காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கான விடைத்தாள்களைத் திரும்ப எழுத வைத்து மாணவர்களிடம் பெறப்பட்டதாக தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மீது எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பதிவேடுகளை ஜூன் 27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் தாராபுரம் சாலை கே.செட்டிபாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளை வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பி, மீண்டும் விடைத்தாள்களைப் பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களாகப் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக பெற்றோர் சார்பில் பேசியவர் கூறும்போது, "தனியார் பள்ளிகளில் விடைத்தாள்களை முறையாகப் பராமரிக்காமல், அரசு சொன்னதையும் முழுமையாக உள்வாங்காமல் பள்ளி நிர்வாகம் தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பதாக அறிகிறோம். மாணவர்களை மேலும் சிரமத்துக்கு ஆளாக்கும் வகையில், 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களை வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள்களை அனுப்பி, வீட்டிலேயே விடைத்தாள்களை எழுத வைத்துப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதனைக் கல்வி அலுவலர்களும் கண்டு கொள்ளவில்லை" என்றார்.
இதையடுத்து இன்று (ஜூன் 20) பள்ளிகளில் விடைத்தாள்களை மொத்தமாக மாணவர்கள் ஒப்படைக்க வந்தது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ், திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் பழனிசாமி உட்பட கல்வித்துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "மாணவர்களிடம் புதிதாக எழுதி வாங்கியதாகக் கூறப்பபடும் விடைத்தாள்களை வளாகத்தில் தேடிப் பார்த்தோம். அப்படி எதுவும் கிடைக்கவில்லை. அங்கிருந்த மதிப்பெண் சான்றிதழ்களை எடுத்து வந்துள்ளோம். முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வைத்து, மதிப்பண்களை நமது அலுவலர்கள் முன்னிலையில் பூர்த்தி செய்யச் சொல்லி உள்ளோம். அவர்களை நமது அலுவலக அலுவலர்கள் கண்காணிப்பார்கள். மேலும், இது தொடர்பாக வெளியான வீடியோ தொடர்பாக மீண்டும் ஜூன் 22-ம் தேதி அன்று விசாரிக்கப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...