Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவமும் பார்த்தபடி படித்த அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் ரஜினி கலையரசன்



ரஜினி கலையரசன்: யாருடைய ஆதரவும் இல்லை; ஆசிரியர்கள் தயவில் படித்தார்.. ஆசை, ஆசிரியர் ஆக வேண்டும் என்பது.. ஆனால் டாக்டராக்கி விட்டார்கள்.. இன்று  மருத்துவமும் பார்த்தபடி படித்தபள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்!

பள்ளியில் படித்து முடித்து, டாக்டர் ஆன பிறகும் நன்றி மறக்காமல், தான் படித்த தொடக்கப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தி, நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக்கொண்டிருக்கிறார் ரஜினி கலையரசன் என்ற மருத்துவர்!
கண்களைக் குளமாக்கும்  மனதைச் சுடும் அவரது வாழ்க்கை.

"ஆறு வயதில் தந்தையையும், தாயையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து நின்றேன் எனக்கு உறவுகள் இருந்தனர்; ஆனால் அவர்கள்  அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், இரவில் படுத்துறங்க மட்டும் சித்தப்பா முனியப்பா  வீட்டுத் திண்ணையில் இடம் கிடைத்தது. அதுவும் பாட்டி லட்சுமியம்மாளின் தயவால். இந்த நிலைக்குக் காரணம், என் தந்தை லட்சுமணனும், தாய் ஜம்புவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான். அப்பா, அம்மாவின் காதல் திருமணத்தை, தாத்தா-பாட்டி மற்றும் சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. இதனால் எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவு தான்."

"ஒரு கட்டத்தில் அப்பா லட்சுமணன் மர்மமாகவே இறந்து போனார். அப்பா இறந்தவுடன் அம்மா ஜம்புவை அடித்தே வீட்டைவிட்டு விரட்டி விட்டார்கள். ஆறு வயதான என்னை அப்படியே விட்டு விட்டுக் கிளம்பி எங்கோ போய் விட்டாள் அம்மா."

"அன்றுமுதல் எனக்கு உறவுகள் இருந்தும், ஒரு அநாதையாகத்தான் வளர்ந்தேன். சித்தப்பாவின் வீட்டில் தோட்ட வேலையும், மாட்டைப் பிடித்துக் கட்டுவதும், அவைகளுக்கு தீனி வைப்பதுமாக நாட்கள் கடந்தன. பிறகு மனமிரங்கி உத்தனப்பள்ளியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் பாட்டி லட்சுமியம்மாள் சேர்த்து விட்டார்.

 அப்போது முதல் எனக்கு வீட்டில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்து வந்தது.அதற்காகவே நான் நாள் தவறாமல் பள்ளிக்குச் சென்று விடுவேன். என்னுடைய பல ஆசிரியர்களை இன்றுவரை அப்பா, அம்மா என்றுதான் அழைக்கின்றேன்

 அவர்களும் மறுக்காமல் 'வாடா செல்லம்'

 என்றுதான் அழைக்கிறார்கள்."

"அதுதவிர, அப்போது எனக்குப் பள்ளியில் முக்கியமாக மதிய உணவு கிடைத்தது. ஆம்...சரியான உணவுகூட இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், பள்ளியிலும் மயக்கம் போட்டு விழுந்த நாட்களும் பல உண்டு. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரியாது, நான் எந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கு வருகின்றேன்

 என்று... காரணம், எனக்குள் ஆயிரம் துயர் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தாலும் பள்ளியில் அனைவருடனும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் நாளடைவில் என்னுடைய மயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடித்த ஆசிரியர்கள், என் பின்னணியை அறிந்துகொண்டனர்; அதன் பின் உதவத் தொடங்கினர்."

"எனக்கு மட்டும் காலை 10 மணிக்கு சத்துணவு கூடத்தில் சாதம் வடித்ததும், சாதமும் வேகவைத்த பருப்பும் போட்டுத் தருவார்கள். இதுதான் எனது காலை உணவு. பிறகு மதிய உணவைப் பள்ளியிலேயே சாப்பிட்டு விடுவேன். அதையே இரவில் சாப்பிடவும் கொடுத்து அனுப்புவார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் இரவு சாப்பிட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள் என்று பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் எங்காவது வைத்து சாப்பிட்ட பின்னரே வீட்டுக்குச் செல்வேன். இப்படியாக 5-ஆம் வகுப்பு வரை படித்து முடித்தேன்."

"படிப்பின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, ஆசிரியர்களே என்னை 6-ஆம் வகுப்பில் சேர்த்து விட்டனர். 8-ஆம் வகுப்பு முடித்தவுடன், மே மாத விடுமுறையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்ந்து, ஏரி சீரமைக்கும் வேலைக்குச் சென்றேன். அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து வைத்து 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். மீண்டும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்றேன். அப்போது, 'நீ படித்தது போதும்; தோட்டத்தில் வந்து வேலை பாரு' என்று சித்தப்பாவும், சித்தியும் தொந்தரவு தந்தார்கள். ஆனால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன் நான்.இதனால், என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி  விட்டார்கள். பாட்டி லட்சுமியம்மாளும் 'மகன் (சித்தப்பா) சொல்வதுதான் சரி' என்று என்னைக் கைவிட்டு விட்டார்."

"அப்போது, எனக்கு ஆதரவு கொடுத்தது என்னோடு படித்த சக மாணவி பிரேமா. நான் வாழ்நாள் முழுவதும் தோழி பிரேமாவுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆம். நான் 9 மற்றும் 10-ஆம் வகுப்புவரை படித்து முடிக்க, எனக்காக அவரது அப்பாவிடம் பேசி இரண்டு வருடம் அவரது வீட்டில் தங்கிப் படிக்க இடம் கொடுத்தார்."

"பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்தேன். மீண்டும் ஆசிரியர்கள் உதவினார்கள். ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பேசி இலவசமாக தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். பள்ளி நிர்வாகமும் என் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு இரண்டு வருடங்கள் இலவசமாக விடுதியில் தங்கிப் படிக்க உதவி செய்தது. முக்கியமாகப் பள்ளியின் முதல்வர் சம்பத்குமார் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்."

"தனியார் பள்ளி என்பதால் மாதந்தோறும் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடக்கும். என் சார்பாக, என் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் கூட்டத்துக்கு மாதம் ஒரு ஆசிரியர் என முறை வைத்து வந்து கலந்துகொள்வார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் கடைக்குச் செல்லும்போது பேப்பர், பேனா, பென்சில் தீர்ந்து இருக்கும் என்று வாங்கி வந்தும் தருவார்கள். என்னுடைய ஆசிரியர்கள் அனைவரின் உதவியால் அவர்கள் எதிர்பார்த்தது போலவே ப்ளஸ்-டூ தேர்வில் 1,166 மதிப்பெண் எடுத்தேன். மெடிக்கல் கட்-ஆப் 198.25 எடுத்தேன். ஆனால், எனக்கோ பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். அப்போதுதான் அன்பு காட்டும் ஆசிரியர்களுடனேயே இருக்க முடியும் என்று முடிவு செய்திருந்தேன்".

"'மருத்துவம் வேண்டாம்' என்றும் 'முடியாது' என்றும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன்; ஆனால், என்னுடைய ஆசிரியர்கள் விடவில்லை. 'மருத்துவப் படிப்பு படித்தே ஆக வேண்டும்' என்று என்னை முதல்முறையாக அடிக்கவும் செய்தனர். அன்பின் மிகுதியால், அவர்களே விண்ணப்பம் வாங்கி வந்து என்னை மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டனர். ஆனால், மருத்துவம் படிக்கவும், கட்டணம் செலுத்தவும் வசதி இல்லை.

 அப்போது நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் சார் உதவி செய்தார். கலெக்டர் கொடுத்த உதவித் தொகையை என்னுடைய பேராசிரியர் சுனிதா, எனக்குத் தேவையானபோது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்ததுடன், அவருடைய காசையும் சேர்த்து என்னை மருத்துவர் ஆக்குவதற்கு உதவி செய்தார்."

"2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். 'எங்கே போவது...?' என்று தெரியாமல் பிறந்த ஊரான கோவிந்தாபுரம் வந்தேன். ஆனால், சித்தப்பாவின் மகன்களோ, 'சொத்து, கித்துன்னு வந்தா ஒரே வெட்டு... உயிரோடு இருக்க மாட்டே' என்று மிரட்டி அனுப்பினார்கள். அதனால், நண்பர்கள் உதவியுடன் அலேசிபம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினேன்."

"நான் படித்த உத்தனப்பள்ளியில் சிவபிரகாஷ் என்ற பெயரில் கிளினிக் வைத்தேன். என்னைத் தேடி வரும் ஏழை மக்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைவான கட்டணத்தில் இப்போது மருத்துவம் பார்த்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் எனக்குத் தேவையான உடைகளை உள்ளூர் கடைகளில் வாங்கினேன். பிறகு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், துணிகளை வைக்கப் பீரோ, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவற்றை வாங்கியுள்ளேன்".

"மருத்துவத்தில் எம்.டி படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக, நுழைவுத் தேர்வு எழுத இரவு நேரத்தில் இப்போது படித்து வருகின்றேன். இந்தச் சமயத்தில்தான், கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்த உடன், என்னுடைய ஆசிரியர் கனவை நிறைவேற்றிக்கொள்ள விரும்பினேன். நான் படித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது பற்றி பேசினேன். 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தச் சொல்ல, நடத்தி வருகின்றேன். மருத்துவத்தில் கிடைக்காத நிம்மதி ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது எனக்குக் கிடைக்கிறது."

"இதற்காகத் தினமும் காலை 9 மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்குத் தமிழ் அல்லது அறிவியல் வகுப்புப் பாடம் நடத்தி முடித்துவிட்டு, பிறகு எனது கிளினிக் வந்து மருத்துவம் பார்க்கிறேன்"

"தாய், தந்தை வைத்த பெயர் கலையரசன். பிறகு எனக்குப் பிடித்த நடிகரான ரஜினி பெயரை முன்னால் சேர்த்துக்கொண்டு ரஜினி கலையரசன் என்று ஆக்கிக்கொண்டேன். ஆனால், எனக்கு என்று முகவரி கிடையாது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியால் கல்லூரி விடுதி முகவரியை வைத்து, ஆதார் கார்டு பெற்றுள்ளேன். இனிதான் எனக்கான முகவரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கவேண்டும். நான் படித்த மருத்துவப் படிப்பைப் பதிவுசெய்ய வேண்டும்"

போராட்டமே வாழ்க்கையாய் வாழ்க்கையே போராட்டமாய் வாழும் ரஜினி கலையரசன் பேசப் பேச நமக்கு நம்பிக்கை வெளிச்சங்கள் தெரியத் துவங்கின. கூடவே கண்ணீரும்...

எப்போதும் முயற்சி வெற்றி யை கொடுக்கும்
பலரின் அன்பும் பாசமும் அவரை உன்னத நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

வாழ்க வளர்க அவரின் தொண்டும் வளர்ச்சி யும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive