Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த"ராணுவ வீரர் பழனி" படித்த அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கண்ணீர் அஞ்சலி - அவரைப் பற்றி நெகிழ்வான நிகழ்வுகளை கூறிய தலைமை ஆசிரியை

a20

இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட திடீர் மோதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணமடைந்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனியும் ஒருவர். அவரது உடல் கடந்த 18-ம் தேதி சொந்த ஊரில், 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
வீரமரணமடைந்த பழனி, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அடைக்கலாபுரம், புனித சூசை அறநிலையத்தில் தங்கியிருந்து 5 முதல் 8-ம் வகுப்பு வரை படித்தார். அதன் பின்னர், அடைக்கலாபுரம் அருகிலுள்ள வீரபாண்டியன்பட்டணம், புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் மேல்நிலை வகுப்பு படித்த வீரபாண்டியன்பட்டணம், புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் வீரமரணம் அடைந்த பழனிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் தலைமை ஆசிரியை ரோஸிராணி பர்னாந்து தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், தலைமை ஆசிரியை ரோஸிராணி பர்னாந்திடம் பேசினோம், ``வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி, அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய விடுதியில் தங்கியிருந்து பள்ளிப்படிப்பை படித்தார்.
a21

விடுதியிலிருந்து தினமும் நடந்துதான் வருவார். இந்தப் பள்ளியில் 1994 முதல் 1998-ம் ஆண்டு வரை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். வகுப்பில் மிகவும் அமைதியாகத்தான் இருப்பார். படிப்பிலும் அவர் கெட்டி. அவர் படித்தபோது நான் அவருக்கு தமிழ் ஆசிரியையாக, தமிழ்ப் பாடம் எடுத்தேன். தமிழில் மனப்பாடப் பாடல்களை மனனம் செய்து முதல் மாணவராக வந்து என்னிடம் ஒப்புவிப்பார். இலக்கணங்களும் அவருக்கு அத்துப்படி. வாக்கியப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இல்லாமல் எழுதுவார்.

ஒருமுறை வகுப்பில் மாணவர்களுக்கான சுயஅறிமுக நிகழ்வில்கூட, `நான் மிலிட்டரியில சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யப் போறேன்’னு பெருமையாச் சொன்னது இன்றும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கு. `எதற்காக மிலிட்டரியில் சேரப்போற பழனி?’ன்னு நான் கேட்டேன். அப்போது நடந்த கார்கில் போரை மேற்கோள் காட்டிப் பேசினார். அவரது நாட்டுப்பற்று எங்களை மெய்சிலிர்க்க வைத்தது.

a22
தற்போது லடாக் எல்லையில் இந்தியா- சீனா ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில், நாட்டுக்காக பழனி தன்னுயிர் நீத்தார் என்பது வருத்தமாகவும், மனவேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனாலும், எமது பள்ளியில் படித்த மாணவர் நாட்டுக்காக உயிர் நீத்தார் என்பது எங்களை மிகவும் பெருமைப்பட வைத்துள்ளது.

அவரது குடும்பத்தினருக்கு எங்களது பள்ளி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக் கொள்கிறோம். அவருக்கு இரங்கற்பா எழுதி சமர்ப்பித்துள்ளேன்” என்றார் கலங்கிய கண்களுடன்.

a23
ராணுவவீரர் பழனியின் வீரமரணம், அவரது சொந்த ஊரில் மட்டுமல்லாமல், அவர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த அடைக்கலாபுரம் மற்றும் வீரபாண்டியன்பட்டணம் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive