(1) அரசு தொடக்க / நடுநிலை /உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை, கற்பிக்கும் திறன்
போன்றவற்றை கண்காணித்திட வேண்டும்.

(2) அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரேனும் விடுப்பு எடுத்தாலோ
அல்லது அவசர பணிநிமித்தமாக வட்டாரக் கல்வி அலுவலகம் / வட்டார
வள மையம் சென்றாலோ அல்லது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள
சென்றாலோ பதிலி ஆசிரியர்களை மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.

(3) அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தற்செயல் விடுப்பு மற்றும்
வரையறுக்கப்பட்ட விடுப்பு குறித்த தகவல் குறுவள மையமாக செயல்படும்
பள்ளியின் தலைமையாசிரியருக்கு அனுப்ப வேண்டும். இதர விடுப்பு
குறித்த விண்ணப்பம் இத்தலைமை ஆசிரியர் வழியாக உரிய அலுவலருக்கு
அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

(4) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட
உதவிகள் உரிய வகையில் சென்றடைகின்றதா என்பதை கண்காணித்திட
வேண்டும்.

(5) பள்ளிகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை வட்டாரக்
கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள்/ முதன்மைக் கல்வி
அலுவலர்கள் ஆகியோருக்கு புகாராக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு
அளிக்கப்பட்ட புகாரின் மீதான இறுதி நடவடிக்கை தீர்வு கிடைக்கும் வரை
தொடர்ந்து அப்புகார் குறித்து கண்காணித்திட வேண்டும்.

(6) பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏதேனும் செய்யப்பட
வேண்டியதிருப்பின் உரிய அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து அப்பணி
முடியும் வரை தொடர் நடவடிக்கைகளைக் கண்காணித்திட வேண்டும்.

(7) பள்ளிகளில் பயிலும் மாணவர்களது அறிவாற்றலை மேம்படுத்திட
உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வக
உபகரணங்களைப் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(8) பள்ளிகளில் பயிலும் மாணவர்களது கற்கும் திறனை ஊக்குவிக்கும்
பொருட்டு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் smart
class வகுப்புகளை பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(9) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆர்வத்தினையும் உடல் நலனையும்
மேம்படுத்திட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி
ஆசிரியர்கள் மூலம் விளையாட்டு வகுப்புகள் எடுக்க உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.

(10) பள்ளிகளில் பயிலும் மாணவர்களது பாதுகாப்பினையும் (safety of
students) கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும்.

(11) பள்ளிகளில் பயிலும் மாணவர்களது கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை
மேம்படுத்தி கல்வித்தரத்தினை உயர்த்த உரிய அனைத்து
நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

(12) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் Hi-Tech உயர் தொழில் நுட்ப
ஆய்வகங்கள் துவங்கி கணினி வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதால்,
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்குறுவள மையத்தின்
எல்லைக்குள் செயல்படும் அனைத்து வகையான அரசு தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி
கணினி சார்ந்த திறன்களை பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்களின் பணி மற்றும் ஊதியம் சார்ந்த நடைமுறைகளில் தற்போதுள்ள
முறையே தொடரும் எனவும், அரசு ஆணையிடுகிறது.