மழைக்கால நோய்களை விரட்டிட, வீடுகளை சுத்தமாக வைத்திருப்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்தப் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், எதிர்பார்க்காத ரிசல்ட் வந்திருப்பதாக பூரிக்கின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.
மாணவ விழிப்புணர்வு தூதர்கள்
மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் சென்னையைப் பாதிப்பது வழக்கமாகிவிட்டது.
துரைப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் தொடங்கி, அடையாறு போட் க்ளப் ஏரியா பங்களாக்கள் வரை, கொசுக்கள் ராஜ்ஜியம் செய்யும். மாநகராட்சி அதிகாரிகள் எத்தனை முறை கொசுமருந்து அடித்தாலும், குப்பைகளை அள்ளினாலும் சரி, கொசுக்களின் உற்பத்தியை மட்டும் கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இம்முறை அந்த வழக்கத்தை தகர்த்தெறிய அரசுப் பள்ளியில் பயிலும் 20,000 மாணவர்களை விழிப்புணர்வு பிரசார தூதர்களாக களமிறக்கி புதுமை படைத்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த மாணவர்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை அளித்து, திட்டத்தை தொடங்கிவைத்தார, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள 281 அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1.25 லட்சம் மாணவர்களில் இருந்து, 20,000 பேர் விழிப்புணர்வு தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் தேங்கும் மழைநீர், கழிவுகளால் ஏற்படும் வியாதிகள் குறித்து இந்த மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது. வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், வியாதிகள் உருவாவதை எப்படித் தடுக்கலாம்? கொசுக்கள் உற்பத்தியைத் தடுப்பது எப்படி என்பது குறித்தும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரசார நோட்டீஸ்கள், அவர்களது வீடு, சுற்றுப்புற ஏரியாக்களுக்கு அனுப்பப்படுகிறது. பள்ளி மாணவர்களை வைத்து வீதிப் பிரசாரம் செய்யவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...