கற்பித்தலில் புதிய யுத்திகளை நடைமுறைப்படுத்தவும், வகுப்பறையில் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவாதித்து, தீர்வுகளைக் கண்டறியவும் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. நவீன வளர்ச்சிக்கேற்ப, ஆசிரியர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளவும், புத்துணர்வு பெறவும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
“இந்தப் பயிற்சிகளால் கூடுதல் பணிச்சுமையே மிஞ்சுகிறது” என்ற குமுறல் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க கல்வித்துறையில் மூன்று அமைப்புகள் உள்ளன. SSA எனப்படும் அனைவருக்கும் கல்வித்திட்டம், RMSA எனப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், DIET எனப்படும் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஓராண்டுக்கு ஒரு ஆசிரியருக்கு SSA மூலம் 20 நாட்களும், RMSA மூலம் 21 நாட்களும் பயிற்சி்கள் வழங்கப்படும். இதுபோக, DIET மூலம், சுகாதாரப் பயிற்சி, வாழ்வியல் திறன் பயிற்சிகள், பாடங்கள் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுவதுண்டு. ஒரு ஆசிரியர், பாடங்களில் தெளிவு பெறவும், புத்துணர்வு பெறவும் பயிற்சிகள் இன்றியமையாதவை.
ஆனால், அது ஒரு அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அலுப்பைத்தான் உருவாக்குகின்றன. இவை தவிர, தேர்தல், மக்கள்தொகை கணக்கெடுப்பு என கல்வித்துறை சாராத பயிற்சிகளும் ஏராளம் உண்டு. அவை கூடுதல் சுமை என்ற மனநிலையில் தான் பெரும்பாலான ஆசிரியர்கள் பயிற்சிகளுக்குப் போய் வருகிறார்கள்.
பெரும்பாலான, (பயிற்சி வழங்குவதற்கான) கருத்தாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறந்த ஆசிரியர்கள் கருத்தாளர்களாக முன் வருவதில்லை. SSA திட்டத்தில் பயிற்சிகள் வழங்குவதற்கு BRT எனப்படும் வட்டார வளமைய ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்திய அனுபவம் இல்லை. நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். அதனால், பள்ளியில் ஆசிரியர்கள் சந்திக்கும் பிரசினைகள் பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சில நேரங்களில் கல்லூரி பேராசிரியர்களைப் பயன்படுத்துகின்றனர்.
பள்ளிக் கல்விக்கும் பேராசிரியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதனால், பயிற்சியின் நோக்கம் நிறைவேறாமலே போய்விடுகிறது. ஒரு ஆசிரியர் ஓராண்டில் 20 முதல் 40 நாட்கள் வரை பயிற்சிக்காக செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருந்தால் 5 ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவார்கள். மீதமுள்ள 5 பேர்தான் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு கூடுதல் சுமையாகி விடுகிறது. இவை மட்டுமல்ல... ஆசிரியர்கள் செய்ய வேண்டிய கற்பித்தல் அல்லாத வேலைகள் இன்னும் ஏராளம் இருக்கிறது.
மாணவர்களுக்கு சீருடைகள், பாடநூல்கள், காலணிகள், பை போன்ற நலத்திட்டப் பொருள்களை பெற்று வந்து வழங்குவது, அதற்கான பதிவேடுகளைப் பராமரிப்பது, சாதி, வருமானம், இருப்பிடச் சான்றுகளை பெற்று வழங்குவது, மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றுக்கான தேவைப்பட்டியல் தயாரிப்பது, வழங்கிய விவரங்களை இணையத்தில் பதிவிடுவது, பெண்கல்வி ஊக்கத்தொகை, சாதி வாரியான உதவித்தொகைகள், பவர் பைனான்ஸ், தேசிய திறனறி தேர்வு, ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனறி தேர்வு போன்ற உதவித்தொகைகள் பெறுவதற்காக மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குவது, கணக்கு விபரங்களை இணையத்தில் பதிவேற்றுவதோடு, குறுந்தகடாகவும், அச்சிட்ட நகலாகவும் உரிய அலுவலகங்களுக்கு வழங்குவது, பஸ்பாஸ் பெற்றுத் தருவதற்கான நடைமுறைகளை மேற்கொள்வது என அந்த பட்டியல் நீள்கிறது.
இவைதவிர, தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, மகப்பேறு விடுப்பு என பல்வேறு விடுப்புகளையும் எடுக்க நேரும். இவையெல்லாம் போக மீதமுள்ள நாட்களில்தான் கற்பித்தல் பணி. இந்தநிலையில் தான் அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. இந்தச் சூழலை மாற்ற வேண்டுமானால், ஆசிரியர்களை கற்பித்தல் சாராத வேறு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். பயிற்சியை தகுதிப்படுத்த வேண்டும். நலத்திட்டங்களை வழங்கிட தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் துறை சார்ந்த வல்லுநர்களை பயிற்சிக்கான கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும். ஒவ்வொரு பயிற்சியும் உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். இதைத்தான் ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
"ஒரு ஆசிரியர் ஓராண்டில் 20 முதல் 40 நாட்கள் வரை பயிற்சிக்காக செல்ல வேண்டியிருக்கிறது. ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருந்தால் 5 ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவார்கள் மீதமுள்ள 5 பேர்தான் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்."
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...