NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெற்றோர் கவலைக்குத் தீர்வு: ஆன்லைன் வகுப்புகளுக்கு விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள்: மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் தீவிரம்




கணினி முன்பும், ஸ்மார்ட்போன் முன்பும் நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் குழந்தைகள் அமர்ந்திருப்பது குறித்த பெற்றோர்களின் கவலையை அறிந்த மத்திய மனித வளத்துறை அமைச்சகம் விரைவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட உள்ளது.
 கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் 10-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ளன.
 ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் முடியாமல் இருந்து வருகிறது. சிபிஎஸ்இ பிரிவிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புத் தேர்வுகளும் நடக்காமல் இருந்த நிலையில் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 இதற்கிடையே அடுத்த கல்வியாண்டும் தொடங்கிவிட்டது. 

ஆனால் இதுவரை கல்வியாண்டு தொடங்கிவிட்டதாக மாநில அரசுகள் அறிவிக்காத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டன
 ஆனால், ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டதிலிருந்துதான் பெற்றோருக்குப் பெரும் கவலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பள்ளிக்கு நேரடியாகச் செல்லும்போது குறிப்பிட்ட நேரம்தான் குழந்தைகள் வகுப்பில் இருப்பார்கள். ஆனால், ஆன்லைன் வகுப்பு தொடங்கப்பட்டதிலிருந்து குழந்தைகள் எந்நேரமும் செல்போன் முன் அமர்ந்திருப்பதும், கணினி முன் அமர்ந்திருப்பதும் பெற்றோருக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 குழந்தைகளுக்குச் சிறிதுகூட ஓய்வில்லாமல் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருவதாக பெற்றோர் தரப்பில் மனித வளத்துறை அமைச்சகத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான புகார்கள் சென்றன. ஆன்லைன் வகுப்புகளை வரைமுறைப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட நேரம் வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 இதையடுத்து, ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் பொருட்டு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கும் பணியில் மத்திய மனித வளத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.
 இதுகுறித்து மத்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆன்லைன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்துவதால் குழந்தைகள் செல்போன் முன்பும், கணினி முன்பும் அமரும் நேரம் குறித்து ஏராளமான புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
 ஒருபுறம் பள்ளிகள் தங்கள் எல்லைக்குள் மாணவ, மாணவிகள் செல்போன்களை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவு போட்டு, செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வலியுறத்துகிறார்கள். ஆனால், இப்போது ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் மணிக்கணக்கில் குழந்தைகளை அதே செல்போன் முன் அமரவைக்கிறார்கள். இந்த இரு அம்சங்களுக்கும் இடையே நடுநிலைத்தன்மை வேண்டும்.
 பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த கோரிக்கையால் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்து வருகிறோம். நீண்டநேரம் ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் பங்கேற்காமல் குறிப்பிட்ட நேரம் மட்டும் பங்கேற்றால் போதுமானது என்ற வகையில் நேரக் கட்டுப்பாடு கொண்டுவரப்போகிறோம்.
 ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு ஒரு வசதியை அளிக்கிறது. கடினமான சூழலில் வகுப்புகளில் அமர்ந்து படிப்பதை விட, மாணவர்களை அவர்களின் போக்கில் படிக்க ஆன்லைன் வகுப்புகள் துணைபுரிகின்றன. ஆனால், அதற்கு வரையறைகள் அவசியம்.
 சில வீடுகளில் ஒரு செல்போன் மட்டும் இருக்கும். அதை வைத்துக் குழந்தையும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று ஏதாவது அழைப்பு வந்தால் பேசிக்கொள்ளும் சூழலும் பெற்றோருக்கு சிரமத்தைத் தருகிறது என்பதை அறிகிறோம்.
 அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களின் மனநலன், சைபர் பாதுகாப்பு, பாதுகாப்பற்ற சூழலில் பயன்படுத்துதல், ஆரோக்கியமான சூழல் ஆகியவற்றையும் அமைச்சகம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆதலால், விரைவில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
        Source The Hindu Tamil




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive