ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாட்டில் தொழில் துறைகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வெளியிட்டார். அவை..
*2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்கவரி போன்ற பல்வேறு கணக்குகளை தாக்கல் செய்ய தொழிற்துறைக்கு 3 மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.
*பொருளாதார அவசர நிலை பிறப்பிக்கும் திட்டம் இல்லை.
*ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு.
*ஜூன் 30ஆம் தேதி வரை சுங்கத்துறை 24 மணி நேரமும் செயல்படும்.
*வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு.
*மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டியை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம்.
*5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு, காலதாமதமாக ஜிஎஸ்டி தாக்கலுக்காக வட்டியோ, அபராதமோ விதிக்கப்படாது
*காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி 12%இல் இருந்து 9%ஆக குறைப்பு.
*கொரோனா பாதிப்பு தொடர்பான நிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கொரோனா பாதிப்புக்கான நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.
*3 மாதங்களுக்கு அனைத்து ஏடிஎம்களிலும் சேவை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகைக்கான கட்டணம் வசூலிக்கப்படாது.
மேற்கூறிய சலுகைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், சென்செக்ஸ் குறியீடு 1,200 புள்ளிகள் உயர்ந்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...