பல்வேறு திருத்தங்களுடன் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு தயாராகிறது.
இதில், பண்டைய இந்தியமுறையை நவீனப்பாடங்களுடன் இணைப்படுவதுடன், ஒரே பதவி
வகிக்கும் பேராசிரியர்களுக்கு வெவ்வேறு வகை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.
மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறையால் புதிய தேசிய கல்விக்கொள்கையின் வரைவில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது, நவம்பர் 18 இல் துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதன் மாற்றங்கள் குறித்து 'இந்து தமிழ்' நாளேட்டிடம் மத்திய
மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரம் பல்வேறு
தகவல்களை பகிர்ந்தனர். இதன்படி, புதிதாக நான்கு வருடப் பட்டப்படிப்பு
கூடுதலாகத் துவக்கப்பட உள்ளது.
'பேட்ச்லர் ஆஃப் லிப்ரல் ஆர்ட்ஸ்(பிஎல்ஏ)' அல்லது 'பேச்லர்ஸ் ஆஃப் லிப்ரல்
எஜுகேஷன்(பிஎல்இ)' எனும் பெயரில் இது அழைக்கப்படும். இக்கல்வியை நான்கு
வருடம் தொடர்ந்து படிக்காமல் இடையிலேயே வெளியேறுபவர்களுக்கும் அதற்கான
சான்றிதழ் வழங்கி அங்கீகரிக்கப்படுவர்.
அதாவது, முதல் வருடம் முடித்தவர்களுக்கு டிப்ளமோ, இரண்டாம் வருடம்
அட்வான்ஸ் டிப்ளமோ, மூன்றாம் வருடம் பட்டப்படிப்பு மற்றும் முழு நான்கு
வருடம் முடித்தவர்கள் நேரடியாக உயர்கல்வியில் இணைந்து ஆய்வு செய்யலாம்.
தற்போது, முதுநிலை கல்வி முடித்தவர்கள் மட்டுமே உயர்கல்வியில் தம் ஆய்வை
தொடரும் நிலை உள்ளது. துவக்க ஆய்வாக உள்ள எம்.பில் எனும் உயர்கல்விக்கான
ஒருவருடப் பட்டப்படிப்பு தேவை இல்லை எனக் கருதி நிறுத்தப்பட்டுவிடும்.
நான்கு வருடக்கல்வியுடன் ஏற்கனவே உள்ள இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும்
தொடரும். எனினும், நான்கு வருடக் கல்விக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து
எதிர்காலத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் நிறுத்தும்
வாய்ப்புகளும் உள்ளன.
தற்போதுள்ள நவீனகல்வி பாடத்திட்டத்தில் பண்டையகால இந்திய முறைகள் மீதான
அறிவு, அறிஞர்கள், வானவியலாளர்கள், தத்துவஞானிகள் ஆகியோரின்
கருத்துக்களும், கண்டுபிடிப்புகளும் நவீனப்பாடங்களில் சேர்க்கப்படும்.
பண்டையகால இந்திய முறையில் எளிய மருத்துவ அறிவியல், கட்டிடக்கலை,
கப்பல்கட்டுதல், ஜோதிடம், வானசாஸ்திரம், கணிதம், யோகா மற்றும் பல்வேறு
கலைகள் போன்றவை இடம் பெறுகின்றன.
அறிஞர், தத்துவஞானி போன்ற பட்டியலில் ஆரியபட்டா, சாணக்கியர், மாதவா,
சரக்கா, சூஸ்ரதா, பதாஞ்சலி மற்றும் பாணினி ஆகியோர் உள்ளனர். பண்டைய
இந்தியமுறை கல்வியில் முக்கியப் பாடங்களும் புதிய பிரிவுகளாக
அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மத்திய அரசின் நம்பிக்கை
இதில், ஆயக்கலைகள் 64, இசை, ஆடல், பாடல் போன்றவை நாட்டின் சிறந்த உயர்கல்வி
நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவைகளிலும் பொருத்தமான வகையில்
புகுத்தப்படும். இதன்மூலம், பண்டைய இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம்
பல்வேறு நுணுக்கங்களுடன் போதிக்கப்பட்டு அழியாமல் தொடரும் என்பது மத்திய
அரசின் நம்பிக்கை ஆகும்.
மொழிகள் வளம்
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணைப் பிரிவில் இடம்பெற்ற 22
மொழிகளுக்கும் நவீனப்பாடங்களில் முக்கியத்துவம் அதிகமாக வழங்கப்பட உள்ளது.
இதன் பலனாக செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய மொழிகளும் வளம்பெற
உள்ளன. குறிப்பாக சம்ஸ்கிருத மொழிப் பாடங்களை நாட்டின் அனைத்து கல்லூரி
மற்றும் பல்கலைகழகங்களில் போதிக்கப்படும்.
அனைத்து மொழிகளுக்கும் அகாடமி
சம்ஸ்கிருதம், உருது, இந்தி மற்றும் சிந்தி ஆகிய மொழி வளர்ச்சிக்காக மத்திய
அரசு அமைத்த அகாடமிகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இதை போன்று, 22 இல்
மீதம் உள்ளவைகளுக்கும் மாநில அரசுகளால் அகாடமிகள் உருவாக்கப்பட உள்ளன.
திறமைக்கு ஏற்ற ஊதியம்
இதுபோல், பல்வேறுவகை புதிய பாடங்களும் அறிமுகத்தால் அவற்றை போதிக்கும்
கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின்
பேராசிரியர்களின் ஊதியம் திறமைக்கு ஏற்றபடி மாறுபட உள்ளது.
பேராசிரியர்களுக்கு ஊக்கத்தொகை
உதாரணமாக, தற்போது உதவிப்பேராசிரியர் எனும் பதவில் இருப்பவர்கள் பெறும் ஒரே
வகையான ஊதியம் இருக்காது. சிறப்பாக பாடம் நடத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை
வழங்கப்படும்.
தொலைதூரக்கல்வி
உயர்கல்வி பயிலும் 18 முதல் 24 வயது மாணவ, மாணவிகளுக்கு இடையிலான சதவிகிதம்
தற்போது வெறும் 26 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதை அதிகரிக்கும் வகையில்
பண்டைய இந்தியமுறையுடன் மாற்றம் செய்யப்படும் கல்வியை தொலைதூரக்கல்வி முறை
மற்றும் இணையதளக்கல்வி முறைகளில் போதிப்பது அதிகப்படுத்தப்பட உள்ளது.
தரம் மதிப்பீட்டில் தனியார்
இதனால், அடுத்த பத்து ஆண்டுகளில் 26 சதவிகிதம் உயர்ந்து ஐம்பது என்றாகி
விடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களின் தரத்தை
சோதித்து சான்று வழங்க தற்போது 'நேக்' என்றழைக்கப்படும் தேசிய மதிப்பீடு
மற்றும் அங்கீகாரக் கவுன்சில்(என்ஏஏசி) செயல்படுகிறது. இப்பணியில் இனி
தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.
தரவரிசைப்படி நிதி
இவை அளிக்கும் தரவரிசைப்படி அக்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு தன் கல்விக்கான நிதியை கூடுதலாகவோ, குறைவாகவோ வழங்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...