காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதுதான் சுகாதாரம் என்றும் காது குடைவதால் சுகமாக இருக்கிறது என்றும் பலர் `பட்ஸ்' மூலம் காதை சுத்தப்படுத்துகின்றனர்.`பட்ஸ்' பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. எவ்வளவு அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள் ஓர் அதிர்ச்சி தரும் நிகழ்வை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். தொடர்ந்து `பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஜாஸ்மின். அவர் காதைச் சுத்தப்படுத்த தினமும் `பட்ஸ்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இரவுநேரத்தில் காட்டன் பட்ஸ் மூலம் காதைச் சுத்தப்படுத்தினால்தான் அவருக்குத் தூக்கம் வரும் என்றொரு நிலை. இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாக அவருக்கு இருந்திருக்கிறது
ஒரு கட்டத்தில் அவரது இடது காது கேட்பதில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காதில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தார் மருத்துவர். ஆனால் ஜாஸ்மினுக்கு காது கேட்கும் திறனில் ஏற்பட்ட குறைபாடு சரியாகவில்லை. ஆனாலும் `பட்ஸ்' பயன்படுத்தும் பழக்கத்தை அவரால் கைவிடமுடியவில்லை.
ஒருநாள் அவர் `பட்ஸ்' பயன்படுத்தியபோது அதில் ரத்தம் படிந்திருந்ததைப் பார்த்திருக்கிறார். உடனே, மீண்டும் மருத்துவரைச் சந்தித்திருக்கிறார். காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனையைச் செய்யச் சொன்னதுடன் காது, மூக்கு, தொண்டை நிபுணருக்குப் பரிந்துரைத்தார் அந்த மருத்துவர்.
காது, மூக்கு, தொண்டை நிபுணர் `சி.டி ஸ்கேன்' எடுக்கும்படி சொல்ல, அதன் முடிவில்தான் அவருக்கு ஏற்பட்ட பிரச்னையின் தீவிரம் வெளிப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக `பட்ஸ்' பயன்படுத்தியதால் அவரது காதில் பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்பட்டு, அது காதுக்குப் பின்னால் இருக்கும் மண்டை ஓட்டை அரித்திருக்கிறது.
`காட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே தங்கியிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. காதுகளைச் சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ்தான் பாதுகாப்பானது என்கிற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் காட்டன் பட்ஸை காதுக்குள் செலுத்தக்கூடாது என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை'
`ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் என்னை அணுகியிருக்க வேண்டும்' என்று ஸ்கேன் முடிவைப் பார்த்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நோய்த்தொற்று ஏற்பட்டு மண்டை ஓடு அரிக்கத் தொடங்கி, தற்போது அது தீவிரமாகியிருக்கிறது. உடனடியாக ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின்போது நோய்த்தொற்று திசுக்கள் அகற்றப்பட்டு, காது துவாரம் மீண்டும் சீரமைக்கப்பட்டது. `காட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே தங்கியிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. காதுகளைச் சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ்தான் பாதுகாப்பானது என்கிற தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் காட்டன் பட்ஸை காதுக்குள் செலுத்தக் கூடாது என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை' என்று அறிவுறுத்தினர் மருத்துவர்கள்.
ஜாஸ்மினுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து தீர்வு காணப்பட்டாலும், அவரது இடது காது கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ``பல ஆண்டுகளாக நான் பட்ஸ் உபயோகித்ததால் என் காதின் உள்ளே சிறிய நார்ப்பொருள் தேங்கியிருந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக என் காதின் பின்னால் இருந்த மண்டை ஓடு ஒரு பேப்பர் அளவுக்கு அரித்துவிட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அது குணமடைந்துவிட்டாலும் ஒருபக்க காது கேட்கவில்லை. இப்போது நான் சந்திக்கும் அனைவரிடமும் `பட்ஸ்' உபயோகிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்கூறி வருகிறேன். காது என்பது மிகவும் மென்மையான சென்சிட்டிவ்வான உறுப்பு என்பதால், அதை மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டும்" என்கிறார் ஜாஸ்மின் இப்போது.
`பட்ஸின் முனையில் உள்ள பஞ்சு காதுக்குள் சிக்கிக்கொண்டதால், ஓர் ஆணுக்கு மண்டை ஓட்டில் நோய்த்தொற்று ஏற்பட்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆவணப்படுத்தியிருக்கின்றனர். `காதுக்குள் இருக்கும் அழுக்கை அகற்ற `பட்ஸ்' போன்ற பொருள்களைப் பயன்படுத்தும்போது எதிர்உருவாக்கம் நிகழ்ந்து காதில் இருக்கும் மெழுகு மீண்டும் காதிலேயே தங்கிவிடும்.
அது காதுக்குள் உறுத்தலையும் காயங்களையும் ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக காது ஜவ்வில் ஓட்டை விழுவது, நோய்த்தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்படும். பாதிப்பின் தீவிரம் அதிகரித்தால் முழுமையாக செவித்திறனை இழக்க நேரிடும்' என்று காது சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கண்களில் பார்வைத்திறன் குறைந்தால் அதை மீட்டெடுத்துவிட முடியும். ஆனால் காதுகளில் கேட்கும் திறனை இழந்துவிட்டால் அதை சிகிச்சைமூலம் மீட்டெடுக்க முடியாது. அதனால் காது குடைய பட்ஸ்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதுதான் நல்லது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...