NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி மாணவர்களிடம் டிக் டாக் மோகம் அதிகரிப்பு: பெற்றோர், ஆசிரியர்கள் அலட்சியம்



உலகளவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சி மிகப்பெரிய அளவிலான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் மணி கணக்கில் செலவிடுகின்றனர். இந்திய பிரதமர் முதல் அனைத்து தரப்பினரும்  உடனுக்குடன் தங்களின் கருத்துகளை பதிவிட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஸ்மார்ட் போன்களில் அதிகளவில் தங்களின் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.  மாணவர்கள் போன்களில் கேம் விளையாட அதிகளவில் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது டிக்டாக் ஆப் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் ஆப் 50 கோடிக்கும் மேலானவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி  வருகின்றனர்.

இந்த ஆப் சமீபகாலமாக இளைஞர்களை மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், திருமணம் நடந்தவர்கள் என அனைவரையும் கவர்ந்துள்ளது. இதில், தங்களின் திறமைகளை பலர் வீடியோவாக எடுத்து  பதிவேற்றம் செய்கின்றனர். சினிமாவில் வரும் ஒரு பாடல் காட்சி அல்லது சோக காட்சிகள், காமெடி காட்சிகள், பின்னணி இசையை வைத்து, அதற்கு ஏற்றவாறு நடனம் ஆடுதல், வசனம் பேசுதல், நடித்து காட்டுதல் போன்று டிக்டாக்  செய்கின்றனர். இன்னும் சில இளைஞர்கள் சாகசங்களை வீடியோவாக பதிவேற்றம் செய்கின்றனர். இதுபோன்ற வீடியோவால் பலர் பிரபலமடைந்துள்ளனர். வீடியோவிற்கு வரும் லைக்ஸ், கமண்ட்ஸ் போன்றவை ஒருவரை மீண்டும் மீண்டும்  டிக்டாக் செய்ய தூண்டிவிடுகிறது.

ஆண்களைவிட பெண்களின் வீடியோக்களுக்கு லைக்ஸ் அதிகளவில் அளிக்கப்படுகிறது.  இதில், சமீபகாலமாக ஆபாச காட்சிகள், ஆபாச வார்த்தைகள் கொண்ட வீடியோக்கள் அதிகரித்து உள்ளது. இது பள்ளி மாணவர்களிடம் ஒரு விதமான  பெரிய மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் பலர் டிக்டாக் செயலிக்கு அடிமையாகியுள்ளனர்.  பள்ளி சீருடையில் 2 மாணவிகள் கடற்கரையில் ராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடும்  வீடியோக்கள் டிக்டாக்கில் பிரபலம். இவர்கள் பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பறை, பேருந்து நிறுத்தம் என அனைத்து இடங்களிலும் பள்ளி சீருடையில் வீடியோவை வெளியிடுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மாணவர்கள் வகுப்பிற்கு வரும் ஆசிரியர், ஆசிரியை ஆகியோரின் நடவடிக்கையை வீடியோவாக எடுப்பது, சக மாணவிகளிடம் சில்மிஷம் செய்வது, பள்ளிகளில் சாகசம் செய்வது போன்ற வீடியோக்களை  பதிவிடுகின்றனர். பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர், ஆசிரியர்களுக்கு தெரியாமல் பள்ளிகளுக்கு மொபைல் போன்களை கொண்டு சென்று இது போன்ற நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டு  வருகின்றனர். பல வீடியோக்களில் ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து செய்கின்றனர். பெற்றோர் தங்களின் குழந்தைகளுடன் வீடியோ செய்கின்றனர்.  இந்த டிக்டாக் ஆப் தமிழகத்தில் மிகப்பெரிய கலாசார சீரழிவை ஏற்படுத்துவதாக சமூக  ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிராமப்புற மாணவர்களை விட நகர்ப்புற மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த மோகம் அவர்களின் பள்ளிப்படிப்பை மட்டுமின்றி எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் என மனநல மருத்துவர்கள்  எச்சரித்துள்ளனர். இது குறித்து பேராசிரியர் மற்றும் கோவை அரசு மனநல மருத்துவர் ஜெகதீசன் கூறியதாவது: தங்களின் நிறைவேறாத ஆசைகளை வெளிப்படுத்த மாணவர்கள் டிக்டாக் போன்றவற்றின் மூலம் நிறைவேற்ற முயல்கின்றனர்.  விரக்தி, ஏமாற்றம், தனிமையில் இருக்கும் நபர்களுக்கு இது தீர்வாக இருக்கும் என நினைக்கின்றனர்.  இதனால் திரும்ப திரும்ப செய்கின்றனர். லைக்ஸ், கமண்ட்ஸ் பெற அதிகளவில் பணத்தை செலவிடுகின்றனர். பொய் கூறுதல், திருடுதல்  போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது மாணவர்களின் கல்வி அறிவை பாதிக்கிறது. மேலும், சமூகம் மற்றும் குடும்பம், உறவுகளிடம் நாட்டம் இல்லாமல் போகிறது.

மாணவர்கள் டிக்டாக்கிற்கு அடிமையாகி வருவதற்கு அவர்களின் பெற்றோர், நண்பர்கள்தான் முக்கிய காரணமாக உள்ளனர். மாணவனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். உடனடியாக  பள்ளிகளில் உள்ள உளவியல் ஆலோசகர் மூலம் கவுன்சலிங் அளிக்க வேண்டும். இது ஒரு தீர்வை அளிக்கும்.  இதில், தீர்வு கிடைக்கவில்லை என்றால் அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநல மருத்துவரை அணுகலாம். இலவசமாக  கவுன்சலிங் அளிக்கவும், மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்னைகளை தீர்க்கவும் ஆலோசனைகள் வழங்கப்படும். மொபைல் போன்களை பள்ளிகளுக்கு எடுத்து செல்வதை தடுக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு போன்களை அளிக்கக்கூடாது. இது அவர்களின் கல்வி அறிவை மட்டுமின்றி எதிர்காலத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற காரணங்களுக்காக பல மாணவர்கள் தற்போது மனநல மருத்துவர்களிடம் வருகின்றனர். இவ்வாறு  மருத்துவர் ஜெகதீசன் கூறினார். கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது: டிக்டாக் போன்றவை மாணவர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஒரே இடத்தில் இருப்பதை விரும்புகின்றனர். உடல் உழைப்பு  குறைகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது. இளம் வயத்தில் கண்ணாடி போடும் நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, ரியல் லைப்பில் இருந்து ரீல் லைப்பிற்கு செல்கின்றனர். இது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.  மாணவிகள் வெளியிடும் போட்டோ, வீடியோக்களை தவறாக  பயன்படுத்தும் நிலை உண்டாகிறது. இதனால், மனரீதியாக அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் அன்றாட நடவடிக்கையை பெற்றோர், ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். அவர்களுடன் நீண்ட நேரம் செலவிட  வேண்டும். தொடர் கவனிப்பால் இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு டீன் அசோகன் கூறினார்.

பள்ளிகளில் உளவியல் கவுன்சலிங் முடக்கம்: அரசு பள்ளி மாணவ, மாணவிகளிடம் உளவியல் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். உளவியல் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்  பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து அவர்களுக்கு கவுன்சலிங் அளிப்பார்கள். மொபைல் போன் பயன்பாடு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள். இந்நிலையில், உளவியல் கவுன்சலிங் திட்டம் பள்ளிகளில்  முடக்கம் அடைந்துள்ளது. இதனால், மாணவர்களிடம் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. உளவியல் கவுன்சலிங் திட்டம் மாணவர்களிடம் முறையாக சென்றடையவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive