விளையாட்டாய்க் கற்போம்..
கற்பதைக் கற்கண்டாய் மாற்றுவோம்..
பாடிக் கற்போம்.. விளையாடிக் கற்போம்..
- இவை தான் அந்த மையத்தின் முழக்கங்கள்.. எந்த மையத்தின் முழக்கங்கள்? சிட்டுக்கள் மையம்..
ஆம், கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் எனும் உறுதியோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுடன் இணைந்து நடத்திய அறிவொளி இயக்கத்தின் தொடர்ச்சியாய், அந்த அனுபவத்தின் விளைபொருளாய்க் கிடைத்த சிந்தனை.. அனைவருக்கும் ஆரம்பக் கல்விக்கான அறிவியல் இயக்கத்தின் பெருங்கனவின் சிறு முயற்சி தான் சிட்டுக்கள் மையம்..
தொடர்கல்வியைப் போல வளர்கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும். எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும் பத்தாண்டுக் கல்வியினை நிச்சயம் படித்தே ஆகணும் என்ற பாடல் பிறந்தது அப்போது தான். 1990களில்.. மிகவும் அக்கறையுடனும் மிகுந்த நிதானத்துடனும் தேசிய அளவில், மாநில அளவில், மாவட்டம், ஒன்றியம் என ஒவ்வொரு கட்டமாக ஆலோசித்து, சிந்தித்து காலகாலத்திற்கும் பேசும் வகையிலான ஒரு முன்னுதாரணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் செயல்படுத்திக் காட்டியது..
*சிட்டுக்கள் யார்..?*
பள்ளிக்கூடம் செல்ல இயலாத குழந்தைகளும் பள்ளிக்கூடம் சென்று இடைநின்ற குழந்தைகளும் தான் பிரதான இலக்கு. பள்ளிக்குத் தொடர்ந்து செல்லும் குழந்தைகளும் விரும்பினால் தாராளமாக வரலாம்.. பாட்டு, கதை, விளையாட்டு.. யாருக்கு தான் பிடிக்காது? சிட்டுகள் சிறகடித்து வந்தன.. மையம் மலர்ந்தது.
*என்ன படிப்பார்கள்?*
ஏற்கனவே இருக்கின்ற பள்ளிக்கூடங்களுக்குப் போட்டி அமைப்பா இந்த மையங்கள்? இல்லை.. இல்லவே இல்லை.
மையத்திற்கு வருகின்ற குழந்தைகள் பள்ளியில் வழங்கப்பட்ட அதே பாடநூல்களைத் தான் படித்தார்கள்.. ஆனால் ஒரு சின்ன வேறுபாடு. வரிசைப்படியாக பாடங்கள் நடத்துவதும் இல்லை. எல்லாப் பாடங்களையும் நடத்துவதும் கிடையாது. எந்தப்பாடம் படிக்க வேண்டும் என்பதை அந்தக் குழந்தை தான் தீர்மானிக்கும். எந்தப் பாடமாக இருந்தாலும் கதை, பாட்டு, விளையாட்டு, குழந்தைகளுக்கான செயல்பாட்டு வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் இருவேறு கருத்திற்கு அங்கு இடமில்லை.
*சிட்டுக்கள் கூடின..*
மையங்கள் பெரும்பாலும் மாலை நேரங்களில் மட்டும் தான். ஏனெனில் வேலைக்குச் சென்ற குழந்தைகள் கூட வீடு திரும்பி விடுவார்கள்.. ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் மட்டும் மையங்கள் இயங்கும். அந்த இரண்டு மணி நேரமும் வருகைப்பதிவு, பாடல்கள், கலந்துரையாடல், கற்பனையைத் தூண்டும் விளையாட்டுகள், கதை நேரம், வீட்டுப்பாடங்களைச் சரிபார்த்தல், உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான நேரம் மற்றும் வீட்டுப்பாடம் கொடுப்பதற்கான நேரம் என ஒவ்வொரு வகுப்பும் திட்டமிடப்பட்டது. எனவே ஒவ்வொரு மாலையும் சிட்டுக்கள் கூடின.
*சிட்டுக்கள் பாடின..*
நன்கு வாசிக்கத் தெரிந்த குழந்தைகள், உதவி தேவைப்படும் குழந்தைகள், கணக்குப் பாடத்தில் பின் தங்கிய குழந்தைகள், நினைவுத்திறன் குறைவான குழந்தைகள் மற்றும் இவைபோன்ற எல்லாப் பிரச்சனைகளும் உள்ள குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கேற்ற வண்ணம் மையச் செயல்பாடுகள் திட்டமிடப்பட்டன.. அதே போல மையத்தின் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டன. முதல் வாரத்தில் குழந்தைகள் என்னென்ன தெரிந்திருக்க வேண்டும். ஐந்தாவது வாரத்தில் அவர்கள் என்ன அடைவை எட்டியிருக்க வேண்டும் என்பதெல்லாம் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் இலக்கு எட்டக்கூடியதாகவே இருந்தது.
*சிட்டுக்கள் மகிழ்ந்தன..*
இலக்குகள் எப்படி எட்டப்பட்டன. படிப்பு என்றால் படிக்கத்தானே செய்ய வேண்டும். படிக்கத்தானே சொல்லித்தர வேண்டும்.. ஏன் கதை, பாட்டு, விளையாட்டு? ஏனென்றால் கதையும் பாட்டும் விளையாட்டும் குழந்தைகளின் ஆர்வத்தை தக்கவைக்க உதவின. எல்லாக் குழந்தைகளின் பங்கேற்பையும் உறுதிப்படுத்தின. குழந்தைகளின் கற்பனைத்திறனையும் படைப்புத்திறனையும் வெளிப்பாட்டுத்திறனையும் வளர்க்க உதவின. இவை வெறும் பொழுதுபோக்கல்ல.. கற்கும் வழிமுறைகள்.. இந்த வழிமுறைகளை சிட்டுக்கள் மிகவும் விரும்பின.. கற்பது சுமையாக அல்லாமல் கற்கண்டாக இனித்தன.. விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை.. அறிவுத்திறமைக்கும் உடல் வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் உதவிடும் வித்தை.. எனவே குழந்தைகள் மகிழ்ச்சியாக பங்கேற்றுக் கற்றனர். இலக்குகள் அதனால் எட்டப்பட்டன.
*மையத்தின் அனுபவமும் கொரானா கால கல்வியும்*
சிட்டுக்கள் மைய அனுபவங்களை நாம் அப்படியே இன்றைய கொரனா காலச் சூழ்நிலையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.. எந்த வேறுபாடுமின்றி எல்லாக் குழந்தைகளும் வீட்டில் தான் இருக்கின்றனர். அன்றுபோல இல்லாமல் வீட்டிலும் சமூகத்திலும் கல்வி குறித்த கவலை உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிறது. எனவே அந்தக் குழந்தைகளை கூட்டம் கூட்டமாக இல்லாமல் சிறுசிறு குழுக்களாக எளிதாக ஒன்றுதிரட்ட முடியும். பெற்றோர் மட்டுமின்றி சமூகத்தின் ஒத்துழைப்பு எளிதாக கிடைக்கும். வீதிக்கொரு மையம், பெரிய குடியிருப்புகளுக்கு ஒரு மையம் என நாம் திட்டமிட்டு நடத்த முடியும்.
அன்றைய மையம், ஆர்வமுள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டே செயல்பட்டது. இன்று அத்தகைய சூழ்நிலை இல்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வல்லுநர்கள் எனப் பலரையும் திறம்பட பயன்படுத்த முடியும்.. ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர், தன்னார்வலர்கள், பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் என ஆயிரக்கணக்கான மையங்களை அவரவர் வீதிகளிலேயே நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிட்டுகள் மையத்தின் அனுபவத்தில் குறிப்பிடத்தக்க மற்ற இரு அம்சங்கள் ஊர்க்கூட்டம், கிராம வரைபடம்.. இந்த அணுகுமுறையில் நாம் அந்த குறிப்பிட்ட பகுதியில் கொரானா தாக்கம், பாதிக்கப்பட்ட வீடுகள், தொற்று ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றையும் கொண்டு செல்ல முடியும்.. அதுவும் கல்வியின் அங்கம் தான்.. கியூபா போன்ற நாடுகளில் பேரிடர் காலப் பயிற்சி, பங்களிப்பு என்பது குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ஒன்று.. அதனால் தான் இந்த கொரனாத் தாக்கத்தின் போது கூட தங்கள் நாட்டைப் பாதுகாப்பதோடு மற்ற பல நாடுகளுக்கும் கியூப மருத்துவர்கள் துணிந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி நாம் மையத்திற்கு வருவோம்.. குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப, படிக்கும் வகுப்புகளுக்கேற்ப, வயதிற்கேற்ப நாம் மையங்களை, மையத்தில் குழுக்களை அமைக்கலாம். சிட்டுக்கள் மையம் அப்படித்தான் செயல்பட்டது.
*என்ன பாடம் நடத்துவது?*
மையத்தின் அதே அணுகுமுறை பயனுள்ளதாக இருக்கும். முதல் சில வாரங்கள் பாட்டும் கதையும் விளையாட்டுமாகத்தான் நடத்த வேண்டும்.. ஏனென்றால் இப்போதைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. உலகச் சுகாதாரப் பேரிடர் காலம். ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையின்மை, வருவாயின்மை அவற்றின் விளைவால் குடும்பத்தில் அமைதியின்மை, எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மை எல்லாம் சூழ்ந்து பல குடும்பங்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது.. இதற்கிடையில் தான் அத்தகைய குடும்பமும் குழந்தைகளின் கல்வி குறித்தும் கவலையடைகிறது..
எனவே பாடநூலை வாழ்க்கையாக மாற்றாமல் வாழ்க்கையையே பாடநூலாக்க வேண்டிய காலம் இது. குழந்தைகளுக்கு கொரனா குறித்த விழிப்புணர்வை பாடல்கள், அறிவியல் கதைகள், பத்திரிகை செய்திகள், அரசு வெளியிடும் விழிப்புணர்வுக் காணொளிகள், யூனிசெப் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான கையேடுகள் போன்றவற்றையே சில வாரங்களுக்குப் பின்பற்றலாம்..
காகிதக் கலைப் பயிற்சிகள், எளிய அறிவியல் பரிசோதனைகள், தனிநபர் இடைவெளியுடன் கூடிய விளையாட்டுகள் போன்றவற்றைக் கற்பிக்கலாம்..
வாழ்க்கையோடு தொடர்புடைய செயல்பாடுகள் கொடுப்பது.. உதாரணத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்ட கற்பது கற்கண்டே என்னும் நூலில் விளம்பரங்களின் தாக்கம் என்றொரு தலைப்பு உண்டு. செயல்பாடு என்னவென்றால் குழந்தைகள் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை (இப்போது யூடியூப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்) தொடர்ந்து ஒரு வாரத்திற்கு கவனித்து வருதல், அவற்றில் எத்தனை விளம்பரங்கள் உணவு, ஒப்பனைப்பொருட்கள், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கட்டுமானப்பொருட்கள், வீட்டுத் தேவைப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், வாகனங்கள், மருத்துவம், குடிநீர் சேமிப்பு மற்றும் அரசு நலத்துறை விளம்பரங்கள் வருகின்றன என வகைப்படுத்துதல்.. இது போல அவர்கள் வாழும் சூழலில் உள்ள மரங்கள், மரங்களைச் சார்ந்துள்ள உயிரினங்கள், பறவை இனங்கள், மண்ணின் தன்மை, நீர்வளம் எனப் பல செயல்பாடுகளை அளிக்க முடியும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன..
மேலும் குழந்தைகளின் கற்றலுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அப்போது அரும்பு அறிவியல், அறிவதில் ஆனந்தம், கணக்கும் இனிக்கும், அறிவியல் ஆனந்தம், அறிவதின் ஆரம்பம், கற்பனையும் கைத்திறனும், மாயமில்லை மந்திரமில்லை, விளையாட்டுப் போக்கினிலே எனப் பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. இன்றைய சூழலில் அதுபோல இன்னும் பல கற்றலுக்கு உதவும் வளநூல்கள் ஏராளம் கிடைக்க வாய்ப்புள்ளது.. அரசின் வெளியீடுகள், அரசின் பாடநூல்களையும் அடுத்தடுத்த வாரங்களில் மெதுமெதுவாகக் கற்பிக்கத் துவங்கலாம்..
மையத்தின் எந்தவொரு கட்டத்திலும் பாடம், பரிட்சை, தேர்வு, அறிக்கை என அச்சமூட்டும் நிர்பந்தங்கள் இல்லாதவாறு குழந்தைகளைக் கல்வியோடும் கற்றலோடும் தொடர்பில் வைத்திருக்க வேண்டும். செயல்பாடுகள் திட்டமிடுவதும் கொடுப்பதும் மதிப்பீட்டை மையப்படுத்தாமல் செயல்படுத்தப்பட வேண்டும்..
கல்விச் செயல்பாடுகள் பள்ளியோடு மட்டும் முடங்கக் கூடியதல்ல.. கல்வி என்பது வாழ்வு முழுவதும் தொடரக்கூடியது. கற்றல் எந்த வயதிலும் நிகழும்.. பள்ளியிலும் பள்ளிக்கு வெளியிலும் சாத்தியம் என்ற புரிதலோடு முன்னெடுப்பது அவசியம்..
தற்போது பரவலாக விவாதிக்கப்படும் ஆன்லைன் கல்வி ஆசிரியருக்கோ அல்லது நேரடியான கற்றலுக்கோ எந்த வகையிலும் எந்த நிலையிலும் சமனாகாது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் தங்களது கல்வியாண்டைத் துவங்கிவிட்டனர். அதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவே வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கவனித்தாலும் வழக்கமான பள்ளிச் சீருடை, காலணி, இடுப்பு பட்டை, கழுத்துப்பட்டை முதற்கொண்டு அணிந்து வகுப்பில் கலந்துகொள்ள குழந்தைகள் கட்டாயப் படுத்தப் படுகிறார்கள்.. அது கற்றலை நிகழ்த்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கொடுக்கமுடியாது. ஆனால் குழந்தைகளை ஒரே இடத்தில் உட்காரவைத்துச் சித்திரவதைப்படுத்தும், கண்களுக்கும் உடல்நலத்தும் பாதிப்பை ஏற்படுத்தும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதை நிச்சயம் உறுதிபடக் கூறமுடியும்..
சிட்டுக்கள் மையம் மட்டுமல்ல, துளிர் இல்லங்கள், இரவுப்பள்ளிகள், மக்கள் பள்ளி இயக்கம் என இதுபோன்ற பல்வேறு அனுபவங்களை உடையது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். அந்த அனுபவங்கள் ஒருபோதும் கசப்பானவையாக அமைந்தது இல்லை.. எனவே தமிழகம் முழுவதும் உள்ள கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர் அமைப்புகள், மாணவர், இளைஞர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் அரசை வலியுறுத்தி, கொரானா தாக்கம் குறைந்து, பள்ளிகள் திறக்கும் வரையிலும் இதுபோன்ற ஒரு திட்டமிடலுடன் கூடிய ஒரு ஏற்பாட்டை, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியில் பங்காற்றக்கூடிய அனைவரையும் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டும் என்கிற அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்..
அதன் மூலம் கொரனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம்.. குழந்தைகளின் கல்வியையும் தொடரலாம்..
-
தேனி சுந்தர்
மாநில செயலாளர்
*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...