தினமும் புதிதாக கற்க வேண்டும் என்ற ஆவலும், மாணவர்களை அன்புடன் நடத்தும் பண்பும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய இரு முக்கிய அடிப்படைத் தகுதிகளாகும் என, என்.எல்.சி., இயக்குனர் பேசினார்.என்.எல்.சி., இந்தியா நிறுவன கல்வித்துறையின் சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. என்.எல்.சி.,முதன்மை பொதுமேலாளர் மோகன் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை செந்தாமரை வரவேற்றார். என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன், அந்நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட 20 நல்லாசிரியருக்கு விருது வழங்கினார்.அப்போது அவர் பேசுகையில், 'தினமும் புதிதாக கற்க வேண்டும் என்ற ஆவலும், மாணவர்களை அன்புடன் நடத்தும் பண்பும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய இரு முக்கிய அடிப்படைத் தகுதிகளாகும்.
புத்தகத்தை மட்டும் படிக்காது, பாடம் தொடர்பாக இதர ஊடகங்களையும் படிக்க தூண்டுதல், புத்தகங்களின் பக்கங்களை மனப்பாடம் செய்யாது, செயல்முறை விளக்கத்துடன் புரிய வைத்தல், ஆசிரியர்களாக மட்டும் திகழாது, மேலாண்மை திறன் மிக்க சிறந்த நிர்வாகியாகவும் செயல்படுதல் ஆசிரியர்களுக்கு அவசியமாகும்' என்றார்.விழாவில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில், பயிற்று வித்த பாடங்களில், மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற செய்த, 142 என்.எல்.சி., பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பெண் குழந்தைகளிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 வகுப்புகளில், முதல் இரு இடங்களை பெற்ற மாணவிகளுக்கு, என்.எல்.சி., ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., யில், மாநில பாடத்திட்டத்தின் கீழ், தமிழ் வழியில் பயின்ற இரு மாணவிகளுக்கும், ஆங்கில வழியில் பயின்ற இரு மாணவிகளுக்கும், மத்திய பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.பிளஸ் 2 வகுப்பில், மாநில பாடத்திட்டத்தின்கீழ், தமிழ் வழியில் பயின்ற இரு மாணவிகளுக்கும், ஆங்கில வழியில் பயின்ற மூவருக்கும், மத்திய பாடத்திட்டத்தின்கீழ் பயின்ற 5 மாணவிகளுக்கும் இத்திட்டத்தின்கீழ் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...