புதுச்சேரி : ஆசிரியர்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்கு உதவும் திட்டம் தொடர்பாக சங்க் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. வழக்கமாக, கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது தள்ளி போடப்பட்டுள்ளது.அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோனோர் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.எனவே, அரசு பள்ளி மாணவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் முடிவு செய்துள்ளார்.
அதாவது, பள்ளிகள் இயங்காததால் மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை பகிர்ந்து, மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களது குடும்பத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், அரிசி, பருப்பு போன்றவற்றுடன் 300 ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலையில் அனைத்து மாணவர்களின் குடும்பங்களுக்கும் அரசே நேரடியாக நிதியுதவி அளிப்பதில் சிக்கல் உள்ளது.
எனவே, அரசு பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்களின் இரண்டு அல்லது மூன்று நாள் சம்பளத்தை அவர்களது சம்மதத்துடன் பெற்று, மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட் டுள்ளது.இந்த திட்டம் தொடர்பாக கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்பதற்காக ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம், பள்ளிக் கல்வித் துறையின் கருத்தரங்கக் கூடத்தில் நேற்று காலை நடந்தது.பள்ளிக் கல்வி இணை இயக்குனர் குப்புசாமி, திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி கூறினார்.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சம்பளத்தை அளித்து, நல்ல காரியத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.சில சங்கங்களை சேர்ந்தவர்கள் சில காரணங்களை கூறி ஆட்சேபணை தெரிவித்தனர். பல சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். தங்களது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எழுத்துமூலமாக வெள்ளிக் கிழமைக்குள் முடிவை தெரிவிப்பதாக பலர்தெரிவித்தனர். நல்ல முடிவை தெரிவித்து அரசின் திட்டத்திற்கு ஆதரவு தருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...