சமூகவலைதளங்களில் வெளியான
அதே வேதியியல் வினாத்தாள் அரையாண்டுத் தேர்வில் கொடுக்கப்பட்டதால் பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ்
1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாநில அளவில்
வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 11- ஆம் தேதி தொடங்கிய அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 23- ஆம் தேதி
வரையில் நடைபெறுகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் ஒன்பதாம் வகுப்புக்கு
நடைபெற்ற தமிழ்த்தேர்வு வினாத்தாள், தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய
நாளே வெளியானது.
இதற்கு விளக்கமளித்த தேர்வுத்துறை அலுவலர்கள், பொதுத்தேர்வு நடைபெறும்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே
அரையாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்களைத் தேர்வுத்துறை தயாரிக்கும். இதர
வகுப்புகளுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து வழங்கப்படும்.
வினாத்தாள் வெளியானது குறித்து விசாரணை நடத்தப்படும் என
தெரிவித்திருந்தனர். இதையடுத்து அரையாண்டுத்தேர்வு வினாத்தாள்கள்
முன்கூட்டியே வெளியானது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
விடுத்திருந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள்
சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளின்
கவனத்துக்குக் கொண்டு சென்றபோது, சமூக வலைதளங்களில் வெளியான
வினாத்தாளுக்குப் பதிலாக வேறு வினாத்தாள் கொடுக்கப்படும் என மாணவர்களிடம்
ஆசிரியர்கள் கூறி வந்தனர்.
ஆனால் பிளஸ் 2 வகுப்புக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேதியியல் தேர்வில்
சமூகவலைதளங்களில் வெளியான அதே வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முன்கூட்டியே வெளியானது எப்படி?
இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டங்களில்
வினாத்தாள் மையங்களை சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம். கேமரா பதிவுகளை
ஆய்வு செய்ததில் தவறுகள் ஏதும் நடக்கவில்லை. வினாத்தாள் அச்சடிக்கும்
இடத்தில் இருந்தோ அல்லது அச்சடிக்க "சிடி'யில் எடுத்துச் செல்லும் போதே
வெளியாகி இருக்கலாம். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கலாம்.
வினாத்தாள் மையங்களிலிருந்து வெளியாக வாய்ப்பில்லை என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...