Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மூட்டு வலிக்கு தீர்வு என்ன?



இன்றைய நிலையில், பெரும்பாலான மக்களை சப்தமில்லாமல் ஆட்டிப்படைக்கும் நோய்களுள் ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு நோய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நோயின் வகைகளையும், இதை குணப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நமக்கு விளக்குகிறது இந்தக் கட்டுரை.

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

ஆர்த்ரைட்டிஸ் (மூட்டு நோய்கள்) என்றால் என்ன? ஆர்த்ரைட்டிஸ் (மூட்டு நோய்கள்) என்பது மூட்டு இணைப்புகளைச் சேதப்படுத்தும் பல நோய்களைக் குறிக்கிறது. இந்தச் சேதம் எதனால் நிகழ்கிறது? மூட்டு இணைப்புகளை மூடி பாதுகாக்கும் மென்மையான திசுக்கள் தேய்ந்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கடும் வலியை உண்டாக்குகிறது. இந்தத் திசுக்கள் தேய்வதற்கான சரியான காரணங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், ஆரோக்கியமற்ற எலும்பு மற்றும் தசை, அதிக உடற்பருமன், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் பரம்பரை காரணங்கள் ஆகியவை இந்த திசு தேய்மானத்துக்குக் காரணமாக இருக்கின்றன என நம்பப்படுகிறது.

மூட்டு நோய்களின் பொதுவான வகைகள் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் – இது நோய்க் கிருமிகள் மற்றும் மூப்பு, மூட்டு இணைப்புகளில் அடிபடுவதால் ஏற்படுகிறது. ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் – உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உடலுக்கு எதிராகவே இயங்கும்போது இந்த நோய் ஏற்படுகிறது.

செப்டிக் ஆர்த்ரைட்டிஸ் – மூட்டு இணைப்புகளை நோய்க் கிருமிகள் தாக்கும்போது ஏற்படுகிறது. கௌட்டி ஆர்த்ரைட்டிஸ் – இது யூரிக் அமிலத்தின் படிமங்கள் மூட்டு இணைப்புகளில் படிவதால் ஏற்படுகிறது. மன அழுத்தம் எவ்வகையான மூட்டு நோயையும் அதிகப்படுத்துவதோடு, இதுவே நோய் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணமாகவும் அமைவதாக ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மூட்டு நோய்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் இந்த நோய் ஏற்படும்போது வலி, மூட்டு இணைப்புக்களை அசைக்க முடியாமை மற்றும் மூட்டு இணைப்புகளில் வீக்கம் ஆகியவை ஏற்படும். இதனால் அத்தியாவசியமான வேலைகளைக்கூட செய்ய முடியாமல் போகும். ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோய் உடலின் மற்ற பாகங்களையும் பாதிப்பதால் ஆயுள் குறையும் ஆபத்து உள்ளது.

மூட்டு நோய்கள் தடுப்பு மூட்டு நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்க பல வழிகள் உள்ளன. அவற்றில் பல வாழ்க்கை முறை சார்ந்தவை.
உடல் எடைக் குறைப்பு அதிகப்படியான உடல் எடை, உடல் எடையைத் தாங்கக்கூடிய மூட்டுகளின் இணைப்பை சேதமாக்குவதோடு இணைப்புகளின் இயற்கையான கட்டமைப்பையும் சேதப்படுத்துகிறது. சரியான உடல் எடை நிர்வாகம், முழங்கால்கள், மற்றும் இடுப்பு, கைகளில் வரக்கூடிய மூட்டு வலிகளைத் தடுக்கிறது.

உடற்பயிற்சி தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மூட்டு தசைகள் ஆரோக்கியமாக இருக்கச் செய்வதோடு, உடல் எடை சீராக இருக்கவும் உதவுகிறது. மேலும் இவை மூட்டுகள் வீங்குவதையும் மூட்டுத் தசைகள் விறைப்படைவதையும் தடுக்கிறது.

ஆரோக்கியமான உணவு ஒருவருக்கு மூட்டு வலி வருவதில் அவருடைய உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், சர்க்கரை, உப்பு, கரையக்கூடிய கொழுப்புகள் ஆகியவை சரியான விகிதத்தில் அடங்கிய ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) சரியான அளவில் நம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சமைக்காத பச்சைக் காய்கறிகள்/பழங்கள்/இயற்கை உணவுகள் இந்த நோய்க்கு அருமருந்தாக விளங்குகிறது. கிழங்கு வகைகள் தவிர்த்தல் வேண்டும்.

மேலும் சில யோசனைகள் மூட்டு இணைப்புகளுக்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் உடல் எடை அனைத்துப் பக்கமும் சீராக இருக்கும்படி உங்கள் உடல் அமரும் நிலை மற்றும் இதர உடல் நிலைகளை அடிக்கடி மாற்றிக்கொள்ளவும். கடுமையான வேலைக்குப் பிறகு நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

உடற்பயிற்சி செய்யும் முன் அதற்கான தகுந்த ஆரம்பப் பயிற்சிகள் (warming up exercises) செய்யவும்.

மூட்டு நோய்கள் பற்றிய சில தவறான நம்பிக்கைகள் இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டும் வரும் என்பதில்லை. இந்த நோய் எந்த வயதினரையும் தாக்கும். மூட்டு ஜவ்வு தேய்வதால் ஏற்படக்கூடிய மூட்டுவலி குறிப்பாக வயதானவர்களுக்கு வருகிறது. ஆனால், மற்ற மூட்டுவலி வகைகளான ருமடாய்டு, ரியேக்டிவ் ஆர்திரைட்டிஸ் போன்றவை இள வயதினருக்கும் வருகிறது.

குளிர் காலநிலையால் வருகிறது குளிர்கால நிலையால் மூட்டு நோய்கள் வருவதாக பலர் நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல. குளிர்கால நிலையில் மூட்டு இணைப்புகளின் விறைப்புத்தன்மை அதிகமாகி அதனால் வலி அதிகமாகலாம். ஆனால், அதுவே மூட்டுவலியை உண்டாக்குவதில்லை. குளிர்கால நிலையால்தான் மூட்டுவலி வரும் என்றால், குளிர்ப்பிரதேசத்தில் வாழும் அனைவருமே இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமே!

மூட்டு நோய்களுக்கு சிகிச்சை இல்லை மூட்டு நோய்களின் ஒவ்வொரு வகைக்கும் தற்போது மருந்துகள் உள்ளன. சிகிச்சையால் நோயின் தன்மை குறைகிறது. மூட்டுவலி நோயாளிகள் உடற்பயிற்சி செய்யும்போது வலி எடுப்பதால், அவர்கள் உடற்பயிற்சி செய்யக் கூடாதா?

இது உண்மை அல்ல. உண்மையில், இவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். பயிற்சிகள் மூட்டு இணைப்புகளிலுள்ள விறைப்புத் தன்மையைக் குறைத்து மூட்டுகளின் அசையும் தன்மையை அதிகரிக்கிறது.

மூட்டு நோய்கள் பெண்களுக்கு மட்டுமே வரும் இல்லை. மூட்டுநோய்கள் ஆண்களையும் பாதிக்கும். யோகாவும் மூட்டு வலியும் மூட்டு நோய்கள் வராமல் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்.

யோகாசனங்கள் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துகிறது. யோகாசனங்கள் செய்பவரின் மூட்டு இணைப்புகள் அசாதாரணமான சூழ்நிலைகளிலும் இயல்பாகச் செயல்படுவதால் மூட்டு தசைகள் விறைப்படைவது குறைகிறது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவை யோகப் பயிற்சிகள் ஒழுங்குபடுத்துகின்றன. யோகப் பயிற்சிகள் மூலம் உடற்பருமன் அடைவதைத் தடுக்க முடியும். யோகா மூலம் கிடைக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.

இந்த எதிர்ப்புச்சக்தி மூட்டு வலியிலிருந்து மட்டுமல்லாமல் மற்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. மூட்டு நோயால் அவதிப்படுபவர்களின் வலி மற்றும் இயலாமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து நேர்மறை உணர்வுகள் அதிகரிக்க உதவுகிறது. யோகப் பயிற்சிகளில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட அசைவுகள், விறைப்படைந்த மற்றும் சேதமடைந்த மூட்டு இணைப்புகளுக்கு நிவாரணம் அளிக்கின்றன.

மேலும் சுவாசத்தை உபயோகித்துச் செய்யக்கூடிய யோகப் பயிற்சிகள், மூட்டு இணைப்புகளைப் பாதுகாக்கும் தசைகளுக்கு ஓய்வு/தளர்வு அளிக்கிறது. மூட்டு இணைப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால், தேவையற்ற நச்சுப் பொருட்கள் நீங்கி, வலி மற்றும் விறைப்புத்தன்மை குறைய உதவுகிறது. மருந்து மற்றும் மருத்துவ உதவியோடு, யோகப் பயிற்சிகளையும் இணைத்துக் கொள்ளும்போது, நிவாரணம் துரிதமாகும்!

மூட்டு நோய்கள் ஒருவரின் உடற்செயல்களை முடக்கி, அன்றாடச் செயல்களுக்கும் அடுத்தவரைச் சார்ந்திருக்க நேரிடும் எனப் பலர் நினைக்கின்றனர். ஆனால் மூட்டுவலி ஸ்ட்ரோக் போல் செயல்படாது. மூட்டுவலி தாக்கும்போது, மூட்டு இணைப்புகள் மிகவும் வலிக்கலாம். ஆனால், அதற்காக அவர்களின் உடற்செயல்கள் முடக்கப்பட்டுவிட்டது என்று பொருள் அல்ல. மூட்டு நோய்கள் இருப்பினும் அவர்கள் தகுந்த உணவு மற்றும் வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்தால், வாழ்க்கையில் மற்றவர்போல் இயங்க முடியும்.

யோகா: எல்லா வகையான மூட்டு நோய்களுக்கும் ஒரே காரணம் இல்லை. மன அழுத்தத்தால் ஏற்படும் மூட்டு நோய்களுக்கு யோகா மூலம் விரைவில் தீர்வுகாண முடியும். நோய்க் கிருமிகள் மற்றும் வேறுகாரணங்களால் ஏற்படும் மூட்டு நோய்களுக்கு மருந்துகளும் தேவைப்படுகின்றன.

எந்தக் காரணத்தினால் ஏற்பட்ட மூட்டு நோயாக இருந்தாலும், யோகப் பயிற்சிகள் மூலம் ஓரளவு அல்லது முழுமையான நிவாரணம் அளிக்க முடியும். ‘அம்’ மந்திர உச்சாடணை: இது உடலளவிலும் மனதளவிலும் சமநிலையை ஏற்படுத்துவதால், மூட்டு நோய்களிலிருந்து விடுபட உதவுகிறது. உணவு: தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை பூஜ்ஜிய பிராண உணவுகள். இவற்றை ஆரோக்கியமானவர்கள் ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆனால், மூட்டு இணைப்புகளில் வீக்கமோ வலியோ அல்லது உட்காரும்போதோ, நிற்கும்போதோ மூட்டு இணைப்புகளில் வலி உணர்பவர்கள், மற்றும் அதிக நேரம் உட்காரும்போது கால்களில் வீக்கம் ஏற்படுபவர்கள், இவற்றை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை மூட்டு நோய்களின் பிரச்சனையை அதிகப்படுத்தும்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive