கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வரும் என்றுதான் இந்த பூமிப்பந்தில்
வாழுகிற சுமார் 750 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக
அமைந்து இருக்கிறது.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
1 கோடியை நோக்கி விரைகிறது....
6 மாத காலத்திலேயே இந்த கொலைகார வைரஸ் உலகமெங்கும் 85 லட்சத்துக்கும்
அதிகமானோருக்கு பரவி விட்டது. 4.5 லட்சத்துக்கும் அதிகமானோரை உயிரிழக்க
வைத்திருக்கிறது. இப்போது ஒவ்வொரு நாளும் உலகமெங்கும் சராசரியாக சுமார் 2 லட்சத்துக்கும்
அதிகமானோருக்கு பரவி வருகிறது. இதே வேகத்தில் சென்றால், இன்னும் ஒரு வார
காலத்திற்குள் 1 கோடிப்பேரை இந்த வைரஸ் தொற்று பாதித்து விடக்கூடும்.
மாதத்துக்கு சராசரியாக 60-70 லட்சம் பேருக்கு பரவி வந்தால் நிலைமை
என்னாவது?
இந்தக் கவலையும், பயமும்தான் மனித குலத்தை வாட்டி வதைத்து வருகிறது.
இதற்கு ஒரே நம்பகமான தீர்வு, தடுப்பூசியைத்தவிர வேறொன்றும் இல்லை.
இந்த ஆண்டு தடுப்பூசி....
இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக சுகாதார
நிறுவனத்தின் தலைமையகத்தில் அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா
சுவாமிநாதன் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
அவர் தடுப்பூசி விவகாரம் குறித்து நம்பிக்கையூட்டும் சில முக்கிய தகவல்களை
வெளியிட்டார். அவர் கூறியது இதுதான்-
உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் 200-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை
கண்டுபிடித்து, அவற்றை சோதித்துப்பார்க்கும் பணியில் தீவிரமாக இறங்கி
இருக்கிறார்கள். இந்த 200 தடுப்பூசிகளில் சுமார் 10 தடுப்பூசிகள் ஆரம்ப
கட்ட பரிசோதனைகள் முடிந்து, மனிதர்களுக்கு செலுத்தி சோதித்துப்பார்க்கிற
நிலைக்கு வந்து விட்டது.
நாம் அதிர்ஷ்டசாலிகள் என்றால், இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக ஒன்றல்லது இரண்டு வெற்றிகரமான தடுப்பூசிகள் வந்து விடும்.
3 பிரிவினருக்கு முதலில்...
தடுப்பூசி தயாரித்து வெளியே வந்த உடன் 3 பிரிவினருக்கு முதலில் செலுத்தும் தேவை இருக்கிறது.
முதலில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு முன்வரிசையில் நின்று
பணியாற்றிக்கொண்டிருக்கிற சுகாதார பணியாளர்களுக்கும், போலீஸ்
அதிகாரிகளுக்கும் செலுத்த வேண்டும். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று
ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அவர்களுக்கு முதலில்
தடுப்பூசி போட வேண்டும்.
அடுத்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கிற முதியோருக்கும்,
நீரிழிவு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் செலுத்த வேண்டும்.
அடுத்து அதிக பரவலுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள நகர்ப்புற குடிசைப்பகுதிகள்
(மும்பை தாராவி போன்றவை) மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வாழ்கிறவர்களுக்கு
தடுப்பூசி செலுத்த வேண்டும்.
200 கோடி டோஸ்...
மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிடம் இருந்துதான் தடுப்பூசியை செலுத்துவதை
தொடங்க வேண்டும். பின்னர் படிப்படியாக அதிகமானவர்களுக்கு போட வேண்டும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 20 கோடி டோஸ் தடுப்பூசி கிடைத்து விடும் என்ற
கணிப்பில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்.
அடுத்த ஆண்டு ஒன்று முதல் மூன்று வரையிலான பயனுள்ள தடுப்பூசிகளின் 200 கோடி
டோஸ் வினியோகத்துக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.ஒரு பெரிய சந்தேகக்குறியும் இருக்கத்தான் செய்கிறது. இந்த கணத்தில்,
நிரூபிக்கப்பட்ட எந்த தடுப்பூசியும் நம்மிடம் இல்லை. ஆனால், தடுப்பூசிக்கு
தேவையான அனைத்து முதலீடுகளும் செல்வதால், அடுத்த ஆண்டின் இறுதிக்குள்
நம்மிடம் 200 கோடி தடுப்பூசி டோஸ்கள் இருககும் என்று சொல்லலாம்.
குறைந்தபட்சம் இவற்றை கொண்டு முன்னுரிமை மக்களுக்கு போட்டு விட முடியும்.
வைரசின் தன்மை....
விஞ்ஞானிகள் கொரோனா வைரசின் 40 ஆயிரம் காட்சிகளை பகுப்பாய்வு செய்து
வருகிறார்கள்.
எல்லா வைரஸ்களும் பிறழ்கிற (மாறுகிற) தன்மையை கொண்டிருந்தாலும்கூட, அவை
இன்புளூவன்சாவை விட மிகக்குறைவாகத்தான் பிறழ்கின்றன. தொற்றுநோயின்
தீவிரத்தையோ, நோய் எதிர்ப்புச்சக்தியையோ மாற்றும் முக்கிய பிறழ்வு இதுவரை
ஏற்படவில்லை....
- இப்படி சொல்கிறார் டாக்டர் சவுமியா சுவாமிநாதன். இந்த தமிழக விஞ்ஞானியின்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம்பிக்கை அளிக்கின்றன. கொரோனா வைரஸ் உரு மாறும்
தன்மை பற்றி பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகிற வேளையில், பெரிய பாதிப்பை
ஏற்படுத்தும் தன்மை அந்த வைரசிடம் காணப்படவில்லை என்பதுவும் முக்கியத்துவம்
பெறுகிறது.
முழுவீச்சில் மருந்து நிறுவனங்கள்
ஏற்கனவே அடுத்த ஆண்டுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசிகள் வந்துவிடும்
என்று மருந்து கம்பெனிகள் நம்பிக்கையுடன் கூறி இருக்கின்றன. அதே நேரத்தில்
கொரோனா வைரசை அடக்குவதற்கு 1500 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் என்று
குறிப்பிட்டிருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையில் இருந்து கிட்டத்தட்ட
இரு மடங்கு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
ரஷியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து 18 பேருக்கு செலுத்தப்பட்டு விட்டது.
அது அவர்களுக்கு பக்க விளைவுகளையோ, அவர்களது உடல்நலத்தில் பாதிப்பையோ
ஏற்படுத்தியதாக தகவல் இல்லை.
அடுத்து ஜெர்மனியில் கியூர்வேக் நிறுவனமும் மனிதர்களுக்கு கொரோனா
தடுப்பூசியை செலுத்திப்பார்க்க தயாராகி வருகிறது. ஆரோக்கியமான 168 பேருக்கு
இந்த நிறுவனம், தனது தடுப்பூசியை செலுத்தப்போகிறது. செப்டம்பர் அல்லது
அக்டோபரில் இந்த தடுப்பூசியை ஆயிரக்கணக்கானோருக்கு செலுத்தி
சோதிப்பார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...