Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆண்டாள் டீச்சர், ஏழாம் வகுப்பு ‘சி’ பிரிவு...


அம்மாவுக்கு முதன்முதலாக வேலை கிடைத்து அவர் பணியில் சேர்ந்தது மானாமதுரையில் ஒரு குக்கிராமத்தில். சின்னக்கண்ணனூர் எனும் குக்கிராமத்தில் அம்மா தமிழ் ஆசிரியை வேலையை ஒப்புக்கொண்ட சில வாரங்களில் எங்களுக்கெல்லாம் சொந்த ஊரின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து டிசி வாங்கப்பட்டு நாங்களும் மானாமதுரை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டோம். அந்தப் பள்ளியில் சேர்க்கப்பட்ட புதிதில் எனக்கு சுத்தமாக அப்பள்ளியைப் பிடிக்கவே இல்லை. ஒவ்வொரு வகுப்பறையிலும் அப்போது 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தனர். நான் சொல்வது 1993 ஆம் ஆண்டு வாக்கில் என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்றெல்லாம் மாணவர்கள் உண்பதற்கென்று தனியே டைனிங் ஹால் எல்லாம் அரசுப் பள்ளிகளில் கிடையாது. வகுப்பறையிலும் உண்ணக் கூடாது. பள்ளி மைதானமோ சிறியது. மேல்நிலைப்பள்ளியின் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு அங்கு சரிநிகர் சமானமாக இடம் கிடைப்பதெல்லாம் அரிது. ஆதலால் பள்ளிக்கும், அருகில் இருந்த மற்றொரு அரசுக் கட்டடத்துக்கும் நடுவில் இருந்த சந்து போன்ற இடத்தில் அமர்ந்து கொண்டு மதிய உணவைச் சாப்பிட வேண்டியிருக்கும். அதிலும் மழைக்காலங்களில் நசநசவென்று பள்ளி முழுவதும் ஈரம் கசிந்து ஒரே களேபரமாக இருக்கையில் லீவு போட்டு விட்டு வீட்டில் இருந்து விடலாமா என்று பலமுறை தோன்றியதுண்டு. ஆயினும் தீவிரமான காய்ச்சல், மெட்ராஸ் ஐ, வயிற்றுப்போக்கு என்று உடல் உபாதைகள் தவிர பிறகு வேறு எந்தச் சாக்கை முன்னிட்டும் ஒருநாள் கூட விடுப்பு எடுத்துக் கொண்டதில்லை.
காரணம் ஆண்டாள் டீச்சர்... டீச்சரின் மேலிருந்த பயம். பயம் எந்தளவுக்கு இருந்ததோ அதே அளவுக்கு அவரை எங்களுக்குப் பிடிக்கவும் செய்தது தான் வினோதமான முரண்! டீச்சர் பேரழகி. அப்போதே அவருக்கு வயது 50 ஐத் தாண்டி இருக்கும். ஆனாலும் டீச்சர் எங்கள் வகுப்பில் எல்லோருக்குமே பேரழகியாகத்தான் தெரிந்தார். இதையும் பாருங்க... பூச்செடிகள், காய்கறிச் செடிகளுடன் பேசும் வழக்கமிருக்கா உங்களுக்கு? டீச்சருக்கு நல்ல எலுமிச்சம் பழ நிறத்தில் நீள்வட்ட முகம். கூந்தலை வட்டக் கொண்டையிட்டிருப்பார். பெரும்பாலும் காட்டன் அல்லது பட்டுப் புடவைகளில் தான் வருவார். கையில் ஜெயலலிதா போல கருப்பு வார் வைத்த வட்டக் கடிகாரம். முகத்தில் பெரும்பாலும் சிரிப்பே இருக்காது. ஏனென்றால் அவர் கணக்கு டீச்சர் :) பாடம் எடுக்கையில் மிக அருமையாகச் சொல்லித் தருவார். அத்தனை பொறுமையாக கணக்குப் பாடம் சொல்லித்தந்தும் மாணவிகளில் எவரேனும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். கைகளை நீட்டச் சொல்லி பிரம்பால் பட் பட்டென்று போட்டு விடுவார். அதற்கு பயந்து கொண்டே கணக்கே பிடிக்காத என்னைப் போன்ற மாணவிகளும் கூட கொஞ்சம் சிரத்தையோடு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தோம். ஆண்டாள் டீச்சரை மாணவிகளுக்குப் பிடித்துப் போனதற்கான மற்றொரு காரணம் அவர் அழகாயிருந்தார், பொறுமையாக கணக்குச் சொல்லிக் கொடுத்தார் என்பது மட்டுமல்லாமல் வேறொரு சுவாரஸ்யமான கதையும் இருந்தது. அந்தப்பள்ளியில் மூன்று டீச்சர்கள் நெருங்கிய தோழிகளாக இருந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் ஆண்டாள் டீச்சரும், விசாலம் டீச்சரும். மூன்றாவது டீச்சரின் பெயர் எனக்கு இப்போது மறந்து விட்டது. இந்த மூவரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஒன்றாகப் படித்த வகையில் தோழிகள் ஆனவர்கள். மூவருமே படிக்கும் காலத்தில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்களாம். அது என்னவென்றால்? படித்து முடித்து விட்டு வேலைக்குப் போனாலும் கூட வாழ்வில் கடைசி வரையிலும் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்பது தான் அது. இதில் ஆண்டாள் டீச்சரும், மற்றொரு டீச்சரும் எங்களது பள்ளியில் பணிபுரிந்த காலம் வரை திருமணமே செய்து கொள்ளாதவர்களாகவே நீடித்தனர். ஆனால், விசாலம் டீச்சர் மட்டும் குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக திருமணம் செய்து கொண்டதால் அந்த டீச்சருடன் இந்த இரண்டு டீச்சர்களும் பேசுவதை நிறுத்தி நட்பை துண்டித்துக் கொண்டனர் என்றொரு வதந்தி பள்ளியில் அப்போது நிலவியது. மற்ற இருவரில் அதிகம் விரோதம் பாராட்டியது ஆண்டாள் டீச்சர் தான். மூன்று பேருமே ஒரே பள்ளியில் பணியிலிருக்கையில் அதுவும் நெருங்கிய தோழிகள் எனும் போது எத்தனை வருடங்களுக்கு அந்தக் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க முடியும்? என்று நினைக்கலாம். ஆனால், ஆண்டாள் டீச்சர் தான் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையிலும் கூட அந்தக் கோபத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்திருக்கக் கூடும் என்று இப்போது தோன்றுகிறது. ஏனெனில், ஆண்டாள் டீச்சர், விசாலம் டீச்சருடன் கடைசி வரை விரோதமாகவே தான் இருந்தார். இது நிஜமோ, வதந்தியோ அதை அந்த டீச்சர்களே அறிவார்கள். ஆனால், மாணவிகளான எங்களுக்கு ஆண்டாள் டீச்சரைப் பிடித்துப் போக அந்த வளரிளம் பருவத்தில் ஒரு மிகப்பெரிய பற்றுக்கோடாக அமைந்து விட்டது மாத்திரம் நிஜமோ நிஜம்.
அப்போது உணவு இடைவேளைகளில் திடீர் திடீரென எங்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியைகளைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம்.. .அதில் ஆண்டாள் டீச்சர் வருவார். நாங்கள் ஒவ்வொருவரும் ஆண்டாள் டீச்சரின் வைராக்யம் கண்டு பிரமித்துப் போனவர்களாகப் பேசிக் கொண்டிருப்போம். அந்தக்காலத்தில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் தாமரை நெஞ்சம், மனதில் உறுதி வேண்டும், அவள் ஒரு தொடர்கதை போன்ற பெண் மயமான, நாயகி மையமான திரைப்படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களைப் போல ஆண்டாள் டீச்சரும் நித்யகன்னி விரதம் காத்து எடுத்துக் கொண்ட சபதத்தை மீறாமல் இருந்து எங்கள் மனதில் வேரூன்றிப் போனார். இதையும் கொஞ்சம் பாருங்க... கல்லூரணி அரசுப் பள்ளி 10 ஆம் வகுப்பில் 100 சதம் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு தங்க மோதிரம் வழங்கி பாராட்டு இப்படி யாராலும் இருக்க முடியாது. கடைசி வரை கல்யாணமே பண்ணிக்கல, ரொம்ப ஸ்ட்ரிக்ட், ரொம்ப ரொம்ப அழகா பாடம் நடத்தறாங்க, கடைமையுணர்ச்சி அதிகம். யாரும் சொல்லாமலே தலைமைப் பண்போட சின்சியரா இருக்காங்க. இப்படி எல்லா டீச்சர்களுமே இருந்தா அந்த ஸ்கூல் எல்லா வருஷமும் செண்ட்டம் ரிசல்ட் வாங்குமே! என்றெல்லாம் நாங்கள் பேசிக் கொள்வோம். ஆண்டாள் டீச்சர் எப்போதும் கம்பீரமாகவே இருப்பார். அவர் முகம் சோர்ந்தோ, சரியான நேரத்திற்கு வகுப்புக்கு வராமலோ, விடுமுறை எடுத்தோ நான் கண்டதேயில்லை. இப்படி ஆண்டாள் டீச்சர் எங்களுக்குள் ஒரு ஆதர்ஷ டீச்சராக ஒளிவீசிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஏழாம் வகுப்பு பி பிரிவு வகுப்பாசிரியையான எசக்கியம்மா டீச்சரின் மகள் க்ளாரா வயதுக்கு வந்து விட்டாள். இத்தனைக்கும் அவள் அப்போது படித்துக் கொண்டிருந்தது ஐந்தாம் வகுப்பு மட்டுமே. ‘ஐந்தாம் வகுப்பிலேயே உட்கார்ந்து விட்டாளே’ என்று எசக்கி டீச்சர் வகுப்பறை என்றும் பாராமல் கண்கலங்கி அழத் தொடங்க அவரைப் பிற டீச்சர்கள் எல்லோரும் சுற்றி நின்று கொண்டு தேற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் ஆண்டாள் டீச்சர் அங்கே இல்லை. ஆனால், சற்று நேரத்திற்குப் பிறகு எசக்கி டீச்சரிடம் சென்ற ஆண்டாள் டீச்சர்... பிற டீச்சர்களில் இருந்து வேறுபட்டவராக இருந்தார். எசக்கி டீச்சரின் கண்ணீரைத் துடைத்து விட்டு, இதை ஏன் இத்தனை களேபரம் ஆக்கறே எசக்கி. நாம எல்லோரும் அந்தக் கட்டத்தை தாண்டித்தானே வந்திருக்கோம். நீயே இப்படி அழுதியானா உம்பொண்ணு ரொம்பச் சின்னவ, அவ இது என்னமோ, ஏதோன்னு பயந்து மிரண்டுடப் போறா. முதல்ல அழறதை நிறுத்து. இது ஒன்னுமே இல்லை. உடம்புல நடக்கற வளர்சிதை மாற்றத்துல இதுவும் ஒரு பகுதி. இதை பூதாகரமாக்கி இல்லாத பொல்லாத கற்பனை எல்லாம் இதுல ஏத்திடாத. பொறுமையா குழந்தையை ஹேண்டில் பண்ணு’ என்று எத்தனைக்கெத்தனை அந்தச் சூழலை எளிமையாக்க முடியுமோ அத்தனைக்கத்தனை எளிமையாக்க முயன்றார். டீச்சரின் பேச்சைக் கேட்டதும் இசக்கி டீச்சரின் அழுகை நின்றது. முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தாற் போலிருந்தது. அப்படியே மகளை அரவணைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ ரிக்‌ஷா வரவழைத்து அவர் வீட்டுக்குக் கிளம்பினார்.
எசக்கி டீச்சர் சென்ற பிறகு எங்கள் வகுப்புக்குத் திரும்பியிருந்த ஆண்டாள் டீச்சரிடம் இப்போது அந்தப் பழைய சிடு சிடு முகம் காணாமல் போயிருந்தது. முகம் கனிவாகி கண்கள் லேசாகக் கலங்கினார் போல் எங்களுக்குத் தோன்றின. புடவைத் தலைப்பால் லேசாக ஒருமுறை கண்களை ஒற்றி எடுத்துக் கொண்டாற் போலிருந்தது. ஆனால் அதெல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டன. எசக்கி டீச்சரை அழ வேண்டாம் என சமாதானப் படுத்தி விட்டு ஆண்டாள் டீச்சர் ஏன் கண் கலங்கினார். சடுதியில் துடைத்துக் கொண்டாலும் அத்தனை கம்பீரமான டீச்சர் ஒரு சிறுமி ஐந்தாம் வகுப்பில் பூப்படைந்து விட்டாள் என்ற சேதி அறிந்ததும் ஏன் கலக்கம் கொண்டார்? அது மாணவிகளான எங்களைப் பொறுத்தமட்டில் வெகுநாட்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. அதெல்லாம் நடந்து முடிந்து இன்று பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மாணவியாக இருந்து சில காலம் ஆசிரியையாகவும் இருந்து பிறகு பத்திரிகைத் துறைக்கும் வந்தாயிற்று. இப்போது என்னால் ஆண்டாள் டீச்சரைப் புரிந்து கொள்ள முடிகிறது. எசக்கி டீச்சரையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏன் விசாலம் டீச்சரையும் தான். ஆண்டாள் டீச்சர்களால் என்றென்றைக்குமாக தம் மாணவ, மாணவியருக்கு ஆதர்ஷங்களாக இருக்க முடியும். ஆனால், அவர்களுக்கே அவர்கள் ஆதர்ஷங்கள் ஆனார்களா? என்பது கேள்விக்குறி. டீச்சர் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தார்? அப்படி முடிவெடுத்தவர் ஏன் பெண்கள் பள்ளியை விட்டு மாறுதலாகிச் செல்லவே இல்லை? எசக்கி டீச்சருக்கு ஆறுதல் சொல்லத் தெரிந்திருந்தவர் அப்படித்தான் தனக்குத்தானேயும் பல நேரங்களில் தானெடுத்த முடிவு குறித்து சமாதானப் படுத்திக் கொண்டிருந்திருப்பாரோ?!
சிறுமிகள் பூப்படைவதென்பது ஏன் மற்றொரு பெண்ணுக்கு அதிலும் அவர் கனகம்பீரமான டீச்சராகவே இருந்த போதிலும் கலக்கத்திற்குரிய விஷயமாகவே காலந்தோறும் இருந்து வருகிறது? (இந்த இடத்தில் அம்பையின் அம்மா ஒரு கொலை செய்து விட்டாள் சிறுகதையை நினைவு கூரக் கூடியவர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் தன்யவான்கள் என்பேன்) இந்தக் கேள்விக்கான விடையென்பது ஆண்டாள் டீச்சர் போலத் திருமணமே செய்து கொள்ளாமல் வைராக்யமாக வாழ்வதில் இல்லை. இந்த உலகின் சகலவிதமான கசடுகளையும், சாகசங்களையும், மனமயக்கிகளையும், துர்போதனைகளையும், வசீகர போதைகளையும், மமதைகளையும் மிகத்துணிவுடன், நடுநிலைத்தன்மையுடன் அணுகும் மனதுடன் நம் பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் பெற்று நாம் வளர்த்துக் காட்டுவதில் இருக்கிறதென தீவிரமாகத் தோன்றுகிறது. கட்டுரையை வாசித்த உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை மறவாமல் பகிரவும். ஒவ்வொரு ஆசிரியர் தினத்துக்கும் என் நினைவில் பளிச்சென மின்னிக் கொண்டிருக்கும் ஆண்டாள் டீச்சருக்கு என் வந்தனங்கள். ‘உங்க கிட்டப் படிச்ச எல்லாருக்குமே உங்க நினைவு நிச்சயம் இருக்கும் டீச்சர். ஹேப்பி டீச்சர்ஸ் டே!’




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive