகளிலிருந்து கடைக்கோடி அரசு ஊழியர் வரை இந்த சொத்து மதிப்பை வெளியிட வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தால் ஏற்புடையதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் ஆசிரியர்களை மட்டும் குறிவைத்து தாக்குவது எந்த வகையில் நியாயம்?
 
பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் சொத்துப் பட்டியலை வெளியிட சொல்லி அறிக்கை விடும்போது அதில் அவர்கள் வைத்திருக்கும் கடன் எவ்வளவு என்பதை தெரிவிப்பதற்கான அட்டவணை வழங்கப்படவில்லை, அதையும் இந்தப் பட்டியலில் வழங்கி ஆசிரியர்களின் உண்மையான நிலையினை பள்ளிக் கல்வித்துறை முதல் நீதிமன்றம் வரை அறிந்துகொள்ளவேண்டும். ஒட்டுமொத்த ஆசிரியர் நிலைப்பாட்டையும் அறிந்து, அவர்கள் சொத்து சேர்த்ததைவிட அவர்கள் பெற்ற கடன் பெரிதாக இருக்கும்பட்சத்தில் ஆசிரியர்கள் நலன் கருதி அந்தக் கடன்களை எல்லாம் ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு ஆசிரியர்களுக்கு உதவிட வேண்டும்.
உண்மையில் அரசின் பணம் பலவகையில் கொள்ளையடிக்கப்பட்டு எங்கெங்கோ பதுக்கப்படுகிறது. அவற்றை எல்லாம் கண்டறிந்து நீதியின் முன் நிறுத்தி இந்த பணங்களை எல்லாம் கொண்டுவந்து அரசின் கஜானாவில் சேர்க்கும் முயற்சியில் அரசும் நீதிமன்றங்களும் இறங்கவேண்டும்.
அதை விட்டுவிட்டு ஏற்கனவே தினம் தினம் பள்ளிக்கல்வித் துறையால் வெளிவந்துகொண்டிருக்கும் அறிக்கைகளால் நொந்துபோயிருக்கும் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற அறிவிப்புகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருக்கிறது. எதிர்காலச் சந்ததியை உருவாக்கும் ஆசிரியர்களை நீங்கள் பெரிதும் மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை காலில் போட்டு மிதிக்க வேண்டாம்.
தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

1 comment:

  1. Public must give respect to Teachers, unless the entire society will suffer later.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments