Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தினந்தோறும் குழந்தைகள் தினமாகட்டும்..!பெற்றோருக்கு ஆசிரியை எழுதிய கடிதம்!


குழந்தைகள் தினம்: பெற்றோருக்கு ஓர் ஆசிரியை எழுதிய கடிதம்!

குழந்தைகள் தினத்தை வெறும் கொண்டாட்டங்களுடன் கடக்கப் போகிறோமா? இல்லை இந்த ஒரு நாள் அவர்களுடன் உட்கார்ந்து, அவர்களுக்காக நேரத்தைச் செலவிடும் நாளாகச் சிறப்பிக்கப் போகிறோமா?

குழந்தைகளுக்கு என எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கிறோம். ஆனால் பெற்றோராகிய நமது பங்களிப்பை, நேரத்தை சரியாக அளிக்கிறோமா? நவீன காலகட்டத்தில் குழந்தைமையை மெல்ல மெல்லத் தொலைக்க வைத்துக்கொண்டு இருக்கிறோம். அறிவாற்றல் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அவர்களது உள்ளார்ந்த தேவைகளை மறக்கிறோம்.

தினந்தோறும் இரவு 9 மணிக்கு சிறப்பு வகுப்புகள் முடித்து வீடு திரும்பும் பக்கத்து வீட்டுக் குழந்தையை சற்றே கவலையுடன் உற்று நோக்குகிறேன். அந்தக் குழந்தைக்கு 12 வயதிருக்கும். 'இந்த வயதில் என்ன சிறப்பு வகுப்பு?' என்று குழந்தையின் அம்மாவிடம் விசாரித்தேன். நீட் பயிற்சிக்காக இப்போதிருந்தே சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகின்றனராம். தம் கனவுகளை எல்லாம் தன் குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோராய் இருந்துகொண்டே குழந்தைகள் தினத்தையும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

என் பிள்ளை அதுவாக வேண்டும், இந்தத் துறையில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர், குழந்தையின் வாழ்வியலைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். பண்புகள் நிறைந்த குழந்தையாக என் பிள்ளை வர வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்களே இன்று இல்லை என்றே சொல்லலாம்.

இன்று குழந்தைகளிடையே தெரு விளையாட்டுகள் இல்லை. ஆராவாரம் இல்லை. குதூகலம் நிறைந்த குழந்தைமையைத் தொலைக்க வைத்து, போட்டித் தேர்வுகளுக்காக அவர்களை முன் தள்ளுகிறோம். இங்கே ரசனைகள் கூட போட்டிகளாகி விடுகின்றன. தனித்திறன் வகுப்புகளுக்கு அனுப்புகிறோம். அந்தக் கலையைக் கற்றுக் கொள்ளவா என்றால் இல்லை. போட்டிகளே பிரதான நோக்கமாக இருக்கிறது.

சென்ற தலைமுறையில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 300-க்கு மேல் எடுத்தாலே குழந்தைகளைக் கொண்டாடும் பெற்றோர் இருந்தனர். ஆனால் இன்று அதிக மதிப்பெண்களுக்காக குழந்தைகளை அழுத்தும் சமூகக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். விரும்பிய துறையில் பரிணமிக்க விடாமல், கட்டாயங்களின் பிடியில் பிள்ளைகள் திணிக்கப்படுகின்றனர்.

என் பிள்ளைக்கு எல்லாவற்றையும் தருகிறேன் என்று கூறும் பெற்றோர், எதையெல்லாம் குழந்தையை இழக்கச் செய்திருக்கிறோம் என்று யோசித்ததுண்டா? சாதனையாளர்களைப் போல நம் குழந்தைகள் வர வேண்டும் என்ற பெற்றோரின் போராட்டத்தில், குழந்தைகள் நீண்ட தூரம் ஓடிக் கொண்டே இருக்கின்றனர். ஒரே ஒரு நிமிடம் நின்று, 'நீங்கள் ஏன் அந்த சாதனை மனிதர்களைப் போல் இல்லை?' என்று அவர்கள் கேட்க நினைத்தால் நம் பதில் என்னவாக இருக்கும்?

பிள்ளைகளின் கேள்விகளை எதிர் கொள்வதற்கு நாம் தயாராக இல்லை. காரணம் நாம் நம்மைப் புதுப்பித்துக் கொள்வதில்லை. விளைவு, அலைபேசியில் தன் கேள்விகளுக்கான விடைகளைத் தேட ஆரம்பிக்கும் பிள்ளைகள் அதன் மாய வலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். கைத்தொழிலாக அலைபேசியின் வித்தைகளைக் கற்றுக் கொள்கின்றனர். படிப்பு, பணம், பதவி என்பதற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், அவர்களுக்கான பண்பை ஊட்ட ஆரம்பித்தால் மட்டுமே இனி வரும் தலைமுறை விழித்துக் கொள்ளும்.

காட்டில் ஒரு போட்டி நடந்தது. நடுவராக இருந்த மான், குதித்து ஓடும் போட்டியை அறிவித்தது. இந்தப் போட்டி அனைத்து விலங்குகளுக்கும் சாத்தியமா? என்பதை அந்த மான் சிந்திக்கவில்லை. காரணம் மானின் பார்வை, அதன் திறன் சார்ந்ததே. அதே தான் இங்கேயும் நடக்கிறது. 'ஒரே மாதிரியாகத்தான் சமைக்க முடியும். உனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும்' என்ற நிலையே குழந்தைகளுக்கான ஆகப் பெரிய வன்முறை. அதைத்தான் இந்த சமூகம் திணிக்கிறது.

'எனக்கு இது பிடிக்கும்' என்ற குழந்தையின் விருப்பத்தை மறுத்து, 'உனக்கு இது நல்லாயிருக்கும்' என்ற திணிப்பினைத் தருகிறோம். வேறு வழியே இல்லாமல் குழந்தைகளும் அதை ஜீரணித்துக் கொள்கின்றனர் . அவர்களுக்கான வாய்ப்புகள் இங்கே மறுக்கப்படுகின்றன. கல்வி என்பதைப் பெரும் பாறாங்கல்லாக இந்தச் சமூகம் குழந்தைகள் மீது அழுத்துகிறது.

குழந்தை பிறந்து தலை நிற்கவே சில மாதங்கள் ஆகின்றன. காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றல், சிறு தேர் என்று குழந்தைப் பருவத்தையே பத்துப் பருவங்களாக வகுக்கிறது பிள்ளைத் தமிழ். இந்தப் பருவங்களையெல்லாம் ஒரே தாண்டலில் தாண்ட வைத்து, மழலை மணம் மாறும் முன்னே பள்ளியில் கொண்டு திணித்து விடுகிறோம்.

வகுப்பறையில் நான் கேட்கும் கேள்விகளைத் தாண்டி வேறொரு பரிணாமத்தில் பதிலளிக்கும் குழந்தை என் வகுப்பில் உண்டு. ஆனால் அவனால் தேர்வில் ஒரு கேள்விக்குக் கூட சரியாக பதில் எழுத முடியாது. அவனது பெற்றோரிடம் 'உங்கள் பிள்ளை புத்திசாலி' என்று கூறினால், அதை அவர்கள் ஏற்கத் தயாராக இல்லை. அவனது தேர்வுத் தாளைக் காட்டி மதிப்பெண்களைப் பற்றியே பேசுகின்றனர். தேர்வு மட்டுமே அவனது அறிவின் எல்லையை வகுப்பதாக நம்பப்படுகிறது. இது மாறுவது எப்போது?

'பள்ளிக்கூடம் வந்தா சோறு போடுவீங்களா?' என்று காமராசரிடம் கேள்வி கேட்ட ஒரு குழந்தையால்தான் புகழ்பெற்ற மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று 'அதிகப்பிரசங்கி போல பேசாதே' என்று வாய்ப்பூட்டு போட்டு விடுகிறோம். கல்வி என்பது ஒருவருக்குள் சுதந்திரச் சிந்தனையை விதைக்க வேண்டும்.

பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளின் உடலியல் மற்றும் உளவியல் தேவைகளை நாம் பூர்த்தி செய்கிறோமா என்று சிந்தனை செய்வோம். ஆளுமைத் திறன் நிறைந்த குழந்தைகளாக அவர்களை வளர்த்தெடுக்கிறோமா என்று யோசிப்போம். மகிழ்ச்சியும், கலகலப்பும் நிறைந்த உணர்வுகளை பெறச் செய்துள்ளோமா என்ற கேள்வியை ஒவ்வொரு பெற்றோரும் தனக்குத்தானே கேட்டுக் கொள்வோம். இத்தனைக்கும் மேலாக குழந்தைகளை, குழந்தைகளாகவே இருக்க விட்டிருக்கிறோமா என்று பெற்றோரும், ஆசிரியர்களும் சிந்திப்பதே உண்மையான குழந்தைகள் தினமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் குழந்தைகள். தினந்தோறும் குழந்தைகள் தினமாகட்டும்..!

-ம.ஜெயமேரி, ஆசிரியை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive