கரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்க சித்த மருத்துவர்கள் முன்வந்தபோது,
முன்வைக்கப்பட்ட கேள்வி: "இந்த நோயோ புதிது. இந்த வைரஸ் எடுத்திருப்பது
புதுப் பரிமாணம்; நாங்களே கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கும்போது, இதில்
சித்த மருத்துவம் என்ன செய்துவிட முடியும்?" எனக் கேட்காத அலோபதி
மருத்துவர்கள் குறைவு.
நவீன அறிவியலின் ஆய்வுக் கண்களை மட்டுமே கொண்டு அளவிடும் அறிவியலாளர்கள்
மத்தியில், சித்த மருத்துவ ஆய்வாளர்கள் சற்றே நெருக்கடியை உணர்ந்த தருணம்
அது. அதேநேரம் ‘கரோனாவுக்கு எதிராக எங்கள் துறையில் இதுவரை கிடைத்த
அனுபவங்களை, அறிவியலின் துணைகொண்டு உரசிப்பார்க்க முன்வருகிறோம்' என சித்த
மருத்துவர்கள் முன்வந்தார்கள்.
அதற்குத் தற்போது பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.
மத்திய அரசு மார்ச் மாதத்தில் ஆயுஷ் அமைச்சகப் பரிந்துரைகளையும் கரோனாவுக்
கான வழிகாட்டுதலையும் அறிவிப்பாக வெளியிட்ட பின்னர், பல்வேறு விவாதங்கள்
எழுந்தன, விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த
கூறுகளைக் கொண்ட ‘ஆரோக்கியம் வழிகாட்டுதல்' தொடர்பான அரசாணையை தமிழக அரசு
ஏப்ரல் 23 அன்று வெளியிட்டது.
நோய் எதிர்ப்பாற்றல் தரக்கூடிய கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர்;
நோய்க்குப் பின்னர் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம்
ஆகியவற்றை உட்கொள்ளப் பரிந்துரைக்கப் பட்டது.
அத்துடன் தேசிய, மாநில வரலாற்றில் முதன்முறையாக ஆய்வு நோக்கில் சித்த
மருத்துவக் குடிநீரை நவீன மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவதற்கான
கூட்டு சிகிச்சைக்கான ஒப்புதலையும் தமிழக அரசாணை வழங்கியது.
சித்த மருத்துவ உலகுக்கு இது மிக முக்கிய மைல்கல். அரசாணை வருவதற்கு
முன்னரே தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறை மாவட்ட ஆட்சியர்கள்
அனுமதியுடன் கபசுரக் குடிநீரை நோய்த்தடுப்புக்கு வழங்கத்
தொடங்கியிருந்தது.
அரசாணை பெற்றதும், மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய சித்த மருத்துவ
நிறுவனம், ஆராய்ச்சிப் பார்வையுடன் பணியாற்றும் சித்த மருத்துவ அலுவலர்கள்
ஆகியோர் முழு வீச்சில் ஆய்வுகளைத் தொடங்கினார்கள்.
முதல் கட்ட ஆய்வுகள்
திருப்பத்தூரில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வுதான்
முதல் நிலை ஆய்வு முடிவை அளித்தது. டெல்லியில் இருந்து திரும்பிய இரண்டு
குழுக்கள் பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒரு குழு (42 பேர்)
கபசுரக் குடிநீர் உடனும் மற்றொரு குழு குடிநீர் (70 பேர்) இல்லாமலும், ஒரே
உணவு, ஒரே வாழ்க்கை முறையுடன் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
ஆய்வின் முடிவில் குடிநீர் குடித்த குழுவில் எல்லோரும் நலமுடன் வீடு
திரும்ப, கபசுரக் குடிநீர் குடிக்காத குழுவில் 5 பேருக்குத்
தொற்றுநோயிருந்தது தெரியவந்தது. மருத்துவர் வி. விக்ரம்குமார் தலைமையில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது. எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லாத முதல் நிலை
ஆய்வுதான் என்றாலும், இந்த ஆய்வு கொடுத்த ஊக்கமான முடிவு வேறு பல
ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
அதேவேளை நெல்லை மேலப்பாளையம் கிருஷ்ணாபுரத்தில், இதேபோல் நிலவேம்புக்
குடிநீர் குடித்தவரிடையே ஒருவர்கூட தொற்றைப் பெறாத நிலையை ஆராய்ந்து அறிய
முடிந்தது. இந்தக் குழுவில் ஒருவர் டெல்லியில் இருந்து நேரடியாக நெல்லை
வராமல், வேறு ஊருக்கு பயணிக்க, அவருக்குக் குடிநீர் வழங்க வாய்ப்பில்லாமல்
போனது. அவருக்கு நோய்த்தொற்று இருந்தது.
விரிவான ஆய்வுகள்
கரோனா தொற்று இருப்பவர்களிடையே கபசுரக் குடிநீருடன் ஆங்கில மருந்து
தரப்பட்ட கூட்டு ஆய்வு திருப்பதியில் நடைபெற்றது. இதுவரை 18 பேர்
குணமடைந்துள்ளனர், 12 பேர் நலமடைந்துவருகின்றனர் என்று சித்த மருத்துவ
கவுன்சிலின் டாக்டர் சாம்ராஜ் தெரிவிக்கிறார்.
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி கோவிட் சிறப்புப் பிரிவில் தேசிய சித்த
மருத்துவ நிறுவனம் கபசுரக் குடிநீரை வழங்கியது. அந்த வகையில் ஐந்தே
நாட்களில் கோவிட் நோயாளிகள் நெகட்டிவ் நிலையைப் பெற்றதைப்
பதிவுசெய்துள்ளது.
சென்னை ஜவஹர் கல்லூரி வளாகத்திலும் வைஷ்ணவக் கல்லூரி வளாகத்திலும் கோவிட்
நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர், மூலிகைத் தேநீர் வழங்கப்பட்ட சிகிச்சையில்
ஏழாம் நாள் முதல் கோவிட் நோயாளிகளின் பரிசோதனை மாதிரிகள் நெகட்டிவ்
ஆகியுள்ளன.
மருத்துவர் வீரபாபு, தேசிய சித்த மருத்துவ நிறுவன வழிகாட்டுதலுடன் இதை
நடத்தியுள்ளார். அதேபோல் புழல் சிறையில் 23 நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர்
வழங்கப்பட்டு ஏழாம் நாளில் 22 பேருக்கு நெகட்டிவ் ஆனது. இது குறித்து
தேசிய சித்த மருத்துவ நிறுவனம், அடுத்த கட்ட ஆராய்ச்சிகளை நடத்திவருகிறது.
முறைசார்ந்த ஆய்வு
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்.) கீழுள்ள Clinical
Trials Registry - India (CTRI)இல் பதிவுசெய்யப்பட்டு நடத்தப்படும் ஆய்வு
இது. மருத்துவர் நடராஜன் குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுவருகிறார்கள்.
தற்காப்பாக 15,000 பேருக்குக் கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டதில், எத்தனை
பேர் நோய்த்தொற்றைப் பெற்றுள்ளனர் என நடத்தப்பட்ட ஆய்வில் 0.1
சதவீதத்துக்கும் குறைவானோரே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மத்திய சித்த
மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.
கபசுரக் குடிநீரைக் கொடுத்ததால் ஏதாவது எதிர்விளைவு ஏற்பட்டுள்ளதா என
ஆராய்ந்ததில், கபசுரக் குடிநீர் சிலருக்கு வயிற்று தாபிதத்தை (சூடு)
ஏற்படுத்துவதைத் தவிர வேறு பிரச்சினைகள் அறியப்படவில்லை. இரைப்பை அழற்சியை
உருவாக்கும் தன்மை இந்தக் குடிநீருக்கு இருப்பதால், இரைப்பை பிரச்சினை உள்ள
நோயாளிகள், ஏற்கெனவே இரைப்பை அழற்சி, அல்சர் போன்றவற்றுக்கு சிகிச்சை
எடுப்பவர்கள், மருத்துவர் வழிகாட்டுதலின் படியும் உணவுக்குப் பின்னரும்
இந்தக் குடிநீரை அருந்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த ஆய்வை மருத்துவர்
சத்யராஜேஸ்வரன் குழு நடத்திவருகிறது.
வைட்டமின் சி, டி, துத்தநாகச் சத்து சார்ந்து ஒரு பிரிவினருக்கும் கபசுரக்
குடிநீர் சார்ந்து இன்னொரு பிரிவினருக்குமாக 251 பேரிடம் Survival
analysis ஆய்வை கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தக்
குழுவினர் மேற்கொண்டனர். இந்த ஆய்வு மருத்துவ ஆய்விதழுக்கு
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் அருந்திய கர்ப்பிணிப் பெண்
நலமுடன் குழந்தையைப் பெற்றெடுத்ததும் பதிவாகியுள்ளது.
ஒருங்கிணைந்த முயற்சி
நோயாளிகளிடம் நடத்தப்படும் ஆய்வு முடிவுகள் ஒருபக்கம் இருந்தாலும்,
மற்றொருபுறம் மருந்து சார்ந்த ஆராய்ச்சிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கபசுரக் குடிநீர், நொச்சிக்
குடிநீர், அரத்தைக் குடிநீர் ஆகியவற்றின் Bioinformatics docking studies
உள்ளிட்ட முதல் கட்ட Invitro ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரா
பல்கலைக்கழகம் உள்ளிட்ட தனியார் பல்கலைகழகங்களிலும் ஆய்வுகள்
தொடங்கியுள்ளன.
சில தனியார் ஆய்வு நிறுவனங்கள், உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்படி
கோவிட்-19 சார்ந்து சித்த மருந்துகளில் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளன. இந்த
ஆய்வு முடிவுகள் ‘காய்ப்பு உவப்பு' இல்லாமலும், பாரபட்சமற்றும் மருத்துவ
ஆய்விதழ்களில் சமர்ப்பிக்கப்படும்போது சித்த மருத்துவத்தின் மீதான பார்வை
உலக அரங்கில் வலுப்பெறும்.
கள்ளகுறிச்சி, தேனி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி,
நெல்லை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரியில் சித்த
மருத்துவர்களும் நவீன மருத்துவர்களும் இணைந்து ஆய்வு நடத்திவருவது
ஒருங்கிணைந்த மருத்துவத்தின் (Holistic Medicine) இன்றைய தேவையையும் நீண்ட
நாட்களாக கனவாக மட்டுமே இருந்த அம்சம், நனவாகிவருவதையும் காட்டுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் சித்த மருத்துவர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை
அணிந்து, நோயாளர்களுக்குக் குடிநீரைக் கொடுத்து, மத்திய அரசின் ‘ஆரோக்கிய
சஞ்சீவினி' செயலியில் ஆய்வு முடிவுகளைப் பதிவிட்டுவருவது, கரோனா காலத்தில்
தமிழ் மருத்துவம் இன்னொரு தளத்துக்கு நகர்ந்துவருவதைக் காட்டுகிறது. சித்த
மருத்துவம், உலக மரபு மருத்துவ முறைகளுக்கு இணையான அந்தஸ்தைப் பெறும் நாள்
நிச்சயம் வரும்.
தற்காப்பாக 15,000 பேருக்குக் கபசுரக் குடி நீர் கொடுக்கப்பட்டதில், எத்தனை
பேர் நோய்த்தொற்றைப் பெற்றுள்ளனர் என நடத்தப்பட்ட ஆய்வில் 0.1
சதவீதத்துக்கும் குறைவானோரே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...