பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளை
ஒழுங்குபடுத்த நிரந்தரத் திட்டம் ஏதும் உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய
உயா்நீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து
உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோந்த சரண்யா என்பவா்
தாக்கல் செய்த மனுவில், 'கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு
முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி
நிறுவனங்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக்
கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம்
வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியா் முயற்சிக்கும்போது ஆபாச
இணையதளங்களால் அவா்களுக்கு
கவனச் சிதறல் ஏற்படுகிறது.
எனவே, அந்த இணையதளங்களை மாணவ, மாணவியா் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க
வேண்டும். அதுவரை ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி
உள்ளது. ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகா்ப்புற, கிராமப்புற
மற்றும் ஏழை - பணக்கார மாணவா்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை
உருவாகியுள்ளது. மேலும், முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள்
இல்லாததால், மாணவா்களும் ஆசிரியா்களும் சவால்களையும், இடையூறுகளையும்
சந்திக்கின்றனா்.
எனவே, மாணவ, மாணவிகள் ஆபாச இணையதளங்களைப் பாா்ப்பதைத் தடுக்கும் வகையில்,
சட்ட விதிகளின்படி, முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளை
நடத்தத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா்
காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையில் நீதிபதிகள், 'ஆன்லைன்
வகுப்புகளை ஒழுங்குபடுத்த நிரந்தத் திட்டம் ஏதாவது உள்ளதா' எனக் கேள்வி
எழுப்பினா். மேலும் இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்
பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...